Tamil News
Home செய்திகள் இந்தோனேசியாவில் பெண் அகதிகளாக இருப்பதில் உள்ள சவால்கள் 

இந்தோனேசியாவில் பெண் அகதிகளாக இருப்பதில் உள்ள சவால்கள் 

போர் மேகம் சூழ்ந்த தாய்நாட்டை விட இந்தோனேசியா ஒரு ஆறுதலான தற்காலிக தங்குமிடமாக இருக்கும் என பெண் அகதிகள் நம்பியிருந்தனர். ஆனால், பாலின அடிப்படையிலான வன்முறை அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு தடையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தாய்நாடான சோமாலியாவில் இருந்து வெளியேறியவர் நிமோ. தற்போது இந்தோனேசியாவில் உள்ள அவர், Sisterhood எனும் சமூக மையத்தின் இணை நிறுவனராக பெண் அகதிகளுக்கு உதவும் செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கிறார்.

சோமாலியாவில் வீட்டு வன்முறை என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கம் எனக்கூறியுள்ள நிமோ, ஒரு தனிப்பெண்ணாக சோமாலியாவில் தொடர்ந்து அச்சுறுத்தல் சந்தித்து வந்தாகக் கூறுகிறார். கடும்போக்குவாத அமைப்புகளால் தொடர்ந்து தாக்குதல்களை சந்திக்கும் ஒரு நாடாக உள்ள சோமாலியாவிலிருந்து பலர் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.

அந்த வகையில், இந்தோனேசியாவில் தஞ்சமடைந்துமள்ள நிமோ, அங்கு ஆப்கானிஸ்தான், ஈராக், மியான்மர், சூடான் ஆகிய நாட்டு அகதிகளுடன் நட்புக் கொண்டிருக்கிறார்.

அகதிகள் வேறொரு பாதுகாப்பான நாட்டில் மீள்குடியேற்றம் செய்யப்படும் வரை தற்காலிகமாக தங்குவதற்கான இடமாக இந்தோனேசியா இருந்து வருகிறது. ஆனால், அகதிகள் எப்போது உறுதியாக மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. சராசரியாக இவ்வாறான நிலையில் ஒரு அகதி இந்தோனேசியாவில் 8-10 ஆண்டுகள் தங்க வேண்டி உள்ளது. இன்றைய நிலையில், இந்தோனேசியாவிலிருந்து வெற்றிக்கரமாக வேறொரு நாட்டில் வெறும் 1 சதவீதத்துக்கும் குறைவான அகதிகளே மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறான சூழலில் இந்தோனேசியாவில் பெண் அகதிகளின் பிரச்சனையாக இருப்பது அதிகரித்து வரும் பாலின அடிப்படையிலான வன்முறையாகும். இதை பெரும்பாலும் சக அகதிகளே நிகழ்த்துவதாக கூறப்படுகிறது. இவ்வாறான வன்முறை தங்குமிடங்களில், திருமண/காதல் உறவுகளில், நட்புறவுகளில் நடப்பதாக சொல்லப்படுகிறது.

பெண் அகதிகளின் பாதுகாப்பு, அவர்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறையை கையாள்வது தொடர்பான எந்த அம்சமும் இந்தோனேசியாவின் பாலியல் வன்முறை ஒழிப்பு சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. இதனால் வன்முறைக்கு உள்ளாகும் பெண் அகதிகள் தொடர்பான சிக்கல்களை கையாள்வது மிகுந்த சிக்கலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.  “இவ்வாறான வன்முறைகள் குறித்து அறிவது எனக்கு வழக்கமாகிவிட்டது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பல பெண்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு பிரச்சனையும் வித்தியாசமானது,” எனக் கூறியுள்ளார் நிமோ.

கடந்த நான்கு ஆண்டுகளில், இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் வன்முறை பிரச்சினைகளுக்கான ஐ.நா. அகதிகள் முகமையின் உதவி எண்ணை தொடர்பு கொள்ள முயன்றிருப்பதாகவும் பெரும்பாலான சமயங்களில் அந்த அழைப்பை யாரும் எடுத்ததில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் அகதிகள் கூறியுள்ளனர்.  அழைப்பு எடுக்கப்பட்டால், ஆண் மொழிப்பெயர்ப்பாளர்கள் தான் பேசுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள், வன்முறை குறித்த விவரங்களை ஆணிடம் சொல்வது கடினமான ஒன்றாகும். இவ்வாறான பிரச்சினைகளை கையாள்வதற்கு சரியான அமைப்புமுறை வேண்டும் என பெண் அகதியான நிமோ வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version