Home ஆய்வுகள் 2022 இல் இலங்கை எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்ன? – கலாநிதி அகிலன் கதிர்காமர்

2022 இல் இலங்கை எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்ன? – கலாநிதி அகிலன் கதிர்காமர்

இலங்கை எதிர்கொள்ளப் போகும் சவால்கள்

கலாநிதி அகிலன் கதிர்காமர்

2022 இல் இலங்கை எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்ன: புதிய ஆண்டு ஒன்றுக்குள் பிரவேசித்திருக்கும் நிலையில், கடந்து வந்த ஒரு வருட காலம் எவ்வாறானதாக இருந்தது என்பதையிட்டும், பிறந்துள்ள புதிய வருடத்தில் அரசாங்கம் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்ன என்பதையிட்டும் யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் அவர்கள் லண்டன் உயிரோடை தமிழ் வானொலியின் தாயகக் களம் நிகழ்வுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த கருத்துக்களின் முக்கியமான பகுதிகள்.

கேள்வி:
இலங்கையைப் பொறுத்தவரையில், 2021 என்பது அரசுக்கு எதிரான போராட்டங்கள் நிறைந்த ஒரு ஆண்டாகவே இருந்துள்ளது. எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தியதைப் பார்த்தோம். இதற்கு காரணம் என்ன?

பதில்:
இந்தப் போராட்டங்களைப் பொறுத்தவரையில், பொருளாதாரம்தான் இதற்குப் பிரதான காரணமாக இருந்துள்ளது. விலையேற்றம், பொருட்களுக்கான தட்டுப்பாடு என்பன மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை அதிகரிக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் தீவிரமடையும் நிலை காணப்பட்டது.

இது எவ்வாறு ஆரம்பமானது எனப் பார்த்தால், கடந்த வருட முற்பகுதியில் அரசாங்கம் கொத்தலாவல தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கான சட்டமூலத்தை முன்னெடுத்த போது ஆசிரியர் சங்கங்கள் அதற்கு எதிராகவும், ஆசிரியர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்தும்  போராட்டங்களை ஆரம்பித்தன.

கல்வி இராணுவயமயப்படுவதற்கு எதிராகவும் – ஆசிரியர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு ஆதரவாகவும் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினார்கள். இதன்மூலம் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் முதன்முறையாக பாரிய ஜனநாயக இடைவெளி ஒன்று உருவாகியது.

அதாவது போராட்டம் நொருக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியிலும் பெருமளவு பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் ஒரு நிலைமை உருவாகியது. இதனை முக்கியமான ஒரு மாற்றமாகத்தான் கருத வேண்டும்.

கேள்வி:
கோவிட் கால சட்டங்கள் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப் பட்டதாக எதிரணியினரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் படுகின்றது. இது எந்தளவுக்கு உண்மை?

பதில்:
ஆம். இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அவை ஆரம்பித்த போது அரசாங்கம் கொரோனா கால தனிமைப்படுத்தல் சட்டங்களை பயன்படுத்தி போராட்டங்களை முடக்க முற்பட்டது. ஆனால், அரசாங்கம் இவ்வாறு முயற்சித்த போது அந்தப் போராட்டங்கள் இன்னும் வீறுகொண்டெழுந்த நிலைமை காணப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடு, அதற்கான தடுப்பூசித் திட்டம் என்பவற்றையும் அரசாங்கம் இராணுவமயப்படுத்தியிருந்தது. அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மூலமாக அரசாங்கத்துக்குச் சார்பாக இருந்தவர்கள் கூட அரசாங்கத்தை விமர்சிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது. இவற்றுடன் உருவான பொருளாதார நெருக்கடி – டொலர் நெருக்கடி எனக் கூறுவார்கள் – இவை அரசுக்கு ஆதரவாக இருந்த தென்பகுதியில் கூட அரசுக்கு எதிரான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கேள்வி:
இந்தப் பொருளாதார நெருக்கடிக்குள் – டொலர் பிரச்சினைக்குள் அரசாங்கம் சிக்கிக்கொள்ள என்ன காரணம்?

பதில்:
இதற்கு நீண்டகால வரலாறு உள்ளது. நான்கு தசாப்த காலத்துக்கு முன்னர் திறந்த பொருளாதாரம், வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதி, கடன்களைப் பெறுவது என்ற கொள்கைகளும்தான் இதற்கு நீண்டகாலக் காரணமாக இருந்தது. இந்தப் பிரச்சினை உருவாகும் போது அரசாங்கங்கள் இதற்கான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இது முதலாவது காரணம்.

இரண்டாவதாக இதற்குச் சர்வதேச காரணங்களும் உள்ளன. கொரோனா நெருக்கடியுடன் பல துறைகள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுற்றுலாதுறை, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களின் வேலை இழப்பு போன்றனவும் உள்ளன. இவை அனைத்தும் இலங்கையின் பொருளாதாரத்தில் உருவாகிக்கொண்டிருந்த நெருக்கடியை மேலும் வேகப்படுத்தி, ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.

இதற்கான அடிப்படைக் காரணம். கடந்த வருடத்தில் பார்க்கும் போது எமது இறக்குமதி, ஏற்றுமதிகளைவிட இரண்டு மடங்காக உள்ளது. இந்த இடைவெளி கடந்த வருடங்களில் சுற்றுலாத்துறை ஊடாக அல்லது வெளிநாடுகளில் பணிபுரியும் எம்மவர்களினால் அனுப்பப்படும் அந்நியச் செலாவணி மூலமாகவும், கடன்கள் மூலமாகவும் சீர்செய்யப்பட்டது. கொரோனா நெருக்கடியுடன், சுற்றுலாத்துறை வருமானம், வெளிநாடுகளில் தொழில் புரிவோரிடமிருந்து கிடைக்கும் வருமானம் என்பன இழக்கப்படும் போது, இரண்டு பிரச்சினைகள் ஏற்பட்டன. ஒன்று பழைய கடன்களை கட்டமுடியாத நிலை, இரண்டு இறக்குமதிகளுக்கு போதிய அந்நியச் செலாவணி இல்லாத நிலைதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகவுள்ளது. கடன்களை அமெரிக்க டொலரில்தான் கட்ட வேண்டும். ஆனால், அதற்குத் தேவையான நிதி நாட்டில் இல்லை. இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பதையிட்டு அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.

இந்த நிலையில், இலங்கையில் முதலீடு செய்வதையும் பெரும்பாலான வெளிநாடுகள் குறைத்துக் கொண்டுள்ளன. பொருளாதாரம் சுருங்கிப்போகும் நிலையில் வெளிநாடுகளும் முதலீடு செய்ய அஞ்சும் நிலை உள்ளது. இது பொருளாதார நிலைமைகளை மேலும் பாதிக்கின்றது.

கேள்வி:
தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் – இலங்கை – இந்திய உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுததப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகள் சில இணைந்து செயற்படுகின்றன. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, அவர்கள் முழுமையாக ஒற்றையாட்சி அரசாங்கத்தை உருவாக்குவது, ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிப்பது என்பவற்றிலும், அதிகாரப்பரவலாக்கல் இனித் தேவையில்லை என்பது போன்ற நிலையில்தான் அவர்களுடைய செயற்பாடுகள் இருந்தன.

சிறுபான்மையினரின் அரசியலைப் பலிக்காடாவாக்கி, தமது அரசியலை முன்னெடுப்பதுதான் அரசின் நிலைப்பாடாக இருந்தது. அதிகாரப் பரவலாக்கலை அரசாங்கம் நிராகரித்துச் செல்லும் நிலையில், குறைந்த பட்சம் 13 ஆவது திருத்தத்தையாவது நடைமுறைப்படுத்துங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்துங்கள் என்பதை வலியுறுத்த வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் இந்த அரசாங்கத்தின் காலத்தில் முற்போக்கான அரசியல் தீர்வு ஒன்றை எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் ஏற்கனவே உள்ள 13ஐ நடைமுறைப்படுத்துமாறு கோர வேண்டிய தேவை உருவாகியிருக்கின்றது. இது வரவேற்கப்பட வேண்டியுள்ளது.

கேள்வி:
புதிய வருடத்தில் இலங்கை எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன?

பதில்:
இந்தப் பொருளாதார நெருக்கடிதான் புதிய வருடத்தில் எதிர்கொள்ளப்போகும் பிரதான பிரச்சினையாக இருக்கப்போகின்றது. ஒரு பஞ்சம் போன்ற நிலை உருவாகலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதனை அரசாங்கம் எப்படிச் சமாளிக்கப்போகின்றது? இதனை சமாளிக்க சர்வதேச உதவிகள் தேவை. தற்போதைய பூகோள அரசியல் அதிகளவு தாக்கத்தைச் செலுத்தப் போகின்றது. இந்த நிலையில் பெருமளவுக்குக் கொள்கை மாற்றம் அவசியமாகும். வெளிநாடுகள் தமது நலன்களை அப்படையாகக் கொண்டுதான் உதவி செய்ய முன்வருவார்கள். இது மிகவும் நெருக்கடியான சவால்தான். இதனை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகின்றது என்பதுதான் இப்போதுள்ள பிரதான கேள்வி!

Exit mobile version