Home ஆய்வுகள் நாற்காலிகளை சூடேற்றும் அரசியல்வாதிகள்-  துரைசாமி நடராஜா

நாற்காலிகளை சூடேற்றும் அரசியல்வாதிகள்-  துரைசாமி நடராஜா

மலையகத் தொழிலாளர்களின் வீரப் போராட்டம்” – தளம்

இலங்கையில்  இளைஞர்களின் எழுச்சி தேசிய அரசியலில் மாற்றத்திற்கு உந்துசக்தியாகியுள்ளது. ஊழலற்றதும் ஒழுக்கம் மிக்கதுமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதே அவர்களின் ஆதங்கமாகவுள்ளது. இதனிடையே பல குறுக்கீடுகள் ஏற்படுகின்றபோதும் இளைஞர்களின் வைராக்கியம் மிக்க இலக்கு நோக்கிய நகர்வு பாராட்டத்தக்கதாகவுள்ளது.

இந்நிலைமையானது மலையக அரசியலிலும் எதிரொலிக்க வேண்டும் அப்போதுதான் காலம் காலமாக மலையக மக்களை அடகு வைத்து சுயலாப அரசியலை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள் தன்னை மாற்றிக் கொண்டு சமூகநலன் சார்ந்த அரசியலை முன்னெடுக்கும் கலாசாரம் மேலோங்கும்.இந்த நிலையை ஏற்படுத்துவதில் இளைஞர்கள் உறுதியுடனும் துணிவுடனும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மலையக சமூகத்தின் எழுச்சி மற்றும் தேசிய நீரோட்ட ஒன்றிணைவு என்பன கானல் நீராகிவிடும்.

இளைஞர் புரட்சி என்பது பல நாடுகளில் பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளது. இத்தகைய புரட்சிகள் வெற்றி பெற்ற அல்லது தோல்வியடைந்த வரலாறுகளும் அதிகமாகவுள்ளன. டியூனீசியாவில் இடம்பெற்ற அராஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக அணி திரண்டு ஆர்ப்பாட்டங்களின் ஊடாக ஜனநாயகத்தை மலரச் செய்தமை நினைவு கூறத்தக்கதாகும்.

மேலும் இதனுடைய தாக்கத்தினால் மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அரபு வசந்தம் ஏற்படுத்தப்பட்டது.இதிலும் சமூக வலைதளங்களின் வகிபாகம் மிகவும் அதிகமாகும்.மக்களை அணிதிரட்டுவதிலும், போராட்டங்களை ஒழுங்குபடுத்துவதிலும் சமூக வலைத்தளங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றின.ஊழல் மற்றும் பொருளாதார சீர்கேடு போன்ற பலவற்றுக்கும் எதிராக போராட்டங்கள் இடம்பெற்றன.

இதனடிப்படையில் லிபியா, எகிப்து, சிரியா, யெமன், பஹ்ரைன்  உள்ளிட்ட பல நாடுகளிலும் பல புரட்சிகள் இடம்பெற்றன.பின்னர் இவை ஜோர்தான், சூடான், மொராக்கோ,ஈரான், குவைத் போன்ற பல நாடுகளுக்கும் விரிவாகியிருந்தமையும் நீங்கள் அறிந்ததேயாகும்.பிரஜைகளின் இயக்கங்கள் போராட்டத்தில் பங்குகொண்ட நிலையில் உயிரிழப்புகளும் இதனால் ஏற்பட்டன.இளைஞர்களின் நியாயமான போராட்டங்களை முடக்கும் நோக்கில் அந்தந்த நாட்டு அரசுகளும் தன்னாலான உச்சகட்ட பலத்தை பிரயோகித்தன.எனினும் ஜனநாயக மலர்வு உள்ளிட்டசாதக விளைவுகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வகையில் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற இளைஞர் போராட்டமும் அரபு வசந்தத்துடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டு வருவதனை அவதானிகக முடிந்தது.சமூக வலைத்தளங்களின் பிரயோகம், செல்வாக்கு என்பன இதில் பெரிதும் அரபு வசந்தத்துடன் இணைத்து பேசப்பட்டது.

ஏனைய நாடுகளில் போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் அண்மையில் இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் இடையே அடிப்படையில் ஒரு வேறுபாடு இருக்கின்றது.பல நாடுகளில் போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் வன்முறை, துஷ்பிரயோகம் என்பவற்றில்  ஈடுபட்டார்கள்.எனினும் இலங்கையில் போராட்டங்களில் ஈடுபட்ட  இளைஞர்கள் அகிம்சையையே ஆயுதமாகக் கொண்டு செயற்படவேண்டும் என்பதில் தெளிவாகவே இருந்தனர்.

இது ஒரு சிறப்பம்சமாகும்.இலங்கை மூன்று தடவைகள் ஜேவிபி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இளைஞர் புரட்சியை சந்தித்த ஒரு நாடாகவுள்ளது. பேரினவாதிகளினால் உரிமைகள் மறுக்கப்பட்டதால் வடபகுதி இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்.

இதன் தாக்கம் பல துறைகளிலும் எதிரொலித்த நிலையில் இதனால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் நீங்காதுள்ளன.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிவேண்டி இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்னும் கண்ணீரில் மிதந்துகொண்டிருக்கின்றன.தேசிய பிரச்சினைக்கான தீர்வு  மனிதாபிமானமற்ற அரசியல்வாதிகளால்  இன்னும் இழுத்தடிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

நிலைமை இவ்வாறிக்கையில்  அண்மைய “அரகலய ” போராட்டத்திற்கு இளைஞர்களின் முன்வருகை, செயலாற்றுகை, அர்ப்பணிப்பு என்பன பலராலும் சிலாகித்துப் பேசப்படுகின்றது.

நவகாலனித்துவம்

நாட்டின் தேசிய அரசியலில் இளைஞர் புரட்சி ஆதிக்கம் செலுத்திய  நிலையில் இதன் தாக்கம் ஜனநாயக ரீதியாக மலையகத்திலும் எதிரொலிக்க வேண்டிய ஒரு தேவைப்பாடு காணப்படுகின்றது.இந்நாட்டில் மலையக மக்களின் இருநூறு வருடகால வாழ்வு மிகவும் கசப்பானதாகும் .நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னராயினும் சரி அல்லது அதன் பின்னராயினும் சரி மலையக மக்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட வரலாறுகளுக்கே சொந்தமாகவுள்ளனர்.

சுதந்திரம் மலையக மக்கள் உள்ளிட்ட இலங்கை மக்களின் வாழ்வில் “அபிவிருத்தி சார்ந்த புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தப் போகின்றது” என்ற எதிர்பார்ப்பு பரவலாக எல்லோரிடமும் காணப்பட்டது.ஆனால் இது மறுதலிக்கப்பட்ட நிலையில் காலனித்துவ வரலாற்றினைக் காட்டிலும் பிற்கால வரலாறு நவ காலனித்துவத்திற்கு இட்டுச் செல்வதாகவே அமைந்தது.

பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றவர்களும் இது குறித்த தனது ஆதங்கத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளனர்.இந்நாட்டில் மலையக மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

 1948 இல் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் ஐக்கிய தேசியக் கட்சியினால்  பறிக்கப்பட்ட நிலையில் இந்திய வம்சாவளி சமூகத்தினர் அரசியலில் நீண்ட காலமாக அநாதைகளாகவும், சீந்துவாரின்றியும் இருந்தனர்.இதனால் அரசின் தேசிய வேலைத்திட்டங்கள் மலையகத்தை உரியவாறு வந்தடையாத நிலையில் அபிவிருத்தியும் தடைப்பட்டிருந்தது.

எனினும் சுமார் நாற்பது வருடங்களின் பின்னர் பறிக்கப்பட்ட பிரசாவுரிமையையும் வாக்குரிமையையும் மீளவும் மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுத்து ஐக்கிய தேசியக் கட்சி தனது பாவத்துக்கு  பிராயச்சித்தம் தேடிக் கொண்டதைத் தொடர்ந்து இம்மக்களின வாழ்வில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டன.

இம்மக்களின.அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரித்ததோடு அதனூடாக பல்வேறு சாதக விளைவுகளையும் மக்கள் பெற்றுக் கொண்டனர்.எனினும் அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஊடாக எதிர்பார்த்த சாதக விளைவுகள் மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்றும் “நாற்காலிகளை சூடேற்றும்” சில அரசியல்வாதிகள் மலையக மக்களை பலிக்கடாவாக்கி வயிறு வளர்ப்பதாகவும் குற்றச்சாட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டினை இல்லை என்று நாம் ஒரேயடியாக மறுத்துவிட முடியாது.ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் இணைந்திருந்தால்தான் மக்களின் அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும் என்ற கோதாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டது.

இ.தொ.கா.தொடக்கிவைத்த இந்த கலாசாரத்தை பின்வந்த மலையகக் கட்சிகளும் பின்பற்றுவதில் ஆர்வம் செலுத்தின.எனினும் அரசாங்கத்துடனான இந்த இணைவு அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு பந்தாவுடன் உலாவருவதனை மையப்படுத்திய சுயநலவாத செயற்பாடுகளுக்கே அதிகமாக வலுசேர்த்ததாக மக்கள் பேசிக் கொண்டனர்.

அரசாங்கத்துடன் இணைந்திருந்த நிலையில், எவ்வளவோ உதவிகளை மலையக மக்களுக்காக பெற்றுக் கொடுத்திருக்க வேண்டிய நிலையில் இது சாத்தியப்படாமல் போனது ஒரு துரதிர்ஷ்டமேயாகும்.மலையக அரசியல்வாதிகள் அனைவரும்  “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே” என்றும் இவர்களால் சமூக மழுங்கடிப்பே அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கருத்துக்கள் இருந்து வருகின்றன.என்றபோதும் சமூக போக்குடைய விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரும் இல்லாமலில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மாற்றத்திற்கான வித்து

மலையக சமூகத்தினரின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அதிகமுள்ள நிலையில் இவற்றை தீர்த்து வைப்பதில் அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஆளுமை மிகவும் அவசியமானதாகும்.இந்த ஆளுமையை மலையக அரசியல்வாதிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் எல்லாம் தெரியும் என்ற பாணியில் சில மலையக அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக பலரும் விசனப்பட்டுக் கொள்கின்றனர்.இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் இன்று”துண்டைக் காணோம். துணியைக் காணோம்” என்று ஓட்டமெடுத்திருக்கின்றார்கள். நாடும் இவர்களால் நாற்றமெடுத்திருக்கின்றது.

எனவே இத்தகைய போக்கினைக் கொண்ட அரசியல்வாதிகள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கருத்துப் பகிர்வு, கலந்துரையாடல் என்பவற்றினூடாக சமூக மேம்பாட்டுக்கு வழிசமைக்க வேண்டும்.மேலும் சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் வகிபாகம் அதிகமாகும்.எனவே மலையக இளைஞர்களை நேசிக்கின்ற, அவர்களின் கருத்துக்களை உள்வாங்குகின்ற ஒரு கலாசாரம் மலையகத்தில் கட்டியெழுப்பப்படுதல் வேண்டும்.இளைஞர்களை தேர்தல் காலத்தில் பயன்படுத்தி விட்டு பின்னர் கருவேப்பிலை போல் தூக்கியெறிகின்ற நிலைமை மாற்றம் பெற வேண்டும்.

நாட்டில் உள்ள இளைஞர்கள் அரசியலில் புரட்சியை ஏற்படுத்தி ஜனநாயக உறுதிப்பாட்டிற்காக போராடிவந்தனர்.இது மலையக இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகும்..அரசியலிலோ அல்லது வேறெந்த விடயங்களிலோ இவர்கள் பார்வையாளராக மட்டுமே இருந்து விடாது பங்காளராவும் மாற்றம் பெறுதல் வேண்டும்.ஒரு அழுத்த சக்தியாகவிருந்து அரசியல்வாதிகளை வழிநடத்த வேண்டும்.” படித்தவர்கள் அரசியலுக்கு செல்லாவிட்டால் முட்டாள்கள் நம்மை ஆள நேரிடும்” என்பதை ஒரு போதும் மறந்து விடக்கூடாது.

Exit mobile version