தடத்திற்கு தடை தரலாமா? – முனைவர் ஆ. குழந்தை

இங்கிலாந்தில் உள்ள தீவிரவாதச் சட்டம்(2000) பிரிவு 2(1, 2)இன் கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்தை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்த்து, தடை செய்திருக்கிறது. இந்த தடையை நீக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாக திருமிகு மாயா இலெசுடர், திருமிகு மால்கம் பிர்டிலிங், திருமிகு சேக்கப் ரொபினோலிட்சு ஆகிய சட்டத்தரணிகள் வாதாடினர்(1,2பத்திகள்). அதன் விளைவாக நடுவர் மன்றம் தந்த தீர்ப்பு அறிக்கையில் மூன்று பகுதிகள் உள்ளதாக நான் பார்க்கின்றேன். அந்த மூன்று பகுதிகளை விளக்கிவிட்டு, நமது கடமைகளை ஆராய்வோம்.

சட்டமும் தகுதியும்

தீவிரவாதச் சட்டம்(2000) பிரிவு 2(1) தீவிரவாதத்தை விளக்குகிறது. பிரிவு2(2) பயமுறுத்தும் செயல்கள், தாய்நாட்டையும், உலக நாடுகளையும் பாதிக்கின்ற அல்லது பொது மக்களை அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை திசை திருப்புகின்ற அரசியல், சமயம், இனம், கருத்தியல் ஆகியவை சார்ந்த மாற்றங்களை உருவாக்குவது தீவிரவாதமாகும் என்று கூறுகிறது. பிரிவு 1(2) மிகவும் மோசமான வன்முறையும், மனிதனுக்கு, சொத்துக்கு, பிற மனிதர்களின் வாழ்வுக்கு, பாதுகாப்புக்கு அல்லது உடல்நலத்துக்கு ஆபத்து தரும் வகையில் உள்ள செயற்பட்டையும் தீவிரவாத செயல்களாக கருதுகிறது.

தீ கருவிகள், வெடிமருந்துகள் போன்ற அச்சம் தரும் பொருட்கள் அல்லது செயல்கள், அரசை பாதிக்கும் செயல்கள் போன்றவை தீவிரவாத செயல்களாகும் என்று பிரிவு 1(3) கூறுகின்றது. இந்த தீவிரவாத செயல்கள் இங்கிலாந்து நாட்டிற்குள்ளும் அதற்கு வெளியேயும் நடந்தால், அந்த அமைப்புகள் மீது வழக்குத் தொடுத்து, தடைசெய்ய அந்நாட்டிற்கு உரிமை உள்ளது.

இந்த சொத்து, மனிதர்கள் உலகில் எவ்விடத்தில் இருந்தாலும், பாதிப்பை ஏற்படுத்திய அமைப்புகளை தடைசெய்ய உரிமை உள்ளது. பொதுமக்கள் என்றால் இங்கிலாந்திற்குள்ளும் வெளியிலும் வாழும் மக்களைக் குறிக்கும். அரசு என்பது தாய்நாட்டு அரசு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து அரசுகளையும் குறிக்கும். தீவிரவாதத்தை வெளிப்படுத்தும் செயல்கள் மட்டுமல்ல தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு பயன் தரும் செயல்களையும் தீவிரவாத செயல்களாக கருத முடியும் என்று பிரிவு 1(5) கூறுகிறது.

இந்த தீவிரவாத சட்டத்தின்கீழ் இயக்கங்களை தடை செய்யவும், தடையை நீக்கவும் இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் உள்ளது என்று பிரிவு 3(2) கூறுகிறது. அரசின் செயலர் சாட்சி அறிக்கைகளை நன்கு அராய்ந்து, தடை செய்யப்பட வேண்டிய அமைப்பின் இயல்பு, நோக்கம், செயல்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, அவை இங்கிலாந்து அரசுக்கு ஆபத்து தருமா? அல்லது காமன்வெல்த் நாடுகளுக்கு ஆபத்து வருமா?

தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் உலக நாடுகளின் அமைப்பு உறுப்பினர்களுக்கு ஆபத்து வருமா? தடைசெய்யப்படவேண்டிய அமைப்பு தனது நாட்டில் இருக்கிறதா? என்று ஆராய்ந்து, தேவையான, தெளிவான தரவுகள் இருந்தால் அரசின் செயலர் தடை செய்யலாம்(3-5 பத்திகள்). ஓர் அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறதா? இந்த அமைப்பு உள்துறை அமைச்சகத்திற்கும் மேல்முறையீட்டு நடுவர் மன்றத்திற்கும் எதிராக உள்ளதா? என்று ஆராய்ந்து பார்த்து செயல்பட வேண்டும்.

தேவையில்லாமல் ஓர் அமைப்பை தடை செய்யக் கூடாது என்று பிரபு ஆல்டன் வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டி விடுதலைப்புலிகள் மீது போடப்பட்ட தடையை நீக்க மேல்முறையீடு செய்ய வழி உள்ளதை பயன்படுத்தி மேல்முறையீடு செய்தனர்(6 -8 பத்திகள்).

அரசின் செயலர் கார்தோனோ கோட்பாடு எதிர் பணிகளின் ஆணையம்(1943) வழக்கு போன்ற பல்வேறு வழக்கு தீர்ப்புகளையும், சிறப்பு வெளிநாட்டவர் மேல்முறையீடு ஆணையச் சட்டம்(1997) பிரிவு 2,(3,4) தரும் அதிகாரத்தையும், கூட்டு தீவிரவாத ஆய்வு மையம், குழுத்தாக்க மதிப்பீட்டு குழு, உலக காமன்வெல்த் அலுவலகம், கொழும்பில் உள்ள இங்கிலாந்து உயர் ஆணையம், தடையை மீளாய்வு செய்யும் குழு ஆகிய அமைப்புகள் கொடுத்து தரவுகளையும் பயன்படுத்தி விடுதலைப்புலிகள்மீது தடையை விதித்து, அதை மேலும் நீடித்தார்(9 – 70 பத்திகள்).

வழக்கும் வாதமும்

அரசின் செயலர் 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டாலும், விடுதலைப்புலிகளும் அதன் ஆதரவாளர்களும் தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்துபோன விடுதலைப்புலிகளையும், நடந்த நிகழ்வுகளையும் நினைவு கூருவது தீவிரவாதத்தை தூண்டுவதாக இருக்கின்றது. மீண்டும் விடுதலைப்புலிகள் உருவாகி, இலங்கை அரசுக்கும், உலக நாடுகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்துவார்கள். இவைபோன்ற காரணங்களை சொல்லி தடையை போட்டு, அதை மேலும் நீடித்தனர். ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசாங்க சார்பில் வாதாட வந்த சட்டத்தரணிகள், அரசின் செயலர் முன்வைத்த காரணங்களை மறுத்து வாதாடினர்.

ஒன்று. 2018 ஆம் ஆண்டு சூன் திங்கள் வெடிமருந்துகள், ஆயுதங்கள் வைத்திருந்த சிலரை கைது செய்தனர். அதுபோல அதே ஆண்டில் நவம்பர் திங்களில் இரண்டு அரசு காவலர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த இரண்டு நிகழ்வுகளை வைத்து விடுதலைப் புலிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறமுடியாது. ஏனென்றால் கைது செய்யப்பட்டவர்கள் குற்றமற்றவர்களாக விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்வுகளை விடுதலைப்புலிகள் மீது சுமத்த முடியாது.

இரண்டு. நினைவு தினங்களை கொண்டாடுவது அந்த இயக்கத்தின் கருத்தியல் தாக்கத்தின் காரணமாக வருகிறது. நினைவுத் தினங்களை கொண்டாடுகின்றவர்களை விடுதலைப்புலிகள் என்றும், அந்த நினைவுகள் தீவிரவாதத்தை தூண்டுகிறதென்றும் கூறமுடியாது.

மூன்று. விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகி அச்சத்தை தருவர் என்பது ஒரு கற்பனைக் கதையாகும். அரசு செயலர் முழுமையாக எதிர்வாதத்தினர் தரும் தரவுகளை ஆராயாமல், மேலோட்டமாக சிந்தித்து செயல்படுவது ஈழத்தமிழ் மக்களுக்கு பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று எடுத்துரைத்தனர்.

ஓர் அமைப்பின் உண்மையான நிலையை நன்கு அறிந்து கொள்ளாமல் தடைசெய்வது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமை வழங்கும் உரிமைச் சட்ட எண்களுக்கு(10, 11) எதிராக செயல்படுவதைச் சுட்டிக் காட்டுகிறோம். இலங்கை, இந்திய அரசுகளை நிறைவுபடுத்த இந்த தடையைக் கொண்டு வந்திருக்கின்றனர். இந்த தடையின் பின்விளைவுகளை நன்கு ஆய்வு செய்யாமல் செயல்படுவது அரசின் செயலரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது என்று வாதாடினர். அதனால் தடையை நீடிப்பதற்கு தேவையான ஆதாரங்களும், அறிவும் இல்லாததால் தடையை நீக்குமாறு கேட்டுக் கொண்டனர்(71 – 116 பத்திகள்).

b3a49254 a677 41a2 ada7 836cb8b51ed5 தடத்திற்கு தடை தரலாமா? - முனைவர் ஆ. குழந்தை

தீர்ப்பும் திருப்பமும்

விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டரீதியாக இருப்பதாக தெரியவில்லை. மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்வதற்கு கொடுக்கப்பட்ட காரணங்களும், கூறுகளும் தவறானவையாக, குறைவானவையாக, ஆய்வற்றையாக இருப்பதால் விடுதலைப்புலிகளைத் தடை செய்தது தவறானது என்று தீர்ப்பளித்தனர். மேல்முறையீட்டுக்குச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றால், 28 நாட்களுக்குள் உள்துறை அரசின் செயலரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தேவையான ஆதாரங்களைக் கொடுத்து ஆய்வு செய்ய வேண்டும். இங்கு அதைப்பற்றி நடுவர் மன்றம் எதுவும் சொல்ல விரும்பவில்லை(118 -119பத்திகள்). எனவே திறந்த தீர்ப்பும், மூடிய தீர்ப்பும் எங்களது முடிவை மறைக்காமல் ஆதரிக்கின்றன(120 பத்தி). இந்த தீர்ப்பால் இதுவரை உலகம் முழுவதும் விடுதலைப்புலிகளைப் பற்றி தவறாக பரப்பப்பட்ட கருத்தில் மாற்றம் எழுந்துள்ளது. தடையை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடமைகள்

இந்த வழக்கை நடத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பாராட்டுகிறோம். இனிமேல் நமக்கு அதிக பணிகள் இருக்கின்றன.

ஒன்று. நமது கொண்டாட்டத்தை விட்டுவிட்டு 28 நாட்களுக்குள் கொடுக்கப்பட வேண்டிய தரமான, அறிவார்ந்த தரவுகளை தேடிக் கொடுக்க வேண்டும். நாம் முன்னெடுக்கின்ற கொண்டாட்டங்கள் எதிரிகளை தேவையில்லாமல் தூண்டிவிட்டு, நாம் முன்னெடுக்கும் செயல்களுக்கு நாமே தடையாக மாறி விடுகிறோம்.

இரண்டு. இந்த தீர்ப்பு விடுதலைப் புலிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடவில்லை என்று கூறுகிறது. ஆனால் நாம் தீவிரவாத செயல்கள் போன்ற வேறு எந்த செயல்களிலும் ஈடுபடவில்லை என்று நிரூபிக்க வேண்டும். இயக்கத்தை தடை செய்வதற்கு விதிக்கப்பட்ட எவ்வித செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும், தூண்டவில்லை என்றும் தரவுகளுடன் வாதிடவேண்டும். தடைக்கு கொடுக்கப்பட்ட காரணங்கள் மட்டும் தவறானவை என்று வாதிட்டார்கள். அதை கடந்து விடுதலைப் புலிகளது விடுதலைப் போராட்டத்தின் கூறுகளையும் பண்புகளையும் வெளிக்கொணரவில்லை. சுவிசு நாட்டு தீர்ப்பு, இத்தாலிய தீர்ப்பு, ஐரோப்பிய ஒன்றிய தீர்ப்பு போன்று முழுமையான ஒரு தீர்ப்பாக இந்த தீர்ப்பை கருதமுடியாது.

மூன்று. இந்தத் தீர்ப்பில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தரமற்ற தரவுகளும் குற்றச்சாட்டுகளும் ஏராளமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தரமுள்ள ஆதாரங்கள் இடம்பெறவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொடுக்கவில்லையா? அல்லது சட்டத்தரணிகள் அவற்றை பயன்படுத்தவில்லையா? அல்லது ஆதாரங்கள் கொடுக்கப்பட்டு அவை தீர்ப்பில் பதியப்படவில்லையா? இங்கு தெளிவில்லை. ஒருவர் குற்றவாளி இல்லை என்று கூறுவதோடு அவரின் நன்மைத் தனத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

நான்கு. இலக்கை அடைய வேண்டுமென்றால், நாம் எடுக்கின்ற வழிமுறைகள் எவருக்கும் தெரியாமல் அமைதியாக அடக்கமாக செய்து முழுமையான வெற்றி வரும்வரை காத்திருக்க வேண்டும். இல்லையென்றால், நாம் எடுக்கும் தடத்திற்கு நாமே தடையாக மாறி விடுவோம். ‘தவளை தன் வாயாலே கெடும்’ என்ற செயலுக்கு ஒத்துப் போகுமாறு செயற்படக் கூடாது. ஏனென்றால், உதவி செய்பவர்களைவிட தடைபோடுகின்றவர்கள் ஏராளமாக வாழும் மண்ணில் வாழ்கிறோம்.

ஐந்து. நமது முன்னிலையில் நாம், நமது இயக்கம் இல்லாமல் உரிமைக்காக போராடி, மடிந்த போராளிகளும், கொலை செய்யப்பட்ட அப்பாவிகளும் நம்முன் இருக்க வேண்டும். இவர்கள்தான் நமது இயக்கத்தின் வழிகாட்டிகள் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். தடங்களுக்கு தடையாக மாறாமல் தடங்களை உருவாக்க தன்மானத்துடன் செயற்படுவோம்.