ஓட்டிசம் பிள்ளைகள் பிறக்கும் காரணம் என்ன? கண்டுபிடிக்க தொடரும் ஆராய்ச்சிகள் – வெள்ளையன் சுப்பிரமணியன்

 ஓட்டிசம் பிள்ளைகள்வெள்ளையன் சுப்பிரமணியன்

ஓட்டிசம் பிள்ளைகள் பிறக்கும் காரணம் என்ன?

ஏப்ரல் 2ஆம் திகதி அனைத்துலக ஓட்டிச விழிப்புணர்வு நாள்.  இதை முன்னிட்டு   ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இயலாமை உள்ளவர்களுக்கான தேசிய சபையில் உறுப்பினராக உள்ள வெள்ளையன் சுப்பிரமணியன் அவர்கள் ஓட்டிசம் தொடர்பாக இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு செவ்வி

கேள்வி:
‘ஓட்டிசம்’ என அழைக்கப்படும் மன இறுக்கம் எப்படி ஏற்படுகிறது? இவர்களை எப்படி இனங்காண முடியும்?

பதில்:
ஓட்டிசம் என்பதற்கு இலங்கையில் தற்புணர்வு ஆள்கை என்ற சொல் பயன்படுத்தப் படுகின்றது. இது எப்படி ஏற்படுகின்றது என்பதற்கு விஞ்ஞான ரீதியான கண்டுபிடிப்புகள் இன்னும் நடக்கவில்லை.  ஆண், பெண் இருவரிலும்  இருக்கும் 23 நிறமூர்த்தங்களில் 21ஆவது நிறமூர்த்தம் இணையும் போது ஏற்படும் குழப்பத்தினால் இவ்வாறான ஓட்டிசம் பிள்ளைகள் பிறக்கின்றனர் என ஒரு ஆய்வு சொல்கின்றது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் அதிவிவேகமான பெற்றோருக்கு இந்தப் பிள்ளைகள் பிறப்பதாகவும் கூறுகின்றனர்.  ஆனால் இதுவும் உறுதிப்படுத்தப் படவில்லை. இந்தப் பிள்ளைகள் பிறக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

3அடையாளங்களைக் கொண்டு ஓட்டிசம் இருப்பவர்களைக் கண்டு கொள்ளலாம்.

முதலாவது ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அது தனது தாயுடனோ, தகப்பனுடனோ அல்லது வீட்டிலுள்ளவர்களுடனோ  யாருடன் பேசும் போதும் எந்தவிதமான கண் தொடர்பையும் வைத்துக் கொள்ளாது. பிள்ளை கண்ணைப் பார்த்துப் பேசாது. இதற்கான காரணத்தை யாரும் கண்டு பிடிக்கவில்லை. இந்த அடையாளம் இருந்தால் மட்டும் அந்தப் பிள்ளைக்கு ஓட்டிசம் இருக்கு என்று அர்த்தமல்ல.

இரண்டாவது இந்தப் பிள்ளை எப்போதும் தனிமையையே நாடும் ஒரு பிள்ளையாகத் தான் இருக்கும். ஏனைய பிள்ளைகளுடன் சேராது, தனியாக யோசனையில் இருப்பது போல இருக்கும். அது வேறு ஒரு உலகத்தில் இருப்பது போன்று தோன்றும். இந்த இரண்டு அறிகுறிகளும் இருந்தால், அந்தப் பிள்ளைக்கு ஓட்டிசம் இருக்கலாம் என்று 75% அறியலாம்.

மூன்றாவதாக ஏனைய பிள்ளைகளிடம் இல்லாத அசாதாரண தன்மையைக் கொண்டிருப்பார்கள். எதுவித பயமும் அற்ற நிலையில் இருப்பார்கள். தெருவில் வாகனங்கள் வந்தாலும், அவர்கள் தங்கள் போக்கில் போவார்கள். மலை உச்சியில், பள்ளத்தாக்கில் பயமின்றி நடந்து செல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை பள்ளத்தாக்கு, மலை என்ற வித்தியாசம் இல்லை. வட்டமான பொருட்களில் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். சாப்பாட்டுப் பாத்திரத்தை விளையாட்டுப் பொருளாக பார்ப்பார். காரை விளையாட கொடுத்தால், காரை கவிழ்த்துப் போட்டு, சில்லை உருட்டி விளையாடுவார்கள். ஒரு பிராணியை நேசிப்பார்கள். அதேபோல் ஒரு குறிப்பிட்ட  நிறத்தில் பிரியப்படுவார்கள். மேலும் குறிப்பிட்ட ஒரு செயற்பாட்டை விரும்புவார்கள். உதாரணமாக போகும் போது ஒரே தெருவையே விரும்புவார்கள். மாற்றம் இருந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  செய்யும் செயற்பாடுகளை மிக நேர்த்தியாக செய்வார்கள். உதாரணமாக புத்தகங்களை நேராக அடுக்குவார்கள். காலணிகளை நேர்த்தியாக அடுக்குவார்கள்.

இந்து மூன்று செயற்பாடுகளும் இருந்தால் அந்தப் பிள்ளைகள் ஓட்டிசம் உள்ள பிள்ளைகளாக இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கேள்வி:
தாயகத்திலும் தமிழகத்திலும் ஒட்டிசம் உள்ளவர்களுக்கு எவ்வாறான ஆதரவுகள் உள்ளன?

பதில்:
இந்தியாவைப் பொறுத்தவரையில், எமக்கு சொல்லத் தெரியவில்லை. வெளிவரும் செய்திகளை வைத்துப் பார்க்கும் போது கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகத் தெரிகின்றது. ஆனால் எங்கள் நாட்டைப் பொறுத்தவரையில், இலங்கை முழுவதிலும் ஓட்டிசம் பிள்ளைகளில் பெரிதாக கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் இயலாமையிலுள்ள மக்களின் நிலைமை இன்னும் கவனம் செலுத்தப்படாமல், கீழான நிலைமையில் தான் இருக்கின்றது. இன்னும் எத்தனையோ இயலாமைக்குட்பட்ட மக்கள் சரியான வாழ்க்கைத் தரம் இல்லாமல், சரியான வாழ்வாதாரம் இல்லாமல் மோசமான நிலையில் தான் இருக்கிறார்கள்.  இந்த நிலையில்  ஓட்டிசம் பிள்ளைகளில் கவனம் செலுத்துவது என்பது மிகமிகக் குறைவு.  உதாரணமாக ஓட்டிசம் பிள்ளைகளும் மனவளர்ச்சி குறைந்த பிள்ளைகள் தான் என்ற பிழையான ஒரு கருத்தும் உள்ளது. ஆனால் இந்தப் பிள்ளைகள் மனவளர்ச்சி குறைந்த பிள்ளைகள் அல்ல. அறிவுசார் குறைவான பிள்ளைகள் என்று இவர்களைச் சொல்வதும் பிழை. இவர்களுக்கு அறிவுசார் பிரச்சினை இல்லை. இவர்களுக்கு மன இறுக்கம் சார்ந்த ஒரு பிரச்சினை தான் இருக்கின்றது.

இவர்களுக்கென்று தனியான பாடசாலைகள் ஒன்று இரண்டு தான் இருக்கின்றது.  வடக்கு கிழக்கில் இவர்களுக்கான தனியான பாடசாலைகள் எதுவும் இல்லை என்றே கூறலாம்.  இயலாமையுள்ள பிள்ளைகளுடனேயே இவர்களும் கல்வி கற்கின்றார்கள்.  ஆனால் இது பிழையானது. இவர்கள் இயலாமை உள்ள பிள்ளைகள் அல்ல. இவர்களுக்கென்று தனியான பாடசாலைகளே வைக்க வேண்டும். ஆனால் இயலாமைக்குரிய பிள்ளைகளுக்கு சங்கங்கள் அமைத்து, அவர்களின் உரிமைகளுக்காக கதைக்கின்றோம். ஓட்டிசம் பிள்ளைகளுக்காக சங்கங்கள் அமைத்து அவர்களுக்காகப் பேசும் தன்மைகள் இல்லை.  அரசாங்கப் பாடசாலைகளை எடுத்துக் கொண்டால், இயலாமைக்குரிய பிள்ளைகளுக்கு என தனியான அலகுகள் வைத்திருக்கின்றனர். ஆனால் இவர்களுடன் சேர்த்தே ஓட்டிசம் பிள்ளைகளைப் படிப்பிக்கின்றார்கள். அவர்களுக்கென்று தனியான பாடசாலைகள் இல்லை.  முழு இலங்கையிலும் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது.

கேள்வி:
தமிழர்கள்  சமுதாய அடிப்படையில் எவ்விதமான முறைகளில் உதவலாம்?

பதில்:
முதலாவதாக ஓட்டிசம் பிள்ளைகள் இயலாமைக்குரிய பிள்ளைகள், அறிவுசார் குறைபாடுள்ள பிள்ளைகள் என்ற கருத்தை விடவேண்டும். இவர்கள் விசேட தேவையுள்ள பிள்ளைகள். இவர்களை விசேட தேவையுள்ள பிள்ளைகள் என்ற பார்வையில் பார்க்க வேண்டும்.

இரண்டாவது இவர்களுக்கு தனியான பாடசாலைகள், தனியான கலைத்திட்டம், தனியான பயிற்றப்பட்ட ஆசிரியர்கள், தனியான பாடநூல்கள், தனியான கற்பித்தல் உபகரணங்கள் உள்ளடங்கலாக ஒரு விசேட பாடசாலை இருக்க  வேண்டும். இவர்களை சாதாரண பிள்ளைகளுடன் படிப்பிக்கவும் கூடாது. இயலாமையுடைய பிள்ளைகளுடன் வைத்தும் படிப்பித்தல் கூடாது. இவர்கள் அறிவு கூடிய பிள்ளைகளாக இருப்பார்கள்.  சாதாரண பிள்ளைகளைவிட இவர்களுக்கு கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் அதிகூடிய நுண்ணறிவு இருக்கும்.  தமிழ் போன்ற  மற்றைய பாடங்களை விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.

மூன்றாவது இவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கென போராடக்கூடிய தனியான ஓட்டிச  அமைப்புகள் இருக்க வேண்டும். இவர்கள் உரிமைகள் பற்றி, இவர்களின் தன்மை பற்றி மக்கள் மத்தியில், அரசாங்க அதிகாரிகள் மத்தியில், ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுததுவதற்காக இவர்களுக்கான தனியான ஒரு அமைப்புத் தேவை.   இவ்வாறான அமைப்புகள் இலங்கையில் இல்லை.  இந்த அமைப்புக்கள் வடக்கு, கிழக்கிலும், இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும்.

இவை மேற்கொள்ளப்படாது  விட்டால், இவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மிகக் கஸ்டம்.

கேள்வி:
போரால் பாதிப்புற்ற தமிழரிடையே  ஓட்டிசம் உள்ளவர்களுக்கு எவ்வாறான உதவிகள் கிடைக்கின்றன?

பதில்:
இலங்கையைப் பொறுத்தவரையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயலாமைக்குரிய மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமானதாகத் தான் இருக்கின்றது. ஏனெனில், 30 வருடப் போரில் இலங்கையின் மற்றைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில், இயலாமையுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இவர்கள் யுத்தத்தினால் விசேட தேவையுடையவர்களாக மாறியவர்களாக இருக்கின்றார்கள். உதாரணமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் தங்கள் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருப்பவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். இலங்கையில் வடக்கு கிழக்கில் இயலாமையுடைய பிள்ளைகள் அதிகம் இருக்கின்றனர்.

இதில் துக்கமான செய்தி என்னவென்றால், வடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டு, இவ்வாறு விசேட தேவையுடையவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்ற எண்ணிக்கை விபரங்கள் பெறப்படவில்லை. அரசாங்கத்தினர் கிராமசேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் என்ற மட்டத்திலேயே ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளார்களே தவிர, முழுமையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பான முழுமையான கணக்கெடுப்பை மேற்கொண்டால், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் இருக்கின்றார்கள் என்ற தகவல் சர்வதேச மட்டத்தில் தெரிய வரும் என்று அரசாங்கம் பயப்படுகின்றது.

இதேபோன்று தான் ஓட்டிசம் உள்ள பிள்ளைகளின் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப் படவில்லை. ஒரு கிராமசேவை உத்தியோகத்தரிடம் உங்கள் பிரிவில் எத்தனை ஓட்டிசம் பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்று கேட்டால், அவருக்கு அது பற்றி தெரியாது. ஏனென்றால், ஓட்டிசம் என்றால் என்னென்று தெரியாது.  இது பற்றிய கணக்கெடுப்பு இல்லாததால், இவர்களுக்குரிய தேவைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது. ஒரு கணக்கெடுப்பு இருந்தாலே இவர்களுக்கான பாடசாலைகள், மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.

முதலில் ஓட்டிசம் என்றால் என்ன என்பதைப் புரிய வைத்து, அவர்கள் மூலம் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டாலே ஏனைய விடயங்களை மேற்கொள்ளலாம். முதலில் மேற்கொள்ளப்பட வேண்டியது கணக்கெடுப்பே.

கேள்வி:
புலம்பெயர் தமிழர்கள் தாயக, தமிழக ஓட்டிசப் பாதிப்பு உள்ளவர்களுக்கு எவ்வாறு உதவலாம்?

பதில்:
புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்களுக்கு ஓட்டிசம் பிள்ளைகளுக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருக்குமாக இருந்தால், அவர்கள் சரியான ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். அவர்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது. எந்த உதவி யாருக்குச் செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. மேலும் கண்டகண்ட இடங்களுக்கு உதவி செய்து அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் சரியான தெரிவை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கென தங்களுக்குள் ஒரு அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டும். உதாரணமாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஓட்டிசம் தொர்பான உதவி செய்யும் ஒரு அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டும்.  தனிப்பட்ட முறையில் உதவி செய்வதை நிறுத்த வேண்டும். கோயில்கள் கட்டுவதற்குரிய நிதிகளை நிறுத்த வேண்டும். இங்கு ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. வடக்கு கிழக்கில் இதுபோன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு உருவாக்கப்பட்ட அமைப்பைக் கொண்டு எத்தனைபேர் ஓட்டிசம்  உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.

அதன்பின்னர் ஒரு மாவட்டத்தில்  ஒரு பாடசாலையாவது ஏற்படுத்தி, அங்கு கல்வி பயிற்றுவிப்பதற்கு ஆசிரியர்களை தெரிவு செய்து, வெளிநாடுகளுக்கு அனுப்பியோ இங்கோ பயிற்றுவித்து, கல்வி கற்பிக்க வேண்டும். இவர்கள் கெட்டிக்காரர்கள். நினைத்தால் பெரிய பதவிகளுக்கு வருவார்கள். உலகத்தில் பெரிய பெரிய விஞ்ஞானிகளுக்கே ஓட்டிசம் இருந்தது என்றே சொல்கிறார்கள். கணித மேதை ராமானுஜருக்கு ஓட்டிசம் இருந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால் இலங்கையில் சரியான வழிநடத்தல்கள் இல்லாமையால்,  புலம்பெயர் இலங்கையர்கள் இது பற்றி சிந்திக்க வேண்டும்.

அவர்கள் தங்களுக்குள்ளே ஒரு அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டும். பின்னர் தாயகத்தில் உதவி பெறுவதற்கு ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் அவர்கள் ஊடாக தேவையுடையவர்களுக்கு தாங்கள் உதவிகளை மேற்கொள்ளலாம்.

Tamil News