ஏழைகளுக்கு மருந்துகள், உலர் உணவுகளை வழங்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்தல்

இலங்கை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில், தேவையுடையோருக்கு மருந்துகள் மற்றும் உலர் உணவுகளை வழங்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, நாட்டில் துன்பப்படுவோரிடம் மக்கள் இரக்கத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

“உலர் உணவுகள், குழந்தைகளுக்கான பால்மா மற்றும் ஏழை மக்களுக்கு மருந்துகள் வழங்குவதற்கு அனைத்து செலவுகளும் ஒதுக்கப்பட வேண்டும்” என பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அன்ரனி பெரேரா மற்றும் செயலாளர் நாயகம் ஆயர் ஜே.டி. அன்ரனி ஜெயக்கொடி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நத்தார் பண்டிகையை வெளிப்புறக் கொண்டாட்டங்களுக்கான ஒரு சந்தர்ப்பமாக மாற்றுவதைத் தவிர்க்குமாறு பக்தர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கடந்த ஜூன் மாதம் முதல் மருந்து தட்டுப்பாட்டுடன் போராடி வருகிறது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு விவசாய அமைப்பு ஆகியவை, நாட்டில் 6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக எச்சரித்துள்ளனர்.

“நத்தார் என்பது எமது நாட்டைக் குணப்படுத்தவும், ஏழைகள் மற்றும் துன்பப்படும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கவும் ஒரு நேரம்” என ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.