Home நேர்காணல்கள் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு – சட்டத்தரணி வெய்ன் ஜோடாஷ் உடன் செவ்வி...

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு – சட்டத்தரணி வெய்ன் ஜோடாஷ் உடன் செவ்வி – பகுதி 1

சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு

றோம் சாசனத்தின் 15ம் பிரிவின் அடிப்படையில் சிறீலங்காவுக்கு எதிராகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் பிரித்தானியத் தமிழர்களால் ஒரு வழக்கு முன்னெடுக்கப்படுகிறது. குளோபல் றைட்ஸ் கொம்பிளையன்ஸ் எல்எல்பி (Global Rights Compliance LLP) என்ற சட்ட நிறுவனத்தைச் சார்ந்த வெய்ன் ஜோடாஷ்  (Wayne Jordash) என்ற சட்டத்தரணி இந்த முயற்சியை பிரித்தானியத் தமிழர் சார்பில் முன்னெடுக்கிறார். இந்தச் சட்ட முன்னெடுப்பு தொடர்பாக வெய்ன் ஜோடாஷ் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு அளித்த செவ்வியின் மொழியாக்கத்தின் முதற்பகுதியை இங்கே தருகிறோம்.

சிறீலங்காவில் நாடுகடத்தல், நாடு திரும்பும் உரிமை மறுக்கப்படல், தொடர் துன்புறுத்தல் போன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வதிகின்ற 200 தமிழர்களின் சார்பாக றோம் சாசனத்தின் 15வது பிரிவின் அடிப்படையில் பிரித்தானியாவாழ் தமிழ் மக்களால் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநர்களிடம் ஒரு வழக்கு தற்போது சமர்ப்பிக்கப் பட்டிருக்கிறது.

‘ஜிஆர்சி எல்எல்பி’ என்ற சட்ட அமைப்பு றோம் சாசனத்தின் 15வது பிரிவின் அடிப்படையில், நெதர்லாந்தின் ஹேக் (Hague) நகரில் அமைந்திருக்கும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court – ICC) வழக்குத் தொடுநர்களிடம் ஒரு வழக்கைக் கையளித்திருக்கிறது. குளோபல் றைட்ஸ் கொம்பிளையன்ஸ் எல்எல்பி (Global Rights Compliance LLP) என்ற இந்த அமைப்பு பன்னாட்டுச் சட்டங்கள் குறிப்பாக பன்னாட்டு மனிதாயச் சட்டம், மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் கடைப்பிடிக்கப் படுவதை உறுதிப்படுத்த உழைக்கின்ற ஒரு சட்ட நிறுவனமாகும்.

இந்த வழக்கின் முதன்மைச் சட்டத்தரணியாக விளங்கும் வெய்ன் ஜோடாஷ் (Wayne Jordash) ஒரு பிரித்தானிய சட்டத்தரணி என்பதுடன் பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் விடயத்தில் கடந்த இருபது வருடங்களாகப் பணியாற்றி வருகின்ற நிபுணத்துவம் வாய்ந்த ஒரு சட்டத்தரணி ஆகும்.

இனப்படுகொலை, மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் போன்ற குற்றங்களை விசாரிக்கின்ற பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம், நீதிக்கான பன்னாட்டு மன்றம் போன்ற உலகளாவிய பன்னாட்டு நீதிமன்றங்களின் செயற்பாடு களுடனும் பன்னாட்டு வலையமைப்புகளுடனும் தொடர்புகளைக் கொண்ட ஒரு சட்ட நிபுணர் ஆவார்.

அதுமட்டுமன்றி இயூக்ரேயின், பங்களாதேஷ், லிபியா, சேர்பியா, வியட்நாம் போன்ற நாடுகளின் அரசுகள் பன்னாட்டு மனிதாயச் சட்டம், பன்னாட்டு மனித உரிமைகள் சட்டம் போன்றவற்றை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பது தொடர்பாக அந்த அரசுகளுக்கு ஆலோசனை வழங்குபவராகவும் திகழ்ந்து வருகிறார்.

கேள்வி:

றோம் சாசனத்தின் 15வது பிரிவு தொடர்பாக எமக்கு விளக்கம் தரமுடியுமா?

பதில்:

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் ஒரு வழக்கை விசாரிக்கும் போது முதற்கட்ட ஆரம்ப விசாரணையோடு தான் எந்த வழக்கையும் ஆரம்பிக்கும் என்பது அதன் செயற்பாடுகளை நன்கு அறிந்தவர்களுக்குப் புரியும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் தலையிட்டு விசாரணை செய்யக்கூடிய குற்றங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் இழைக்கப்பட்டனவா அல்லது அப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வருவதற்குக் கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று மேற்படி நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநர்கள் ஆய்ந்தறிகிறார்கள். ஆகவே இவ்விடயங்கள் தொடர்பாக இழைக்கப் பட்டிருக்கக் கூடிய குற்றங்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றின் வழக்குத் தொடுநர் எதிர்பார்க்கிறார். ஒரு தனி நபரோ அல்லது அரசோ அல்லது ஒரு சிவில் சமூக அமைப்போ தம்மிடமுள்ள ஆதாரங்களை வைத்துக் கொண்டு, 15ம் பிரிவின் அடிப்படையில் குற்றங்கள் இழைக்கப் பட்டிருக்கின்றன என்று வழக்குத் தொடுக்க முடியும்.

ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சம் வழங்கப்பட்ட இருநூறு பேர் சித்திரவதை, துன்புறுத்தல்கள், நாடுகடத்தப்படல், தாயகம் திரும்பும் உரிமை மறுக்கப்படல் போன்ற குற்றங்கள் சிறீலங்கா அரசினால் தமக்கு எதிராக இழைக்கப்பட்டதாக வாதிடுகிறார்கள். இந்த 200 பேர் அளித்த தகவல்கள் மட்டும் இது தொடர்பாக நாம் தயாரித்த ஆவணத்தில் உள்ளடக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள், பன்னாட்டு மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற அமைப்புகளின் அறிக்கைகள் என்று பல ஆவணங்களின் உதவியுடன் தான் இவ்வழக்கை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களையும் இந்த 200 பேருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களையும் நாம் சிறப்பாக ஆவணப் படுத்தியிருக்கிறோம்.

கேள்வி:
பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றின் றோம் சாசனத்தில் சிறீலங்கா ஒப்பமிடவில்லை. அப்படிப்பட்ட ஒரு பின்புலத்தில், பாதுகாப்புச் சபையின் சிபாரிசு இல்லாமல், பாதிக்கப்பட்ட இந்த 200 தமிழர்களின் சார்பாக முன்வைக்கப்பட்ட இக்குறிப்பிட்ட வழக்கை நீதிமன்றின் வழக்குத் தொடுநர்களால் விசாரிக்க முடியுமா?

பதில்:
உண்மையில் இது ஒரு நல்ல கேள்வி. பொதுப்படையாகக் கதைப்பதானால் இந்தக் கேள்விக்கு இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும். மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை, போன்ற குற்றங்கள் இரண்டு நாடுகளில் நிகழும் போது, அந்த இரண்டு நாடுகளில் ஒன்று றோம் சாசனத்தில் ஒப்பமிடவில்லை. அதேவேளை மற்றைய நாடு இச்சாசனத்தில் ஒப்பமிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் ஒரு வழக்கு தொடரப்பட முடியும் என்று நீதிமன்று ஏற்கனவே தீர்ப்பிட்டிருக்கிறது. மியான்மார் தொடர்பான வழக்கு முன்னெடுக்கப்பட்ட போதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. றோம் சாசனத்தில் ஒப்பமிடாத மியான்மாரில் குற்றங்கள் இழைக்கப்பட்டன. ஆனால் அக்குற்றங்கள் அச்சாசனத்தில் ஒப்பமிட்ட பங்களாதேஷ் நாட்டில் தொடர்ந்தன. ஏனென்றால் அங்குள்ள அகதி முகாம்களுக்கே றோகிங்யா அகதிகள் விரட்டப்பட்டார்கள். நாடு கடத்துதல் என்ற குற்றம் மியான்மாரில் ஆரம்பிக்கப்பட்டு பங்களாதேஷில் நிறைவு செய்யப்பட்ட து  என்று பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது.

அந்த முன்னுதாரணத்தை வைத்தே எமது வழக்கை நாம் முன்னெடுக்கிறோம். நாங்களும் இதே கருத்தைத் தான் முன்வைக்கிறோம். குற்றங்கள் சிறிலங்காவில் ஆரம்பிக்கப்பட்டன. ஒன்றில் அவை ஐக்கிய இராச்சியத்தில் நிறைவு செய்யப் படுகின்றன அல்லது தொடர்கின்றன. இவ்விடயத்தை ஒரு உதாரணம் மூலம் விளக்க முடியும்.

ஒரு தனிநபரை ஒரு தனி அறையில் நான் தடுத்து வைத்திருக்கிறேன் என்று எடுத்துக் கொள்வோம். நான் முதல் தடவை அந்த நபரைத் தடுத்து வைக்கும் போது குற்றச் செயல் நிறைவடைகிறது. ஆனால் குறிப்பிட்ட அந்த நபர் விடுதலை செய்யப்படும் வரையும் அக்குற்றம் தொடர்கிறது. அதே போல நாடு கடத்தல் என்ற குற்றத்தை எடுத்துக் கொள்வோம். சித்திரவதை, தடுத்து வைக்கப்படல், துன்புறுத்தல் கள் போன்ற காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறப் பலர் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். ஈற்றில் அவர்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்து சேர்கிறார்கள்.

சிறீலங்காவை விட்டு வெளியேறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தத் தெரிவும் இல்லை. அந்த நாடு கடத்தல் உண்மையில் தொடர்ந்து நடைபெறுகிறது என்றே நாங்கள் வாதிடுகிறோம். அந்த நபர் ஐக்கிய இராச்சியத்தில் இருக்கும் போது அக்குற்றம் தொடர்கிறது. சிறீலங்கா அரசு தமிழ் மக்களைத் தாயகம் திரும்ப அனுமதிக்கும் வரை இந்தத் துன்புறுத்தல் குற்றம் தொடர்கிறது. ஐக்கிய இராச்சியத்தில் இவர்கள் இருக்கும் போது குற்றம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது போலத் தான் துன்புறுத்தல் மற்றும் தாயகம் திரும்புவதற்கான உரிமையை மறுத்தல் போன்ற குற்றங்களைப் பார்க்கலாம். புதிய இடத்தில் அக்குறிப்பிட்ட குற்றம் நிறைவடைய வேண்டும் அல்லது தொடர வேண்டும். குற்றம் தனியே சிறீலங்காவில் தான் நடைபெறுகிறது என்று சொல்ல முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் சிறீலங்கா திரும்ப முடியாத சூழலை சிறீலங்கா அரசு உருவாக்குகின்றது. இதன் காரணமாக இந்த 200பேரும் நாடு திரும்ப முடியாத நிலையில் இருக்கிறார்கள். அப்படிப் பார்க்கும் போது அக்குற்றம் ஐக்கிய இராச்சியத்தில் தொடர்கிறது. ஐக்கிய இராச்சியம் றோம் சாசனத்தில் ஒப்பமிட்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

கேள்வி:
அப்படியென்றால் பாதுகாப்புச் சபையின் சிபாரிசின் அடிப்படையில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் முன்னெடுக்கின்ற ஒரு வழக்குக்கும் அதே வேளை ஏதாவது ஒரு வழக்கை விசாரிக்கலாமா அல்லது இல்லையா என முடிவு செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றின் ‘வழக்குக்கு முந்திய மன்றினால் சிபாரிசு செய்யப்பட்டு முன்னெடுக்கப்படும் ஒரு வழக்குக்கும் இடையேயுள்ள நடைமுறை வேறுபாடு என்ன?

பதில்:
உண்மையில் இது ஒரு நல்ல கேள்வி. இங்கே அதிகம் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு அணுகுமுறையிலும் விசாரணை செய்யும் வழிமுறைகள் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். அனுமதி கிடைக்குமானால் வழக்குத் தொடருநர் தனது விசாரணை அதிகாரிகளை உரிய நாட்டுக்கு அனுப்புவார். அவர்கள் அங்கே சென்று சாட்சிகளிடமிருந்தும் ஆவணங்களிலிருந்தும் வேறு வழிகளிலும் ஆதாரங் களைத் திரட்டுவார்கள். இங்கே முக்கிய வேறுபாடு என்னவென்றால் பாதுகாப்புச் சபை ஒரு சிபாரிசை மேற்கொள்ளுமாயின் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் மேற்கொள்ளுகின்ற விசாரணை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வரையறை செய்வார்கள். ஆனால் நீதிமன்றின் வழக்குத் தொடுநர்கள் ஒரு வழக்கை விசாரிக்க முடிவு செய்யும் போது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் நிற்காது பரந்து பட்ட ஒரு விசாரணையை அவர்கள் மேற்கொள்ள முடியும்.

Exit mobile version