கிறிஸ்மஸ் கொண்டாடத் தயாராகும் அமைச்சர்கள்- கொழும்பு பேராயர் கண்டனம்

தற்போது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, சுற்றுலாத்துறையின் முக்கிய பங்குதாரர்கள், பொறுப்பான அமைச்சர்கள் பெருமளவிலான பணச்செலவில் நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராகி வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

மட்டுமாகலை புனித இருதய தேவாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “கிறிஸ்துமஸ் வரவுள்ளது. சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள் உட்பட சுற்றுலாத்துறையின் தலைவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் கொழும்பு நகரை மின்விளக்குகளால் அலங்கரிக்க திட்டமிட்டிருப்பதை அறிந்தேன். பயன் என்ன? மக்களின் பொக்கெட்டுகள் காலியாக உள்ளன. உலகில் எல்லா நாடுகளிடமும் பிச்சை எடுக்கும் நாடாக இலங்கை மாறிவிட்டது.
தலைவர்களுக்கு ஏழைகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், அவர்கள் பாராளுமன்றத்தில் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள், மாறாக மக்களிடம் சென்று அவர்களின் வலிகள் மற்றும் துன்பங்களை விசாரிப்பார்கள் . எவ்வாறாயினும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கடமையை புறக்கணித்து பாராளுமன்றத்தில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனர்.

“மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், தலைவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி குழந்தைத்தனமாக நடந்து கொள்கின்றனர். இன்று உணவின்றி நூற்றுக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கிறார்கள், குழந்தைகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து இல்லாததால் நோய்வாய்ப்படுகிறார்கள். எனினும், தலைவர்கள் மக்களின் துயரங்களைக் கண்டும் காணாதது போல் செயற்படுகின்றனர்” என பேராயர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஏராளமானோர் வேலை வாய்ப்பையும், வருமான ஆதாரங்களையும் இழந்துள்ளனர். இலங்கையில் பணவீக்கம் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன், பொருட்களின் விலைகள் மற்றும் சேவைக் கட்டணங்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன. இந்த நிலையில், நாட்டின் மக்கள் தொகையில் கணிசமானோர் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்என பேராயர் மேலும் தெரிவித்தார்..