எமக்கு தீர்வே கிடைக்காதா? வாழ்நாளின் இறுதி வரை போராடத்தான் வேண்டுமா?

எமக்கு தீர்வே கிடைக்காதா

எமக்கு தீர்வே கிடைக்காதா?2009 யுத்த காலம்,  எம் தமிழ் மக்களின்  மனங்களில் என்றுமே ஆறாத ரணங்களாக பதிந்து இருக்கத்தான் செய்கின்றது. எமக்கு தீர்வே கிடைக்காதா?  இந்தப் போர் காலத்தில்   சிறீலங்கா அரச படைகளால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட எம் உறவுகள், இப்போது எவரும் தம்மிடம் இல்லை என்கின்றார்கள்.

எமக்கு தீர்வே கிடைக்காதா?

பிள்ளைகளைத் தொலைத்துவிட்டு, சிறகொடிந்த பறவை போல  தொலைக்கப்பட்ட தம் உறவுகளை  நினைத்தபடியே வீட்டுக்குள்ளும்,  போராட்டப் பந்தலிலும் தம் வாழ் நாட்களைக் கழிக்கின்றனர் இந்த பெற்றோர்களும் உறவினர்களும்.

தள்ளாடும்  முதுமையிலும் தான்  பெற்ற பிள்ளையைக் காணாமல் தேடியலையும் ஒருவர்தான் வைரமுத்து சற்குணசிங்கம். அவர் என்னுடன் பேசும் போது,

“என் பெயர் வைரமுத்து சற்குணசிங்கம். நான் முள்ளிவாய்க்கால் கிழக்கிலே வசித்து வருகின்றேன். எனக்கு மூன்று பிள்ளைகள். அதில் இரண்டாவது மகன்  சற்குணசிங்கம் செவ்வேள்மருகன். இவர்தான்  2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்த காலத்தில்  காணாமல்  ஆக்கப்பட்டவர்.

2009 ஆண்டு தை மாதம் 22 ஆம் திகதி  யுத்த நேரம்.  முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தேராவிலில் போய் இருந்தனாங்கள். அங்க  எங்களோட சாப்பிட்டுவிட்டு வெளியில் போனவர் திரும்பி வரவில்லை.  இறுதியாக இராணுவம் முன்னேறிக்கொண்டு வரேக்க எங்களுக்கு பக்கத்தில் எறிகணை விழுந்து வெடிச்சுது. ஆக்கள் செத்துக் கொண்டிருந்தவையள். அப்போது நாங்கள் அங்கை இருந்து உடையார்கட்டுப் பகுதிக்கு வந்தோம். பின்னர் இடம்பெயர்ந்து வவுனியா செட்டிகுளம் முகாமில் இருந்தனாங்கள். பின்னர் புதுக்குடியிருப்பு திம்பிலி கிராமத்தில் இருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் கொட்டில் போட்டு தந்தார்கள்.

எமக்கு தீர்வே கிடைக்காதா?அங்க இருந்து கொண்டு, நாங்கள் முன்னம்  வாழ்ந்த இடத்தில் உடைஞ்ச வீடுகளைப் பார்க்க முள்ளிவாய்க்காலுக்கு மக்களை செல்ல இராணுவம் அனுமதித்தது.   2012 ஆண்டு ஐப்பசி மாதம்  நானும் மனைவியும் பேருந்தில எங்க காணிகளை பார்த்திட்டு வரும்போது மகனை புதுக்குடியிருப்பு சந்தியில் இராணுவ பாதுகாப்போட இராணுவ வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போனதை என்ரை மனைவி  கண்டிருக்கிறா. கதைக்க முடியவில்லை. கந்தசஷ்டி விரதம், பேருந்தில நிறைய ஆக்கள் அதோட மழையும் பெய்து கொண்டிருந்தது.  பேருந்த  விட்டு இறங்கவும் ஏலாது பேருந்து சென்று கொண்டிருந்தது.   அதன் பின்னர் என்ரை மகன் பற்றின தகவல் இல்லை.

நான் வவுனியா முகாமில இருக்கும் போது எல்லா விசாரணைகளிலும் சொல்லியும் இருக்கிறேன். மகனை காணவில்லை என முறைப்பாடு கொடுத்தும் இருக்கிறேன். முதலில் மகனை காணவில்லை என்றவுடன் வவுனியாவில் இருக்கிற கோழிக்கூட்டு முகாமிற்கு மனைவியும் நானுமா போய் முறையிட்டம். பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில முறைப்பாடு செய்தம். ஒரு அட்டையும் தந்தவர்கள். பின் UNHCR, இலங்கை செஞ்சிலுவை சங்கத்திலும் முறைப்பாடு செய்திருக்கின்றோம்.

விசாரணைக்கு எங்களை கூப்பிட்டிருந்தவையள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் முல்லைத்தீவு கச்சேரிக்கு வரச்சொல்லி அங்கும்  போய் விசாரணையில் என்ரைமகனை இராணுவம் ஏத்தி செல்வதை என் மனைவி கண்டவா  என்று கூறினேன். முறைப்பாடும் கொடுத்திருந்தேன். அதற்கு அவர்கள் உங்கட மகனை  தேடிப்பார்த்து சொல்கிறோம் என்று கூறினார்கள்.

திம்பிலியில் இருக்கும் போதும் புலனாய்வுத் துறையினர் அடிக்கடி வந்து விசாரிப்பினம். அப்போது என்ரை மகனை இராணுவம் கொண்டு போனதை  என்ரை மனைவி கண்டவா என கூறியிருந்தேன். அதற்கு அவர்கள் கூறினார்கள். ஒராள போல ஏழு பேர் இருப்பினம். அது உங்கட மகனா இருக்காது. அது இராணுவமாகத் தான் இருக்கும் என்று. அப்படி இராணுவத்தில் சேர்த்திருந்தா உங்களுக்கு மாதம் மாதம் சம்பளம் வரும் என்று சொன்னார்கள்.

மகனைக் கண்டனான் என்று கிராம சேவையாளர் மூலமாக காவல்துறைக்கு அறிவிக்க இருந்தேன்.   போக்குவரத்தும் பிரச்சினையாக இருந்தது.  அதனால் எதுவும் என்னால் செய்ய முடியவில்லை.

புலனாய்வுத் துறையினர் விசாரணை

எமக்கு தீர்வே கிடைக்காதா?புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்யிறம் என்று  அடிக்கடி வருவார்கள். இவ்வருடம் 2021 ஆண்டு ஆடி மாதமும் வந்திருந்தார்கள்.  “அடிக்கடி  எங்கட பிள்ளையப் பற்றிக் கேட்டு சும்மா எங்கட மனநிலையை குழப்பாதேங்கோ” என அவர்களிடத்தில் கூறினோம். அப்போது  விசாரணைக்காக வந்தவர்கள் , “அப்படி இல்லை இருக்கிறாக்களை விடப்போகினம். அதனால்  விபரங்களை எடுக்கிறோம்” என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை என்ரை பிள்ளையைப் பற்றின எந்த தகவலும் இல்லை. எனக்கும் மகனை தேடியே வயது போயிட்டுது. என்ரை மனைவிக்கும் வயதாகிவிட்டது. எங்கட கடைசி காலத்திலயாவது என்ரை பிள்ளையோட இருக்க ஆசைப்படுறம். என்ரை பிள்ளை வேணும்.  எப்பிடியாவது என்ரை பிள்ளைய மீட்டுத்தர வேண்டும்.”

என்ரை மனைவிக்கும் வயதாகிவிட்டது. எங்கட கடைசி காலத்திலயாவது என்ரை பிள்ளையோட இருக்க ஆசைப்படுறம். என்ரை பிள்ளை வேணும்.  எப்பிடியாவது என்ரை பிள்ளைய மீட்டுத்தர வேண்டும்

இவ்வாறுதான் போராட்டக்களங்களில் இருக்கும் ஒவ்வொரு உறவினர்களும் துயர்களை சுமந்துகொண்டு, பெற்ற பிள்ளை, கணவன், மனைவி, உறவினர்கள் என அனைவரையும்  தொலைத்துவிட்டு,  வயது முதிர்ந்த நிலையிலும் ஓய்வில்லாமல் தேடிக்கொண்டு நிம்மதியிழந்து  வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களுக்கான  நீதி  கிடைக்குமா?  காணாமல் போனவர்கள் திரும்ப வருவார்களா? அல்லது பிள்ளைகளை, உறவுகளை தொலைத்தவர்கள் தம் வாழ்நாள் இறுதி வரை  போராடத்தான் வேண்டுமா?