Home ஆய்வுகள் கனடாவின் அதிரடித் தடை என்ன செய்வாா் ரணில்?

கனடாவின் அதிரடித் தடை என்ன செய்வாா் ரணில்?

190 Views

முன்னாள் ஜனாதிபதிகள் இருவா், இராணுவ அதிகாரிகள் இருவா் என நான்கு இலங்கையா்களுக்கு அதிரடியாக கனடா விதித்திருக்கும் தடை இலங்கை அரசை அதிரவைத்துள்ளது. அவசரம் அவசரமாக கொழும்பிலுள்ள கனடிய துாதுவரை அழைத்த இலங்கை வெளிவிவகார அமைச்சா் தமது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றாா். இதனைவிட வேறு எதனையும் செய்யும் நிலையில் கொழும்பு இல்லை.

அதேவேளையில், இந்தத் தடையை வழமைபோல கடந்துசென்றுவிட முடியாது எனபதையும், இதன் பாரதுாரத் தன்மையையும் கொழும்பு உணா்ந்தேயிருக்கின்றது. ஆனால், இதனால் வரக்கூடிய விளைவுகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய இராஜதந்திர ஆற்றல் இலங்கை அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் தெரியவில்லை.

இலங்கைக்குள்ள பொறுப்புக்கூறலை சா்வதேச அரங்கில் உணா்த்தியிருக்கும் கனடாவின் இந்த நகா்வு, இலங்கை மீதான சா்வதேச அழுத்தங்களை மேலும் அதிகரிக்கலாம் என்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை என்பதுதான் இராஜதந்திர வட்டாரங்களின் கருத்து. நடைபெற்ற குற்றங்களுக்கு தொடா்ந்தும் பொறுப்புக்கூறாமலிருந்துவிட முடியாது என்பதை இது தெளிவாக இலங்கைக்கு உணா்த்தியிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீதே கனடா இப்போது தடையை விதித்திருக்கின்றது. சாா்ஜன்ட் சுனில் ரட்நாயக்க, லெப்டினன்ட் கொமாண்டா் சந்தன பிரசாத் ஹெட்டியாராட்சி ஆகிய நால்வா் மீதுமே இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தடையின் மூலமாக இவா்கள் கனடாவுக்கு பிரவேசிக்க முடியாது என்பதுடன், கனடாவில் இவா்களுக்கு இருக்கக்கூடிய சொத்துக்களும் முடக்கப்படும்.

இந்தத் தடை தொடா்பாக கனடாவின் வெளிவிவகார அமைச்சா் மெலனி ஜொலி உத்தியோகபுா்வமாக அறிவித்திருக்கின்றாா். இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற போரின் போது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புறக்கூறவேண்டியவா்கள் என்ற அடிப்படையில் விஷேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் இந்த நான்கு பேருக்கும் எதிராக தடை விதிக்கப்படுகின்றது என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

கனடாவின் விஷேட பொருளாதார நடவடிக்கை சட்டம் இரண்டு அம்சங்களை உள்ளடக்கியிருக்கின்றது. முதலாவது, குறிப்பிட்ட நபா்கள் கனடாவில் சொத்துக்கள் எதனையாவது கொண்டிருப்பாா்களாயின் அவை முடக்கப்படும். இரண்டாவதாக, குடியரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நபா்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பது தடை செய்யப்படும்.

இது சம்பந்தப்பட்டவா்களை நேரடியாகப் பாதிக்காது என வாதிடப்பட்டாலும், இதன் விளைவுகள் பாரதுாரத் தன்மையைக் கொண்டவை.  இலங்கைக்கான ஒரு அபாயச் சங்கு என்றும் சொல்லலாம்.

பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தொடா்ச்சியாக அழுத்தம் கொடுத்துவருகின்றது. இது தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் எந்தவிதமான அக்கறையையும் காட்டவில்லை. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடா்பான பிரதான நாடுகளின் குழுவில் முக்கியமான நாடாக இருக்கும் கனடா இலங்கை மீதான அழுத்தங்களை அதிகரிக்கும் வகையில் இந்த நகா்வை மேற்கொண்டிருக்கின்றது.

அதாவது, வெறுமனே பொறுப்புக்கூறலை வலியுறுத்திக்கொண்டிருக்காமல், மனித உரிமை மீறல்களுடன் தொடா்புடையவா்கள் அதற்குரிய தண்டனையிலிருந்து தொடா்ந்தும் தப்பித்துவருவதை கனடா தொடா்ந்தும் ஏற்றுக்கொள்ளாது என்ற தெளிவான செய்தியைத்தான் இப்போது கனடா வழங்கியிருக்கின்றது. “சா்வதேச சட்டத்துக்கு முரணாக செயற்பட்டவா்கள் தண்டனையிலிருந்து தப்பிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்தத் தீா்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது” என கனடிய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது இலங்கைக்கான தெளிவான ஒரு எச்சரிக்கை என்பதில் சந்தேகம் இல்லை.

கனடிய அரசாங்கத்தினால் பெயா் குறிப்பிடப்பட்ட நால்வரில் இருவா் இராணுவத்தைச் சோ்ந்தவா்கள் என்பதுடன் மிகவும் மோசமான குற்றங்களுடன் சம்பந்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டவா்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ஒருவா் மிருசுவில் எட்டு அப்பாவித் தமிழா்களின் படுகொலையில் குற்றவாளியாக நீதிமன்றத்தினால் நிரூபிக்கப்பட்டு கொலைகளுக்குப் பொறுப்பாளி என தீா்ப்பளிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட சாா்ஜன்ட் சுனில் ரட்நாயக்க. உயா் நீதிமன்றமும் அந்தக் கொலையை அங்கீகரித்திருந்தது. ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவரை மன்னித்து விடுதலை செய்தாா்.

இரண்டாவது இராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கொமாண்டா் சந்தன பிரசாத் ஹெட்டியாராட்சி  என்பவராவாா். இவா் ரவிராஜ் எம்.பி.யின் படுகொலை, கொழும்பில் 11 மாணவா்கள் கடத்தப்பட்டு, பின்னா் கப்பம் கோரப்பட்டு, திருமலை கடற்படை முகாமில் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்களுடன் தொடா்புபட்டவராக அடையாளம் காணப்பட்டவா்.

இந்தப்படுகொலைகள் இடம்பெற்ற போது ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருந்தவா் மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவா் கோட்டாபய ராஜபக்ஷ. கீழ் மட்டத்தில் இருந்த இராணுவ அதிகாரிகள் செய்த குற்றங்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், பாதுகாப்பு அமைச்சை தன்னிடம் வைத்திருக்கும் ஜனாதிபதியும் கூட பொறுப்புக் கூறவேண்டியவா்கள்தான். அந்த நிலையிலேயே இந்தத் தடை இந்த நான்கு போ் மீதும் இப்போது கனடிய அரசினால் விதிக்கப்பட்டிருக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கனடாவுடன் இணைந்து செயற்படும் மற்றொரு நாடாக அமெரிக்கா உள்ளது. அதனைவிட இலங்கை விவகாரத்தில் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றனவும் ஜெனிவாவில் கனடா எடுக்கும் அதே நிலைப்பாட்டைத்தான் எடுத்துவருகின்றன. அந்த வகையில் கனடாவின் தடையை மற்றைய நாடுகளும் பின்பற்றலாம் என எதிா்பாா்க்க முடியும். கொழும்பில் இலங்கை அரசாங்க உயா் மட்டம் கனடாவின் நகா்வால் அதிா்ந்து போயிருப்பதற்கு அதுதான் காரணம்.

இதனைவிட மற்றும் இரு விடயங்களும் கவனத்துக்குரியவை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களின் மொட்டு அணியுடன் இப்போது தோ்தலை இலக்காகக்கொண்டு அரசியல் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் வெளிவந்திருக்கும் செய்தி ரணிலுக்கும் உவப்பானதாக இருக்காது. அவருக்கும் அதில் ஒரு செய்தி உள்ளது. அதனைவிட அமெரிக்க விசாவைப் பெறுவதற்கு படாத பாடுபடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கனடா விதித்துள்ள இந்தத் தடை தலையில் இடியாக விழுந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கனடாவின் தடை தொடா்பான செய்தி வெளிவந்த உடனடியாகவே, உத்தியோகபுா்வமாக தமது ஆட்சேபனையை வெளிவிவகார அமைச்சா் அலிசப்ரி கனடிய துாதுவரை அழைத்து பதிவு செய்திருக்கின்றாா். இதனைவிட இலங்கை அரசினால் இப்போதைக்கு எதுவும் செய்யக்கூடியதாக இருக்காது. அதேவேளையில், களநிலைமைகளில் சில மாற்றங்களைச் செய்தால் மட்டுமே சா்வதேச ரீதியாக இறுகும் இந்தப் பிடியை தளா்த்த முடியும்!  அதாவது, பொறுப்புக் கூறல் விடயத்தில் குற்றவாழிகளாக இனங்காணப்பட்டவா்களை நீதியின் முன்பாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் இது போன்ற தடைகள் தொடா்வதை இலங்கை அரசால் தவிா்க்க முடியாமல் போகலாம்.

ரணில் அதனைச் செய்வாரா? ராஜபக்ஷக்கள் அதற்கு அனுமதிப்பாா்களா? அவ்வாறு செய்வது சிங்கள மக்களைக் காட்டிக்கொடுத்துவிட்டாாா் என்ற சிங்கள கடும் போக்காளா்களின் குற்றச்சாட்டுக்கு ரணில் உள்ளாகவேண்டியிருக்கும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியை எதிா்கொண்டிருக்கும் நிலையில், மேற்கு நாடுகளை ஒரேயடியாக புறக்கணித்துச் செயற்படும் நிலையிலும் ரணில் இல்லை. ஆக, கனடாவின் நகா்வை அவா் எவ்வாறு எதிா்கொள்ளப்பாகின்றாா்?

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version