தாய்மாருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு எதிராக யாழில் அணி திரளுமாறு அழைப்பு

அநீதிக்கு எதிராக யாழில் அணி திரளுமாறு அழைப்பு

அநீதிக்கு எதிராக யாழில் அணி திரளுமாறு அழைப்பு

யாழ்ப்பாணத்தில் பிரதமரின் வருகையின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தாய்மாருக்கு எதிராக காவல் துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க அணி திரளுங்கள் என வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ. கனகரஞ்சினி தெரிவித்தார்.

எதிர்வரும் 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பேரணி தொடர்பில் வவுனியா மாவட்ட பொது அமைப்புகளுக்கு விளக்கமளித்தும் ஆதரவு கோரியும் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

பிரதமர் மகிந்தவின் யாழ் வருகையை எதிர்த்து கண்டன பேரணியை நடாத்துவதற்காக நாம் சென்றிருந்தபோது எமது தாய்மார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. கொடூர யுத்தத்தினையும் இன அழிப்பையும் மேற்கொண்ட இந்த அரசாங்கம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் இந்நிலையில் வடக்கு கிழக்கிற்கு வருகை தந்து எங்களுடைய பெறுமதி மிக்க பிள்ளைகளின் எங்களுடைய உறவுகளின் இரத்தத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தினை திறந்து வைப்பதற்காக எவ்வாறு வரலாம்.

அவருடைய வருகை போலித்தனமான வருகை. அவர் இங்கு வந்ததற்கான காரணம் எமது பகுதிகளில் நில ஆக்கிரமிப்பை செய்து பௌத்தவிகாரைகளை அமைத்து பௌத்தத்தினை பரப்புவதற்காகவேயாகும். எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் என்ன ஆனார்கள்? என இந்த அரசாங்கம் கூற முடியாத போது எங்களுடைய பிள்ளைகள் தவழ்ந்து நடந்து திரிந்த மண்ணிலே வந்து நிகழ்வுகளை நடத்த என்ன தேவை ஏற்பட்டுள்ளது. எனவே நாம் அதனை எதிர்த்தோம்.

இந்த கொடூர யுத்தத்தினையும் இன அழிப்பினையும் மேற்கொண்ட இந்த அரசானது அன்றைய தினம் எங்களுக்கு செய்த துன்புறுத்தல்கள் எங்களுக்கான அநியாயங்கள் மானபங்கப்படுத்தி கட்டிய மனைவியை கூட கணவன் தொட்டிராத இடங்களிலெல்லாம் இந்த வயது முதிர்ந்த அம்மாக்களை தொட்டு அடித்து இரும்பு கம்பிகளால் தாக்கினார்கள்.

உண்மைக்கும் நீதிக்குமாக போராடும் எம் தாய்மாருக்காக நடந்த அநீதியை கண்டித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 யாழ்ப்பாணம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முத்தவெளி மைதானம் வரையும் கண்டன பேரணியை நடத்தவுள்ளோம். மட்டுவிலில் இடம்பெற்ற அநீதிக்கு எதிராகவும் அதனை கண்டித்தும் இவ்வாறான அராஜகங்கள் இனிமேல் நடக்க கூடாது என்பதற்காகவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

எனவே ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருக்கும் அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளுர் அமைப்புக்கள் வர்த்தக சங்கங்கள் உட்பட அனைத்து பொது அமைப்புக்கள் விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்ட அநீதிக்கு எதிராக குரல்கொடுக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவித்தார்.

Tamil News