Tamil News
Home செய்திகள் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள் – விந்தன் கனகரத்தினம்

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள் – விந்தன் கனகரத்தினம்

தமிழர்களுக்கு எதிரான அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் பொருளாளருமான விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடகங்களை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தையிட்டி பகுதியிலே ஒரு பிரமாண்டமான புத்தவிகாரை இராணுவத்தினருடைய உதவியுடன் கட்டப்பட்டிருக்கின்றது. இவ்வாறான பல்வேறு அத்துமீறல்களை அரச படைகளும், அரசும் தொடர்ந்து வண்ணமே உள்ளன.

இந்த லட்சணத்திலே இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்க அண்மையிலே வவுனியாவில் தமிழ் கட்சிகளுடன் பேசி இனப்பிரச்சினைகளை தீர்ப்போம் என்றார்.

இந்த சூழ்நிலையிலே நாங்கள் ஜனாதிபதியினை நோக்கி தமிழ் மக்கள் சார்பிலே சொல்லக்கூடியது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள் என்பவற்றை உடனடியாக உங்களால் தடுத்து நிறுத்த முடியும்.

அதனை செய்யாது, எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து, எங்களை அழித்து கொண்டு எங்கள் கலாசாரத்தை, எங்கள் இருப்புக்களை இல்லாமல் செய்து கொண்டு மறுபுறமே இவ்வாறான கோரிக்கைகளை விடுகின்றீர்கள்.

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு இன பிரச்சனை தொடர்பில் பேச அழையுங்கள்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version