பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வலியுறுத்தும் போராட்டத்திற்கு ஆதரவு அழைப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க

தமிழ் மக்களை அடக்கியொடுக்க பயன்படுத்தப்பட்டுவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க அழுத்தங்களை வழங்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவரும் கோறளைப்பற்று பிரதேசசபை உறுப்பினருமான கி.சேயோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த இலங்கை தேசமானது அனைத்து மக்களுக்கும் பொதுவான நாடு என்று கூறப்படுகின்றபோதிலும் இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சட்டம் பெரும்பான்மை சமூகத்திற்கு ஒரு சட்டமே பயன்படுத்தப்படுகின்றது.

இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கு நடக்கும் அநீதிகளையும் அத்துமீறல்களையும் வெளிப்படுத்தும்போது பயங்கரவாதடைச்சட்டம் என்னும் இருப்புக்கரம்கொண்டு அடக்குவதற்கான நடவடிக்கைகளே தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்த வரையில் இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. நல்லாட்சிக்காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்திவருகின்றது.

தற்போதைய ஆட்சிக்காலத்தில் ஜனநாயகத்தினை குழிதோண்டி புதைக்கும் வகையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக பல தமிழ் இளைஞர்களும்,ஊடகவியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிலையினை காணமுடிகின்றது.

தனது இனத்திற்காக உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூரமுடியாத வகையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதுடன் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடாத்துவதற்கும் இந்த சட்டத்தின் மூலம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் காரணமாக வடகிழக்கு உட்பட நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வாழும் சிறுபான்மை சமூகம் மட்டுமன்றி பெரும்பான்மை சமூகத்தினை சேர்ந்தவர்களும் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ளதை காணமுடிகின்றது.

இதன்கீழ் இலங்கை தமிழரசுக்கட்சியும் வாலிப முன்னணியும் இணைந்து நாடளாவிய ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை இரத்துச் செய்யக்கோரி கையெழுத்திடும் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றது. இவ்வாறான நிலையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கையெழுத்துப் போராட்டத்தினை முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை சனிக்கிழமை திங்கட்கிழமை திருகோணமலையிலும் திங்கட்கிழமை வவுனிவாவில் இந்த கையெழுத்துப் பெறும்போராட்டம் முன்னெடுக்கப் படவுள்ளது.
இந்த போராட்டத்தில் அனைவரையும் பங்குகொண்டு ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News