இலங்கையின் எரியும் நிலைமைகளும், தமிழகத்தில் தஞ்சம் தேடும் அவலமும் | பி.மாணிக்கவாசகம்

தமிழகத்தில் மீண்டும் தஞ்சம்

தமிழகத்தில் மீண்டும் தஞ்சம் தேடும் அவலம்

இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சி முறை அதள பாதாளத்தை நோக்கி நாட்டைத் தள்ளிச் சென்று கொண்டிருக்கின்றது. அவர்களின் நுண்ணறிவற்ற அரசியல் கொள்கைகளும், தீர்க்கதரிசனம் கொண்ட இராஜதந்திரமற்ற போக்கும் இந்த நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளன.

நிரந்தர ஆட்சி அதிகாரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்ற அரசியல் மோகத்தில் அவர்கள் ஆழ்ந்திருக்கின்றார்கள். பன்மைத் தன்மை கொண்ட தேசிய உணர்வும் தேசப்பற்றும் அவர்களிடம் காணப்படவில்லை. சுயலாப அரசியல் சேற்றில் அவர்கள் ஆழமாக வேரூன்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

பௌத்த சிங்களத் தேசிய உணர்வே அவர்களுடைய குறுகிய வட்டத்திலான அரசியல் சாணக்கியப் போக்காக அமைந்துள்ளது. தாங்கள் மட்டுமே ஆட்சிப் பீடத்தில் பரம்பரை பரம்பரையாக வீற்றிருக்க வேண்டும் என்ற நோக்கில் குடும்ப ஆட்சி முறையை அவர்கள் ஓரளவு நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு, பௌத்த சிங்களத் தேசியவாதத்தையும், சிறுபான்மை இன மக்கள் மீதான இன, மத பேதப் பிரசாரத்தையும் அவர்கள் தமது அரசியலுக்கான ஆயுதமாகக் கொண்டிருக்கின்றார்கள். இந்த அரசியல் கொள்கையில் பற்றுறுதி கொண்டி ருப்பதற்கு, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அவர்கள் அடைந்த இராணுவ வெற்றி தூண்டுகோலாக அமைந்துவிட்டது.

ஆனாலும் இராணுவ, இனவாத அரசியல் போக்கும், அதிகாரத்தின் மீதான தீராத மோகமும் சிங்கள மக்கள் மத்தியில் அவர்கள் ஏற்கனவே கொண்டிருந்த அரசியல் செல்வாக்கை வீழ்ச்சி அடையவே வழிசமைத்திருக்கின்றது.

நாட்டின் முக்கிய விடயங்களைக் கவனத்திற் கொள்ளவில்லை

இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி முறையானது, ஏனைய உலக நாடுகளின் ஆட்சி முறையில் இருந்து வேறுபட்டது. இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறை. இதன் ஊடாக ஏற்கனவே ஜனாதிபதிக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள மேன்மையான அதிகாரங்களை மேலும்  அதிகரித்துக் கொள்வதற்காகவே தேர்தல்களில் அமோக வெற்றி பெற்ற சூட்டோடு சூடாக 20 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக அவர்கள் நிறைவேற்றிக் கொண்டார்கள்.

அதனையடுத்து, நினைத்ததைச் சாதிக்கின்ற வகையிலான அதிகார பலத்தைக் கொண்டுள்ள போதிலும், கோட்டாபய ராஜபக்சவுக்கு ஜனாதிபதியின் ஆட்சி அதிகாரம் தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் துணை புரியவில்லை. அவருடைய இராணுவமய அரசியல் போக்கானது, ராஜபக்சக்களை தேர்தல்களில் ஆதரித்து வாக்களித்த பௌத்த சிங்கள மக்களையே அவருக்கு எதிராக இப்போது திருப்பி விட்டிருக்கின்றது.

மக்களின் இயல்பான வாழ்க்கைக்கு தூய குடிநீர், உணவு, மருந்து என்பன தட்டுப்பாடின்றியும் தடங்கலின்றியும் கிடைக்க வேண்டும். அதற்கு அவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்யவும், சுதந்திரமாகச் செயற்படுவதற்கும் உரிய நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்கின்றோம் என்ற தேசிய பாதுகாப்பு முலாம் பூசப்பட்ட ராஜபக்சக்களின் இராணுவ ஆட்சி முறையானது, இயல்பு வாழ்க்கை வாழ்வதற்காக மக்கள் எதிர் பார்த்திருந்த நிலைமைகளை உருவாக்க உதவவில்லை. ஆனால் அது, எதிர்மாறான – நேர் முரணான ஒரு நிலைமையையே உருவாக்கியுள்ளது.

தேசிய பாதுகாப்பில் அவர்கள் காட்டிய அரசியல் ரீதியான அக்கறையும், ஆர்வமும் நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பில் செலுத்தப்படவில்லை. அதேபோன்று, அவர்களுடைய இயல்பு வாழ்க்கைக்கான பாதுகாப்பிலும் அவர்கள் போதிய கவனம் செலுத்தவில்லை. முக்கியமாக நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் தவறிவிட்டார்கள்.

விடுதலைப்புலிகளை யுத்தத்தில் வெற்றிகொள்வதற்காக உலக நாடுகளிடம் இராணுவ ரீதியாக உதவிகளைப் பெற்றுக்கொண்டார்கள். யுத்தத்தை அதீத இராணுவ பலத்துடன் கொண்டு நடத்துவதற்காக சர்வதேச நாடுகளிடம் கடனுதவிகளையும் பெற்றுக் கொண்டார்கள். இதன் மூலம் இராணுவத் தளபாடங்களை வாங்கிக் குவித்தார்கள். நாட்டில் இராணுவத்தை அதி உன்னத நிலையில் வைத்து பொருளாதார ரீதியாகப் பேணி வந்தார்கள். இதற்கு அவர்களின் இராணுவ வெற்றிமய அரசியல் போக்கே தூண்டுகோலாக அமைந்துவிட்டது.

நலிவடைந்த பொருளாதாரமும் கோவிட் 19 நோய்த்தொற்று நிலைமையும்

யுத்தத்தில் வெற்றி கொண்ட பின்னர், அவர்கள் இரண்டு முக்கிய விடயங்களைப் புறக்கணித்து விட்டார்கள். முதலாவது யுத்த வெற்றி மமதையை சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ் மக்கள் மீது செலுத்தினார்களே தவிர, அவர்களுடன் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தவில்லை. ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை.

இரண்டாவதாக அளவுக்கு அதிகமாக ஏற்பட்டிருந்த யத்த செலவினம் காரணமாக அதிகரித்திருந்த, அந்நிய நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடவில்லை. குறிப்பாக யுத்தம் காரணமாக நலிவுற்றிருந்த நாட்டின் பொருளாதாரத்தைத் தட்டி நிமிர்த்தி வலுப்படுத்துவதில் அவர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், இராணுவத்தை முதன்மைப் படுத்துவதிலும், இராணுவத்தினரின் நலன்களை மேம்படுத்துவதிலும் ஈடுபாடு காட்டிய ராஜபக்சக்கள் நாட்டின் பொருளதாரம் நாளுக்கு நாள் சீரழிந்து சென்றதைக் கவனத்திற் கொள்ளவில்லை. இதே நிலைமையே நல்லாட்சி அரசாங்கத்திலும் நிலவியது.

கடன் சுமை ஒரு பக்கம். நாட்டின் உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மறுபக்கம் என நாட்டின் பொருளாதார நிலைமை வலுவிழந்து சென்றதை அவர்கள் கவனிக்க வில்லை. போர் வெற்றிமய அரசியலில் மூழ்கியிருந்த அவர்கள், பயங்கரவாதம் மீண்டும் உயிர்பெற்றுவிடும் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து, போரினால் நலிவடைந்திருந்த தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அரசியல் ரீதியாகச் செயலற்றவர்களாக்குவதிலேயே தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இத்தகைய ஒரு பின்னணியிலேயே, 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியைத் தழுவியிருந்த ராஜபக்சக்கள் 2019 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, திடீரென ஏற்பட்ட கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவல், ஏற்கனவே நலிவடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சீரழியச் செய்தது.

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்திய போதிலும், பொருளா தாரத்தையும் நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த அவர்கள் தவறிவிட்டனர்.

இரசாயன உள்ளீடுகளின் இறக்குமதித் தடையின் தாக்கம்

அது மட்டுமல்லாமல், கடன் சுமை ஏறியிருந்த நிலையில் அந்நியச் செலாவணியின் வருகையும் கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்தது. நிலைமையை சீர் செய்வதற்குப் பதிலாக ஜனாதிபதி கோட்டாபயவின் நடவடிக்கைகள் மோசமடையவே செய்திருந்தன.

குறிப்பாக விவசாயத்திற்கு அவசியமான இரசாயன உள்ளீடுகளின் இறக்குமதியைத் திடீரென முழுமையாக நிறுத்தி, சேதனப் பயிர்ச்செய்கையில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என அதிரடியாக அவர் உத்தரவிட்டார். நீண்ட காலமாக இரசாயன உள்ளீடுகளைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த நாட்டு விவசாயிகள் திடீரென சேதனப் பயிர்ச்செய்கைக்குத் தம்மை மாற்றிக்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள். போதிய அளவில் சேதனப் பசளை கிடைப்பதற்கான நடவடிக்கைளை அரசு துரிதமாக மேற்கொள்ளவுமில்லை.

இரசாயன உள்ளீடுகள் இல்லாமையினால் விவசாயிகள் பலரும் நெற்செய்கையைக் கைவிட நேர்ந்தது. விவசாயத்தில் ஈடுபட்டவர்களும் தமது வழமையான முறையில் அல்லாமல்,  அரைவாசி கால்வாசி இடப்பரப்பிலேயே நெற்செய்கையை மேற் கொண்டார்கள். இதனால் 2021 ஆம் ஆண்டின் காலபோக நெற்செய்கை 50, 60 வீதம் பாதிக்கப்பட்டது. நாட்டின் வருடாந்த நெல் உற்பத்தியும் அரிசியின் கையிருப்பும் பாதிக்கப்பட்டது.

இரசாயன உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்பட்ட டொலர்களை மிச்சம் பிடிப்பதையே பிரதான இலக்காகக் கொண்டு அந்த இறக்குமதித் தடையை ஜனாதிபதி கோட்டாபய ஏற்படுத்தியிருந்தார்.

ஆனால் இரசாயன உள்ளீடுகளின் வருகை திடீரென நிறுத்தப்பட்டதனால், நாட்டின் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற பிரதான தொழிற்துறைகளாகிய பெருந் தோட்டத் துறையின் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி என்பன பாதிக்கப்பட்டன. தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியின் மூலம் கிடைத்த அந்நியச் செலாவணியும் குறைவடைந்தது. டொலர்களை மிச்சம் பிடிப்பதற்காக இரசாயனப் பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை டொலர்களின் வருகையைப் பாதிப்பதாக அமைந்துவிட்டது.

தமிழகத்தில் தஞ்சம் புகச் செய்துள்ள பஞ்ச நிலைமை 

மறுபக்கத்தில் நெல் உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு நாட்டில் அரிசிக்குப் பற்றாக் குறையை ஏற்படுத்தியது. நாட்டு மக்களின் பிரதான உணவு அரிசியாகும். குறிப்பாக சிங்கள மக்கள் நாளொன்றுக்கு மூன்று வேளையும் அரிசியையே தமது பிரதான உணவாக உட்கொள்கின்ற பழக்கத்தைக் கொண்டவர்கள். அரிசிக்கு ஏற்பட்ட பாதிப்பு மக்களின் உணவுத் தேவையையும் நேரடியாகப் பாதிப்பதாக அமைந்துவிட்டது.

மறுபுறத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு, உழுந்து என்பவற்றையும் அரசு ஏற்கனவே தடை செய்திருந்தது. இதுவும் நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பைப் பாதிப்பதாக அமைந்துவிட்டது. டொலரின் அரச கையிருப்பு மிக மோசமாக வீழ்ச்சி அடைந்ததனால், அதன் பெறுமதி இலங்கை நாணயத்தில் கட்டுக்கடங்காமல் எகிறியது. நிலைமையைச் சமாளிக்க பணத்தாள்களை வரை முறையை மீறி கோட்டாபய அரசாங்கம் அச்சிட்டுத் தள்ளியது. இது நாட்டில் மோசமான பணவீக்கத்தை ஏற்படுத்தியது. பணவீக்கத்தின் விளைவு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், எரிபொருள் அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகள் மும்மடங்கு, நான்கு மடங்கு உயர்வதற்கு வழியேற்படுத்தி விட்டது.

இதனால் ஆயிரக்கணக்கான உணவு விடுதிகள் இழுத்து மூடப்பட்டன. சமையல் எரிவாயு இல்லாமையினால், மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்தது. அதற்கும் தட்டுப்பாடு எற்பட்டதனால் மக்கள் எரிபொருள் நிலையங்களில் பல மணித்தியாலங்கள் எரிக்கும் வெய்யிலில் வரிசையில் நின்று தவிக்க நேர்ந்தது. இந்த அவலம் மூன்று பேருடைய உயிர்களைக் குடித்துவிட்டது. வரிசையில் நிற்கும்போது ஏற்பட்ட தகராறு ஒருவரின் கொலையில் முடிந்து வரிசை யுகத்தின் கொடுமையை வெளிப்படுத்தியது.

உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை. சமையல் எரிவாயு உட்பட டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டினால் அவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியது. உணவு மற்றும் எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்குப் போதிய டொலர்களின்றி அரசாங்கம் அல்லாடியது. கூடிய விலையைக் கொடுத்தும் மக்கள் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இத்தகைய ஒரு பின்னணியிலேயே வட மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக தமிழகத்தில் தஞ்சமடையத் தொடங்கியிருக்கின்றார்கள்.

போர்க்கால நிலைமை மீண்டும் திரும்புமோ……?

தமிழகத்தில் தஞ்சம் தேடிச் சென்ற 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று தமிழகக் கடலோரத் திடல் ஒன்றில் இறக்கிவிடப்பட்டிருந்த நிலையில், கண்டு பிடிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மேலும் பத்துப் பேர் படகுகளில் இராமேஸ்வரத்தைச் சென்றடைந்தனர். இவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் இந்திய அதிகாரிகளினால் தங்க வைத்து பராமரிக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறு வெளிச்சத்திற்கு வராத நிலையில் 47 பேர் இலங்கையின் வடகடலோரப் பிரதேசங்களில் இருந்து தமிழகத்திற்குச் சென்றடைந்துள்ளதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. யுத்த நிலைமை காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் தஞ்சம் புகுந்திருந்து தாயகம் திரும்பியிருந்தவர்களே இவ்வாறு தமிழகத்திற்குத் திரும்பியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது,

தமிழக முகாம்களுக்கு வெளியில் வாழ்ந்து வந்தவர்களே தாங்கள் முன்னர் வாழ்ந்த இடங்களில் இவ்வாறு தஞ்சம் தேடிச் சென்றடைந்துள்ளதாகத் தெரிகின்றது. இலங்கை நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படாவிட்டால், தமிழகத்தில் தஞ்சமடைவோரின் எண்ணிக்கை யுத்த காலத்தைப் போன்று பல மடங்காக அதிகரிக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.

Tamil News