வரவு செலவுத் திட்ட திருத்தச் சட்டமூலம், 22வது திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய கொள்கை விளக்க உரை தொடர்பில் இரண்டு நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளன.

இன்று காலை 10மணிக்கு இந்த விவாதம் ஆரம்பமாவதுடன் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்திற்கான யோசனையை முன்வைத்து முதலாவது உரையை எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்‌ஷ்மன் கிரியெல்ல நிகழ்த்தவுள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிகழ்த்தப்பட்ட கொள்ளை விளக்க உரை தொடர்பில் 3நாள் விவாதம் நடத்த வேண்டும் என கட்சித் தலைவர்கள் பலரும் பாராளுமன்ற விவகாரம் தொடர்பான தெரிவுக்குழுக்கூட்டத்தில் சபாநாயகரிடம் வேண்டுகோள்விடுத்திருந்தனர். அதற்கிணங்கவே இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு அதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 3ஆம் திகதி மேற்படி கொள்கை விளக்க உரையை பாராளுமன்றத்தில் ஆற்றியிருந்தார்.

அதேவேளை, வரவுசெலவுத் திட்ட திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.பாராளுமன்றம் இன்று பி.ப. 1.00 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவின் கூடவுள்ளது. அதற்கிணங்க சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் பி.ப. 4..30 மணிக்கு நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் நாளை 10 ஆம் திகதி மற்றும் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆகிய தினங்களில் காலை 10 மணிமுதல் பி.ப. 430 மணி வரை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.