ஆரம்பிக்கப்பட்டது மட்டக்களப்பில் பௌத்த மயமாக்கல்!

சிறிலங்கா அரசுத்தலைவரின் கிழக்கு தொல்பொருட்கள் செயலணி ஒன்று அமைக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசபடைகளின்
துணையுடன் பௌத்த பிக்குகளால அத்துமீறல்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று தடயங்களைக்கொண்ட குசனார்மலைக்கு பௌத்த துறவிகள் சிலர் வருகைதந்த காரணத்தினால் அங்கு முறுகல் நிலையேற்பட்டது.

இராணுவ மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்துடன் வருகைதந்த பிக்குகள் அங்கு மலையினை பார்வையிட்டதுடன் அப்பகுதி தமக்கு சொந்தமான பகுதியென்றும் தெரிவித்துச்சென்றிருக்கின்றனர்.

இதேபோன்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதிக்கும் பௌத்த பிக்கு ஒருவரும் பெருமளவான படையினரும் சென்று அங்குள்ள காணியொன்றை பார்வையிட்டுள்ளதுடன் அது தமக்கானது என அங்குள்ள மக்களிடம் தெரிவித்துள்ளர்.

வேற்றுச்சேனையில் ஒதுக்குப்புறமாகவுள்ள பகுதியொன்றினையே குறித்த பௌத்த பிக்கு இராணுவத்தினர்,பொலிஸார் சகிதம் வந்து பார்வையிட்டுச்சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.IMG 20200704 WA0079 ஆரம்பிக்கப்பட்டது மட்டக்களப்பில் பௌத்த மயமாக்கல்!

குறித்த பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பாக அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க முற்பட்டபோது அங்குவந்த வெல்லாவெளி பொலிஸார் அவற்றினை தடுத்துநிறுத்தியதாகவும் குறித்த பகுதி அரச பகுதி என்பதனால் அவற்றில் எந்த நடவடிக்கையினையும் முன்னெடுக்கவேண்டாம் என கூறிச்சென்றதாகவும் பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

அவ்வாறு பொலிஸார் தலையிட்டதன் பின்னர் இன்று பொலிஸார் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் பௌத்த பிக்கு ஒருவர் அப்பகுதிக்குவந்து சென்றது தொடர்பில் வெல்லாவெளி பிரதேச மக்கள் அதிப்தி தெரிவித்துள்ளனர்.

வேற்றுச்சேனைக்கு அண்மையில் மண்டூர் கந்தசுவாமி ஆலயமும் காணப்படும் நிலையில் பௌத்த தேரர்களின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இவ்வாறான தேரர்களின் செயற்பாடுகளுக்கு சில தமிழ் அதிகாரிகளும் துணை நிற்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அண்மையில் கிழக்கு தொல்பொருட்கள் செயலணி ஒன்று அமைக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறன அத்துமீறல்கள் இடம்பெற்றுவருகின்றன.

தேர்தல் திருவிழாவில் மூழ்கிக் கிடைக்கும் தமிழ் அரசியல் வாதிகள்
இது பற்றி கண்டுகொள்ள போவதில்லை.உணர்வுள்ள தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு இதனை எதிக்காவிடின்,இந்த ஆக்கிரமிப்பை அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்கு கொண்டுவரவிடின் இங்கு தமிழரின் வரலாற்று இருப்பு என்பது இல்லாததொன்றாகிவிடும்.