Tamil News
Home செய்திகள் திருமலையில் தடையை மீறி பௌத்த நிகழ்வு முன்னெடுப்பு

திருமலையில் தடையை மீறி பௌத்த நிகழ்வு முன்னெடுப்பு

இன நல்லிணக்கத்தை பாதிக்கும் என்று திருகோணமலையில் பௌத்த மத நிகழ்வை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டிருந்த இடத்துக்குள் நுழைந்து தேரர்களும் – சிங்கள மக்களும் நேற்று நிகழ்வை முன்னெடுத்தனர்

திருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்பாக தொல்லியல் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தாய்லாந்தில் இருந்து வருகை தந்திருக்கும் பௌத்த தேரர்களின் உபசம்பதா நிகழ்வுக்காக பிரித் ஓதும் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.

எனினும், இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டால் அது இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கலாம் என்ற அடிப்படையில் மாவட்ட அரசாங்க அதிபரினால் அந்நிகழ்வுகளை அவ்விடத்தில் நடத்த அனுமதி வழங்குவது தவிர்க்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பௌத்த தேரர்கள், சிங்கள மக்கள், திருகோணமலையில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து சமய நிகழ்வுகளை முன்னெடுத்தனர். அத்துடன், தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள் முப்படையினரின் பாதுகாப்பையும் மீறி வலுக்கட்டாயமாக நுழைந்து தமது சமய நிகழ்வுகளை நேற்று நடத்தினர்.

தாய்லாந்து உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 வருட பூர்த்தியை நினைவுகூரும் நோக்கில் திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிய பாத யாத்திரையை முன்னெடுக்கும் முகமாக தாய்லாந்தில் இருந்து வருகைதந்த பௌத்த தேரர்கள், இயந்திரப் படகுகள் மூலமாக திருகோணமலைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version