Tamil News
Home செய்திகள்  நீதிமன்றக்கட்டளையை மீறி குருந்தூர்மலையில் தொடரும் பௌத்த கட்டுமானப் பணிகள் -துரைராசா ரவிகரன் சிறப்பு செவ்வி

 நீதிமன்றக்கட்டளையை மீறி குருந்தூர்மலையில் தொடரும் பௌத்த கட்டுமானப் பணிகள் -துரைராசா ரவிகரன் சிறப்பு செவ்வி

குருந்தூர்மலையில் பௌத்த கட்டுமானப் பணிகள் இனி மேற்கொள்ளப்படக் கூடாது என்ற முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளையை மீறி அங்கு கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி…

கேள்வி-முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பில், நில அபகரிப்புக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து இருந்தீர்கள்? இது குறித்து கருத்து கூற முடியுமா?

பதில்-

குருந்துார் மலையை அண்மித்த பகுதியில் நில அளவை திணைக்களமும் பிரதேச சபை செயலகமும் இணைந்து காணி அளவீடு சமந்தமாக பொது மக்கள் எங்களுக்கு அறியத்தந்திருந்தார்கள்.  அதன் நிமித்தம் நாங்கள்  கூடியிருந்தோம். அவர்களும் அங்கு வருகை தந்திருந்தார்கள்.

இந்த சம்பவத்தை சற்று விரிவாக பார்த்தோமானால்  குருந்துார் மலைப்பகுதியில் 1933ம் ஆண்டு வர்த்தமானியில் வெளியிட்டதன் படி 78 ஏக்கர் 2 ரூட் 16 பேர்ச் காணி தொல்லியல் திணைக்களத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் 5 ஏக்கர் இன்னும் வழங்கப்பட வேண்டும் என்று அண்மையில் வவுனியா மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் கூறியதாக தெரிவித்து அந்த 5 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்வதற்காக தற்போது இந்த அளவை  திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளார்கள். ஆனால் காணி சம்பந்தப் பட்ட நாங்கள் பொது மக்களோடு எதிர்ப்பை தெரிவித்திருந்தோம்.

அத்தோடு எங்களுக்கான காணியில் எங்களை குடியேற்றிவிட்டு, குறிப்பிட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை எடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை என பொது மக்கள் நில அளவையாளர்களிடம் தமது எதிர்ப்பின் போது தெரிவித்தனர்.

1984ம் ஆண்டு தண்ணி முறிப்பு பகுதியில் இருந்து போர் காரணமாக இடம்பெயர்ந்து இன்று வரையில் மீள் குடியேற்றம் செய்யப்படாத குறித்த பகுதி மக்கள் இன்றும் பெரும் இடர்களை எதிர் நோக்கிய வண்ணம் வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் 2009ம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதன் பின் 2010ம் ஆண்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட போது கூட கரைத்துறைப்பற்று பகுதியில் ஆண்டான் குளம் மற்றும் தண்ணிமுறிப்பு என்ற இரு கிராமங்களும் இன்று வரையில் குடியேற்றப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டப்பட்டது.

தொல்லியல் துறைக்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் என ஜனாதிபதிக்கு கூறத் தெரிகின்றது. ஆனால் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் காணிகளை விடுவிக்கத் தெரியவில்லை. ஏன் இந்த நிலை நாங்களும் இந்த நாட்டின் மக்கள்தான்?  எனவேதான் மக்களுக்கான காணிகளை வழங்கி விட்டு தொல்லியல் திணைக்களத்திற்கான காணியை எடுத்துக்கொள்ளுமாறு நாங்கள்  கோரிக்கையை முன் வைக்கின்றோம்.

இதையடுத்து நில அளயைாளர்களும் பிரதேச செயலகமும் இயன்ற வரை எம்முடனும் அங்கு கூடியிருந்த மக்களிடமும் வாதிட்டுப்பார்த்தார்கள், மக்கள் சம்மதிக்கவில்லை இறுதியில் அவர்கள் சென்று விட்டார்கள்.

கேள்வி-குருந்து மலையில்  தொடரும் பெள்த்த விகாரையின் கட்டுமானப் பணிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?

பதில்-

நாங்கள் மேற்குறிப்பிட்ட நில அளவை குறித்த பிரச்சனைக்காக சென்றிருந்த  பகுதியில் இருந்து ஒரு 1\2 Km  துாரம் தான் குருந்துார்மலையின் அடிவாரம் உள்ளது. அங்கும் சென்றிருந்தோம் ஏனெனில் குருந்துார் மலை சிவ ஆலையம் அபகரிப்பு தொடர்பாக கடந்த 2ம் திகதி  தொல்லியல் திணைக்களத்தினால் எனக்கும் மேலும் இருவருக்கும் எதிராக  ஒரு வழக்கொன்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்குக்கான விசாரணை வரும் மே மாதம் 25ம் திகதி தவணையிடப்பட்டுள்ளது. வரும் மாதம் 2ம் திகதி, தங்களுடைய மத வழிபாட்டை தடை செவ்வதாக கூறி  பௌத்த மத குருமார் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.  அந்த வழக்குக்கு நாங்கள் செல்ல வேண்டி இருக்கின்ற காரணத்தினால் குருந்துார் மலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த கட்டுமானப்பணிகள் குறித்து அறிந்து கொள்வதற்காக  அங்கு சென்றிருந்தோம் மலையின் உச்சிக்கு சென்ற போது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பௌத்த விகாரைக்கான கட்டுமானப்பணிகள் முழுமை பெற்று இருந்தது.

கடந்த 12ம் மாதம் 6ம் திகதி நாங்கள் பொது மக்களுடன் இணைந்து  போராட்டம் ஒன்றை செய்திருந்தோம். இதன் காரணமாக மறு நாளே  காவல்துறையினர் எம்மை கைது செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கில்  எம்மை நீதி மன்றம் விடுவித்த பின்  முல்லைத்தீவு மாவட்ட நீதி மன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலமாக ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தோம்.

இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் 19ம் திகதி நீதிபதி நேரடியாக குறுந்துார் மலைக்கு வந்து பார்வையிட்டிருந்தார். அன்று மாலை இது தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பில், குறித்த பௌத்த விகாரைக்கான கட்டுமாணப்பணியானது கடந்த 12ம்திகதி எப்படி இருந்ததோ அப்படியே இருக்க வேண்டும். இனிமேல் கட்டுமாணம் மேற்கொள்ளக் கூடாது என்றும் அறிவுருத்தப்பட்டது. மறு தரப்பில் வாதாடிய சட்டத்தரணிகள் பௌத்த விகாரை குறித்து எதுவும் பேசவில்லை. அப்படி இருக்கும் போது இந்த தொல்லியல் திணைக்களத்தால் எடுக்கப்படும் பொருட்களை வைப்பதற்கான ஒரு இடத்தை கட்டுவதாகத்தான் அவர்கள் குறிப்பிட்டனர்.  ஆனாலும் இனிமேல் கட்டுமானப்பணிகள் தொடரக்கூடாதென நீதி மன்றம் அறிவித்தல் ஒன்றை வழங்கியிருந்தது. ஆனால் அதற்கு மாறாக நீதி மன்றத் தீர்ப்பையும் அவமதித்து பௌத்த தொல்லியல் திணைக்களத்தினைச் சேர்ந்தவர்களும்  பெளத்த மதத்தைச் சேர்ந்த  மதகுருமார்களும்   ஒன்று கூடி இந்த விகாரையை கட்டி முழுமையாக முடித்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி அடுத்த வழக்கு இருப்பதால், அந்நேரம் இந்த கட்டுமானம் குறித்து தகவலைத் தெரிவிப்பதற்காக முல்லைத்தீவு காவல்துறையில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளேன். அந்த முறைப்பாட்டில் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெயதிலக மற்றும்  குருந்துார்மலை விகாராதிபதி அவர்களுக்கு எதிராகவும்  முறைப்பாட்டை பதிவு செய்திருந்தேன். இந்தக் கட்டுமானப்பணி நீதி மன்றத்தை அவமதித்து நீதி மன்றத் தீர்ப்பை அவமதித்து செய்யப்பட்டிருக்கின்றது. இவர்கள் இருவரும் தான் அதற்கு பொறுப்பானவர்கள் என்ற வகையில் அவர்கள் மீதும் முல்லைத்தீவு  காவல்துறைப் பொறுப்பதிகாரி அவர்களுக்கு எதிராகவும் முறைப்பாடு செய்துள்ளேன். ஏனெனில் 24 மணி நேரமும் குறித்த குருந்துார்மலை பகுதியில் காவல்துறை காவல் இருக்கும் போது நீதி மன்றக்கட்டளையை மீறி இவர்கள் நடந்துகொண்டது காவல்துறையினரின் அனுசரணையுடன்தான் செய்துள்ளனர் என்ற வகையில்  காவல் நிலைய பொறுப்பதிகாரி அவர்களையும் சேர்த்து மூன்று பேருக்கும் எதிராக முறைப்பாட்டை செய்துள்ளேன். இந்த முறைப்பாடு தொடர்பில் மார்ச் மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ள வழக்கில் நீதி மன்றுக்கு தெரியப்படுத்தப்படும் என்பதை தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

மேலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது தமிழ் உறவுகளும் ஏதாவது ஒரு வழியில்  தாயகத்தில் நடைபெறும் நில அபகரிப்புக்கு எதிராக தமது குரலை பதிவு செய்ய வண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

Exit mobile version