Tamil News
Home செய்திகள் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல்களை ஏதாவது ஓர் இடத்தில் ஆரம்பிக்கவே திருகோணமலையில் புத்தர் சிலை

தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல்களை ஏதாவது ஓர் இடத்தில் ஆரம்பிக்கவே திருகோணமலையில் புத்தர் சிலை

தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்களை ஏதாவது ஓர் இடத்தில் ஆரம்பித்து வைக்கவும் அதனை சாட்டாக வைத்து தமிழ் பிரதேசமான வட, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க அடக்கு முறையை மேலும் இறுக்கிக் கொள்ளும் நோக்கத்துடனே திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சி தலைவர் ந. சிறீகாந்தா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகரில், கடற்கரை வீதியில், விளையாட்டு அரங்குக்கு முன்னால் காணப்படும், நான்கு அரச மரங்கள் அமைத்திருக்கும் இடத்தில், புத்த பெருமானின் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வு இடம்பெற உள்ளது.

தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள, நான்கு அடி உயரமான புத்தர் சிலையுடன், இலங்கைக்கு வந்துள்ள 50 பௌத்த பிக்குகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இலங்கையில் தமிழ் மக்களின் நீண்ட வரலாற்றில் முக்கிய இடம் வகித்து வந்திருக்கும் திருகோணமலை மண்ணில், இந்த புத்தர் சிலை நாட்டப்படுவதற்கு போலியான காரணங்கள் வரலாற்றை திரிபுபடுத்தி முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக புத்தரின் சிலைகளை ஆயுதமாக பயன்படுத்தி, தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையோடு, தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் நீட்சியாகவே, இந்த புத்தர் சிலை பிரதிஷ்டம் நிகழ்த்தப்பட உள்ளது.

அரசாங்கத்தின் முழுமையான ஆதரவோடு தான் இது மேற்கொள்ளப் படுகின்றது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இருக்க முடியாது. இந்த, இன – மத ரீதியிலான ஆக்கிரமிப்புக்கு எதிராக, தமிழர் தரப்பில் எழுப்பப்படும் குரல்களை மௌனிக்க வைக்கும் நோக்கத்தோடு, வடித்தெடுத்த இனவெறியரான அரசாங்கக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மிரட்டல் தொனியில் பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். நிகழ்வை தடுத்து நிறுத்த முயன்றால், பாரிய அழிவுகள் ஏற்படும் என்றும் அவர் கர்ச்சித்திருக்கின்றார்.

அவரைப் போன்ற சிங்கள இனவெறியர்களின் மிரட்டல்கள், நீண்ட பல வருடங்களாக தமிழ் மக்களுக்கு பழகிப் போன சங்கதிகளாக இருந்தாலும் கூட, இனக் குரோதத்தை தூண்டுகின்ற இத்தகைய பேச்சுக்களை, இவரும் இவரைப் போன்றவர்களும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் தொடர்ந்து நிகழ்த்தி வந்திருக்கின்றார்கள்.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு முன்வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கை பற்றி பேசிய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கடந்த காலங்களில் இலங்கை சந்தித்த கலவரங்களை விட, மிக மேசமான கலவரம் வெடிக்கும் என, தனக்கே உரிய பாணியில் மிரட்டல் விடுத்திருந்தார். நாட்டின் அமைதியை குலைக்கக் கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கும் இத்தகைய இனவெறிப் பேச்சுக்கள் தொடர்பில், எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் இந்தச் சவாலை நிதானத்தோடு எதிர்கொள்வதே உகந்தது ஆகும். தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்களை, ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பித்து வைக்கவும், அதனை சாட்டாக வைத்து தமிழ்ப் பிரதேசமான வட, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க அடக்குமுறையை மேலும் இறுக்கிக் கொள்ளவும், நிகழ்ச்சிநிரல் தீட்டப்படுவதாகவே சந்தேகிக்க வேண்டி உள்ளது. நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் நெருக்கடி மிக்க சில பிரச்சினைகளுக்கு உடனடிப் பரிகாரமாகவும் இதனை சில சக்திகள் கருதக்கூடும்.

இத்தகைய பிரச்னைகளுக்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தே சமீபத்தில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் உணர்த்தி நிற்கும் செய்தியாகும். கட்சி வேறுபாடின்றி தமிழ் மக்களை அணிதிரட்டி, பாதிக்கப்பட்டிருக்கும் முஸ்லீம் மக்களின் ஆதரவையும் கோரி, பாரிய அரசியல் போராட்டம் ஒன்றை மேற்கொள்வது என்பதே இன்றைய உடனடித் தேவையாகும்.

Exit mobile version