பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ்  பதவி விலகினார்

பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ்  தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் பிரிட்டன் பிரதமராக அவர்  பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் பதவியேற்ற இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே தனது பதவியில் இருந்து அவர்  விலகியுள்ளார்.

லிஸ் டிரஸ்ஸின் நிதியமைச்சரான க்வாசி க்வார்ட்டெங் செப்டம்பர் 23ம் திகதி ஒரு மினி பட்ஜெட்டை அறிவித்தார். இந்த பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்ட் அளவுக்கு வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டது. இதனால், பங்குச் சந்தை தடுமாறியது. இந்த மினி பட்ஜெட் பிரிட்டனில் நம்பிக்கையை குலைத்த காரணத்தால், டாலருக்கு எதிராக பிரிட்டிஷ் பவுண்டு நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.

இதையடுத்து, வருமான வரியை குறைப்பதற்கு மேற்கொண்ட தமது முடிவை கைவிடுவது என பிரதமர் லிஸ் டிரஸ்ஸும், நிதியமைச்சர் க்வாசி க்வார்ட்டங்கும் முடிவு செய்தனர்.

அப்போதும் குழப்பம் தீராததால், அக்டோபர் 14ம் திகதி நிதியமைச்சர் பதவியில் இருந்து க்வார்ட்டெங்கை நீக்கிய லிஸ் டிரஸ், அவருக்குப் பதில் நிதியமைச்சர் பொறுப்புக்கு ஜெரமி ஹன்டை நியமித்தார். அவர் பெரும்பாலான வரிக் குறைப்பை திரும்பப் பெற்றார்.

ஆனாலும் கன்சர்வேட்டிவ் கட்சியில் குழப்பம் தீராததால், லிஸ் டிரஸ் ஒக்டோபர் 20-ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகும் தமது முடிவை அறிவித்தார். இதன் மூலம் கடந்த கன்சர்வேட்டிவ் கட்சி நான்கு ஆண்டுகளில் நான்காவது ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.