இலங்கை இராணுவத்திற்கு எதிரான தடைகளிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரிட்டன் சுட்டிக்காட்டு

இலங்கை இராணுவத்திற்கு எதிரான தடை

இலங்கை இராணுவத்திற்கு எதிரான தடைகளிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரிட்டன்  சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள்குறித்து ஆலோசிக்கப்படுவதாக பிரிட்டன்தெரிவித்துள்ளது.
வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் அமன்டா மில்லிங் பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான விடயங்களில் பிரிட்டன் அமெரிக்கா உட்பட ஏனைய சகாக்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் சர்வதேச மனிதஉரிமை தடைகளின் கீழ் வரக்கூடிய அனைத்து ஆதாரங்கள் மற்றும் சாத்தியமான தடைகள் குறித்தும் பிரிட்டன் அரசாங்கம் உன்னிப்பாக ஆராய்ந்துவருகின்றது எனதெரிவித்துள்ள அவர் எதிர்கால தடைகள் குறித்து பொதுவாக நாங்கள் ஊகங்களை வெளியிடுவதில்லை அவ்வாறு செய்வது அவற்றின் தாக்கத்தை குறைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை பின்பற்றி இலங்கையின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிராக யுத்தகுற்ற தடைகளை விதிப்பதற்கு பிரிட்டனிற்கு மேலும் என்ன ஆதாரங்கள் வேண்டும் என தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மக்டொனாக் கேள்வி எழுப்பியவேளையே அமன்டா மில்லிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜெனீவாவில்இலங்கை தொடர்பான முதன்மை குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரிட்டன் மனிதஉரிமை ஆணையகத்தின் அடுத்த அமர்விற்கு முன்னதாக மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரிட்டன்திட்டமிட்டுள்ளது என இலங்கைஇராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

Tamil News