முன்னெப்போதும் இல்லாத வகையில் சீனா மீது பிரிட்டன் மற்றும் அமெரிக்கா குற்றச்சாட்டு

பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டாக இணைந்து சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே, “நம்முடைய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு நீண்ட கால பெரும் அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது” என்றும், சமீபத்திய தேர்தல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களிலும் சீனா தலையிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, பிரிட்டனின் உளவு அமைப்பான எம்.ஐ. 5-இன் தலைவர் கென் மெக்கலம், கடந்த 3 ஆண்டுகளில் சீனாவின் செயல்பாடுகளுக்கு எதிரான பணிகளை தங்கள் உளவு அமைப்பு இருமடங்கு அதிகரித்துள்ளதாகவும், மேலும் இரு மடங்கு அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பான விசாரணைகளை எம்.ஐ. 5 ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.