Tamil News
Home உலகச் செய்திகள் மலேசியா: சாலைகளில் சிதறிக்கிடந்த ரோஹிங்கியா அகதிகளின் உடல்கள்: அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஐ.நா. 

மலேசியா: சாலைகளில் சிதறிக்கிடந்த ரோஹிங்கியா அகதிகளின் உடல்கள்: அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஐ.நா. 

சிதறிக்கிடந்த ரோஹிங்கியா அகதிகளின் உடல்கள்

மலேசிய குடிவரவுத் தடுப்பு முகாமில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கிருந்த நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் தப்பியிருக்கின்றனர். இவ்வாறு தப்பியவர்களில் 2 குழந்தைகள் உள்பட 6 ரோஹிங்கியா அகதிகள் சாலை விபத்தில் உயிரிழந்தமைக் குறித்து ஐ.நா. அகதிகள் ஆணையம் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. 

இவ்வாறு தப்பி சென்ற சம்பவம் தொடர்பாக கவலைத் தெரிவித்துள்ள ஐ.நா. அகதிகள் ஆணையம், இந்த சம்பவம் தொடர்பாகவோ அல்லது இதில் ஈடுபட்டவர்கள் தொடர்பாகவோ தம்மிடம் எந்த தகவலும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஓகஸ்ட் 2019 முதல் மலேசிய குடிவரவுத் தடுப்பு முகாம்களை பார்வையிட ஐ.நா. அகதிகள் ஆணையத்தை மலேசிய அரசு அனுமதிக்கவில்லை என்பதையும் ஐ.நா. ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

“நெடுஞ்சாலை எங்கும் உடல்கள் பரவி விழுந்து கிடந்தன. அப்பாவி உயிர்கள் கேட்பரற்று போயிருந்தன. மிகவும் சோகக்கரமான காட்சி அது,” என விபத்தை நேரில் கண்ட மலேசியவாசி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில்,ஐ.நா. அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும் மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளை நல்லபடியாகவே மலேசிய அரசு நடத்துகிறது என மலேசிய உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் தெரிவித்திருக்கிறார்.

ரோஹிங்கியா அகதிகளுக்கு அருகாமையிலுள்ள நாடுகள் உதவ மறுக்கின்ற போதிலும், மூன்றாவது ஒரு நாடு அவர்களை ஏற்க விருப்பம் தெரிவிக்காத போதிலும் மனிதாபிமான அடிப்படையில் அடிப்படை தேவைகளை மலேசியா வழங்கி உள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

“அவர்களுக்கு உணவும் இருக்க இருப்பிடத்தையும் வழங்கியுள்ளோம். இன்னும் நாங்கள் என்ன கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்?” என மலேசிய உள்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version