Home செய்திகள் போர்க் குற்றவாளிகளை சர்வதேச சமூகம் முன் நிறுத்தும் வரை மாவீரர்கள் சிந்திய இரத்தம் காயாது: ...

போர்க் குற்றவாளிகளை சர்வதேச சமூகம் முன் நிறுத்தும் வரை மாவீரர்கள் சிந்திய இரத்தம் காயாது: கு.ராமகிருட்டிணன்

மாவீரர்கள் சிந்திய இரத்தம் காயாது

“ராஜபக்ச அரசை இனப்படுகொலைக் குற்றவாளியாக சர்வதேச சமூகம் முன் நிறுத்தும் வரை மாவீரர்கள் சிந்திய இரத்தம் காயாது” என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் மாவீரர் நாள் குறித்து இலக்கு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் நாள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 “உலகில் விடுதலை அடைந்த நாடுகளில் விடுதலைப் படைகளிலேயே சிறந்த படையணி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் விடுதலைப்புலிகள் படை அணியே. பதினைந்து வயதில் விடுதலைப் போரில் பற்றுக்கொண்டு படையணியை அமைத்த போது, விரல்விட்டு எண்ணக்கூடிய தோழர்களுடன் விடுதலைப்புலிகள் அமைப்பை தொடங்கினார். 2009  ஆம் ஆண்டு வரை 30 ஆயிரத்திற்கும் மேலான புலித் தோழர்களைக் களப்பலி கண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் களப்பலியான புலித்தோழர் சங்கர் அவர்கள்கள் சாவு கண்ட நாளான நவம்பர் 27  ஆம் நாள் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் நினைவைப் போற்றும் வகையில் மாவீரர் நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வீரவணக்கம் செலுத்துகிறோம்.

முதல் மாவீரன் சங்கரின் புகைப்படம், 1983 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் கோவையில்  புகைப்பட கண்காட்சியில் தான் வைக்கப்பட்டது. அதற்கு முன்னர் வரை எந்த விடுலைப் புலிகளின் புகைப்படமும் வெளி உலகிற்கு காட்டப்பட்ட தில்லை.

அன்று தொடங்கி முள்ளிவாய்க்கால் பேரழிவில் சாவு கண்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம்  செலுத்துவதோடு தமிழர்கள் கடமை முடிந்து விடவில்லை. எந்த நாட்டு விடுதலைப் போரிலும், அந்த நாட்டு மக்கள் கொடுத்த விலையைவிட தமிழீழ மக்கள் அதிக விலையைக் கொடுத்துள்ளனர். கொடுத்த விலைக்கு தமிழீழ விடுதலையை அடைந்தே தீர வேண்டும். அதற்கு உறுதி ஏற்பதே மாவீரர்களுக்கு உலகத்தமிழர்கள் செலுத்தும் அஞ்சலியாக இருக்க வேண்டும்.

கொடுங்கோலன் ஹிட்லரை விடவும் கொடுங்கோலனாக விளங்கிய ராஜபக்சவையும்  சிங்கள பேரினவாத அரசையும் இனப்படுகொலைக் குற்றவாளியாக சர்வதேச சமூகம் முன் நிறுத்தும் வரை மாவீரர்கள் சிந்திய இரத்தம் காயாது.

உலக வல்லரசு நாடுகளுடன், இந்திய வல்லாதிக்கத்தையும் துணை கொண்டு தமிழீழ மக்கள் மீது போர் நடத்திய சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து 30  ஆண்டுகளாக போர் நடத்திய மேதகு பிரபாகரன் அவர்களின் வலிமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, திட்டமிடல், சாதி மத பேதமற்ற சமூகத்தை கட்டமைத்தது, ஆண் பெண் பேதமில்லா இராணுவத்தை கட்டமைத்தது என, இவற்றை எல்லாம் முள்ளிவாய்க்காலுக்கு பின்னர்  பிறந்த இளைஞர்களிடம் கொண்டு செல்வோம்.

மாவீரர்களின் ஈகத்தையும், தமிழீழ விடுதலையையும் தொடர்ந்து பேசுவோம். அழுவதற்கல்ல மாவீரர் நாள்.மாவீரர்கள் விட்ட இடத்தில் இருந்து தொடர உறுதி ஏற்போம். தமிழர் தாகம், தமிழீழத் தாயகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version