Home செய்திகள் மட்டக்களப்பு:புனரமைக்கப்படாத வீதிகளால் மக்கள் பாதிப்பு

மட்டக்களப்பு:புனரமைக்கப்படாத வீதிகளால் மக்கள் பாதிப்பு

புனரமைக்கப்படாத வீதிகளால் மக்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைலம்பாவெளி, விவேகானந்தபுரம் பகுதியில் பிரதான வீதி உள்ளிட்ட  புனரமைக்கப்படாத வீதிகளால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளதுடன் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மைலம்பாவெளி, விவேகானந்தபுரம் பகுதியில் 1995ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட இவர்களுக்கு இதுவரையில் முறையான வீதிகள் அமைத்துக்கொடுக்கப்படாமல் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றபோதிலும் இதுவரையில் ஒரு வீதிகூட  சீராக  அமைக்கப்படவில்லையென பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விவேகானந்தபுரம் பிரதான வீதி உட்பட எட்டுக்கும் மேற்பட்ட குறுக்கு வீதிகள் உள்ள நிலையில், மழை காலத்தில் குறித்த வீதிகளின் பயணிப்பது என்பது மிகவும் சிரமமான நிலையினை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதிகள் குன்றும்குழியுமாக இருப்பதனால் மழை நேரத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோரும் தொழில்களுக்கு செல்வோரும் தினமும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதிகளின் வீதிகளின் நிலைமைகள் குறித்து அரசியல்வாதிகள் பலரின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் குறித்த வீதியை புனரமைப்பு செய்யவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் வருகைதந்து அளவீடுகளை செய்து சென்றபோதிலும் இதுவரையிலும் வீதியை புனரமைக்க நடவடிக்கையெடுக்கப்படவில்லையெனவும்  மக்கள்  குற்றம் சுமத்துகின்றனர்.

தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக தாங்கள் செயற்படுவதன் காரணமாக தமது கிராமங்கள் அரசியல்வாதிகளினால் புறக்கணிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த வீதிகள் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதிலும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையெனத் தெரிவித்தார்.

தமது கட்டுப்பாட்டின் உள்ள வீதிகள் கூட தமது ஆலோசனைகள்பெறப்பாடாமல் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டு புனரமைக்கப்படும்போது அங்கு முறையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version