Home ஆய்வுகள் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த தொழிலதிபர்கள் முன்வரவேண்டும்!! – மட்டு.நகரான்

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த தொழிலதிபர்கள் முன்வரவேண்டும்!! – மட்டு.நகரான்

மட்டக்களப்பு:மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த முன்வரவேண்டும்

மட்டக்களப்பு:மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த முன்வரவேண்டும்- வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதியானது நீண்ட இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாக காணப்படுகின்றது. கடந்த 30வருடகால யுத்தம் மற்றும் அகிம்சை ரீதியான, இராஜதந்திர ரீதியான போராட்டங்கள் இந்த வளங்களை பாதுகாப் பதற்காகவே முன்னெடுக்கப்பட்டது.

வடகிழக்கில் காணப்படும் வளங்களை தமிழர்கள் அனுபவிக்ககூடாது அதனையும் தங்கள் இனமே அனுபவிக்க வேண்டும் என்று சிங்கள பேரினவாத சக்திகள் தொடர்ச்சியாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மத்தியில் காணப்படும் வளங்களை தமிழர்கள் முறையாக பயன்படுத்துவது மில்லை, புலம்பெயர் தமிழர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்வது மில்லை. இதன் காரணமாக தமிழர்கள் மத்தியில் காணப்படும் வருமானமீட்டும் வளங்களை மாற்று இனங்கள் பயன்படுத்தி வருமான மீட்டுவதுடன் அப்பகுதிகளை அபகரிக்கும் நிலையும் காணப்படுகின்றது.

நாங்கள் வெறுமனே தமிழ் தேசிய கொள்கையினை வாய் வார்த்தைகளாக கூறிக் கொண்டும் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதிகளைக் கோரிக் கொண்டு எமது பகுதிகளில் முறையான எந்தவித விதமான வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்காமல் இருப்பதன் காரணமாக மிகவும் சூட்சுமமான முறையில் வளங்கள் அபகரிக்கும் நிலையினை காணமுடியும்.

குறிப்பாக இந்த கட்டுரையில் நீர்வளங்களை தமிழர்கள் சரியான முறையில் பயன்படுத்தாத காரணத்தினால் அந்த வளங்களை சிங்களவர்களும் முஸ்லிம்களும் பயன்படுத்தி தமது பொருளாதார நிலைமையினை மேம்படுத்துகின்றதை சொல்வதுடன் இதனை தடுத்துநிறுத்தி எமது பகுதியில் காணப்படும் வளங்களை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றோம் என்பதை சிந்திக்க வைப்பதாக பல விடயங்களை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தினை மட்டும் இந்த கட்டுரையின் ஊடாக எழுத நினைக்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் நன்னீர் மீன்பிடி, கடல் மீன்பிடி என இரண்டு பின்பிடி நிலைமைகள் காணப்படுகின்றன. அவற்றினை நாங்கள் இங்கு தனித்தனி பகுதியாக எழுதுவதன் மூலமாக இந்த மாவட்டத்தின் மீனவர்களின் நிலைமையினை வெளிக் கொண்ரமுடியும் என நினைக்கின்றேன்.

நன்னீர் மீன்பிடி

மட்டக்களப்பு மாவட்டம் விசாலமான நீர்ப்பாசனக் குளங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. இவற்றின் மொத்த நீரேந்து பரப்பு 576 சதுர மைல்களாகும். அங்கெல்லாம் நன்னீர் மீன்கள் பெருக்கம் அடைந்துள்ளன.

வருடமொன்றுக்கு பாரிய நீர்ப்பாசனக் குளங்களிலிருந்து மாத்திரம் ஏறக்குறைய 850 மெற்றிக் தொன் மீன்கள் அறுவடை செய்யப்படுவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. பாரிய குளங்களைத் தவிர மத்திய தரக் குளங்களும், சிறு குளங்களும் இம்மாவட்டத்தில் இருக்கின்றன. அங்கும் நன்னீர் மீன் உற்பத்தி இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை, கட்டுமுறிவு, உறுகாமம், நவகிரி ஆறு, வாகனேரி என பல வற்றாத குளங்கள் காணப்படுகின்றன. அக்குளங்களிலிருந்து தமது ஜீவனோபாயத் தொழிலாக நன்னீர் மீன்பிடியை மீனவர்கள் கைக்கொண்டு வருகிறார்கள். பாரிய குளங்களில் மாத்திரம் சுமார் 700 பேர் இவ்வாறு மீன்பிடித் தொழிலை கைக்கொண்டு வருகிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீன் உற்பத்தி பதுளை மாவட்த்திற்கும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களுக்கும், நாள்தோறும் அனுப்பப் படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் உற்பத்தியில் 1998ம் ஆண்டுகளிலிருந்து புதியவகை மீனினங்களும், புதிய வகையான நீர் உயிரினங்களின் வளர்ப்பு முறைகளும் புகுத்தப் பட்டுள்ளன. தடாக மீன் வளர்ப்பு, பாரிய குளங்களில் நன்னீர் இறால் வளர்ப்பு, மற்றும் நண்டு வளர்ப்பு, இறால் பண்ணைகள் என அவை விரிந்து செல்கின்றன.

இப்போது பாரிய குளங்களிலிருந்து பாரிய எண்ணிக்கையில் அறுவடை செய்யப்படுகின்ற மீன் திலாப்பியா இனத்தைச் சேர்ந்த நைலோட்டிக்காவாகும். அது மொத்த அறுவடையில் 95_-97 வீதத்தைக் கொண்டிருக்கிறது. அதே போன்று ரோகு மீன் (செங்கணையான்) பிடிபடுகிறது. ரோகு மீன் எப்போதும் அதிக நிறை கொண்டதாகவும். முதிர்ச்சி அடைந்ததாகவும் காணப்படுகிறது.

ரோகு மீன்

ரோகு மீன் 2000ம் ஆண்டளவில்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது. அதையொட்டி மீனவர்களுக்கு மீன்வளர்ப்பு முறைகளும் அறிமுகப் படுத்தப்பட்டன. இவ்வாறான மீன்களில் திலாப்பியா இனம் தாமாக இனம் பெருக்கக் கூடியது. ஆனால் ரோகு மீன் அவ்வாறில்லை. இதற்கு இனம்பெருக்கும் உணர்வு புதிய நீரோடைகள் குளத்தில் விழுந்து கலக்கும் போது ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ரோகு மீன் (செங்கணையான்) மிக விரைவாக வளர்ச்சி அடையக் கூடியது, அதிக எடையில் வளரும். மீனவர்களுக்கும், நுகர்வாளர்களுக்கும் நன்கு பழக்கப்பட்டது. அதற்கான சந்தை வாய்ப்பு நமது நாட்டின் பல பாகங்களிலும் நல்ல நிலையில் உள்ளது, நாம் அதனை பாரிய எண்ணிக்கையில் அனைத்து பாரிய குளங்களிலும் வளர்க்க வேண்டும். அதற்கான வசதி வாய்ப்புகள் தமிழ் மீனவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ள பாரியளவிலான மீன்பிடி குளங்களில் பெரும்பான்மை யினத்தவர்களும் வந்து தங்கியிருந்து மீன்பிடித்துச் செல்லும் நிலையினால் தமிழ் மீனவர்கள் பாதிக்கப் படுகின்றனர். பெரும்பான்மை யினத்தவர்கள் சகல வசதிகளும் கொண்டவர்களாக மீன் சேகரித்து வைக்கும் வாகனங்களில் வந்து மீன்களை பிடித்துச் செல்வதனால் அன்றாடம் மீன்பிடித்து வியாபாரம் செய்யும் தமிழ் மீனவர்களினால் ஈடுகொடுக்காத நிலையே காணப்படுகின்றது.

கடல் மீன்பிடி

கடல் மீன்பிடி-மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் 145 கிலோமீற்றர் நீளத்தினைக் கொண்டதாக கடல் வளம் உள்ளது. வாகரை தொடக்கம் பெரிய கல்லாறு வரையான பகுதிகளில் பெருமளவான பகுதியான தமிழர் பகுதிகளை சார்ந்தேயுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 26000மீனவர் குடும்பங்கள் உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் சுமார் 75வீதமான கடல் பகுதியானது தமிழர்கள் வாழும் பகுதியிலேயே உள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் பகுதிகளில் சுமார் 10000மீனவர் குடும்பங்களே உள்ளன. ஏனையவர்களில் பெரும்பாலானவை முஸ்லிம் மற்றும் சிங்களவர்களாகவே காணப்படுகின்றன.

யுத்த காலத்தில் தமிழர்களின் மீன்பிடி வளங்கள் அழிக்கப்பட்டது

யுத்த காலத்தில் தமிழர்களின் மீன்பிடி வளங்கள் அழிக்கப்பட்டதுடன் அவர்கள் இடம்பெயரச் செய்யப்பட்ட காரணத்தினாலும் பலர் நாட்டை விட்டுச் சென்றதன் காரணமாகவும் தமிழர்களில் பலர் இந்த மீன்பிடியை கைவிட்டு வேறு தொழில் தேடிச் சென்ற காரணத்தினாலும் கடல் தொழிலில் தமிழர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடலில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடும் 150க்கும் மேற்பட்ட படகுகள் இருக்கின்றன. இதில் ஒரு படகு கூட தமிழர்களுக்கு இல்லை. யுத்தம் முடிந்த காலப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட படகுகள் அரச சார்பற்ற  அமைப்புகள் ஊடாக தொழில் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த படகுகளை அன்று இருந்த மாகாணசபை ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் விற்பனை செய்து விட்டனர். இன்று இயந்திரப் படகுகள் கொண்டடே தமிழர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் குறைந்தது இரண்டு தினங்கள் மீன்பிடியில் ஈடுபட முடியும். ஆனால் அதிகளவான மீனை பிடித்துக் கொண்டுவர முடியாது. இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றுமுழுதாக சிங்கள மீனவர்களினதும் முஸ்லிம் மீனவர்களினதும் கைகளிலேயே தங்கியுள்ளது. இந்த நிலையானது எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களுக்கு உகந்த நிலையில்லை. ஏற்கனவே பல்வேறு வழிகளிலும் மட்டக்களப்பு மாவட்டம் சுரண்டப்பட்டு வரும் நிலையில் கடல் பகுதியில் இந்த நிலை நீடிக்குமானால் எதிர் காலத்தில் மட்டக்களப்பின் கரையோரப் பகுதிகள் பாரியளவில் குடியேற்றங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர் தொழில் தமிழர்கள் அதிகளவிலான முதலீடுகளை செய்யவேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர் தொழில் தமிழர்கள் அதிகளவிலான முதலீடுகளை செய்யவேண்டும். இன்று முஸ்லிம்களில் தொழிலதிபர்களில் பலர் தங்களது வியாபாரங்களில் வரும் இலாபங்களில் ஒரு பகுதியை கடல் தொழிலில் முதலீடு செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய நிலையில் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம் மட்டுமே உள்ளது. இங்கிருந்தே பாரிய படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 90வீதமான படகுகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அதன் காரணமாக குறித்த துறைமுக பகுதி முஸ்லிம் குடியேற்ற பகுதியாக மாற்றியிருக்கின்றது.

இதேபோன்று மட்டக்களப்பு முகத்துவாரம், பெரிய கல்லாறு முகத்துவாரம் பகுதிகள் இயற்கை துறைமுகப் பகுதியாக காணப்படுகின்றது. இப்பகுதியில் தமிழர்கள் முதலீடுகளை செய்து பாரியளவிலான படகுகளைக் கொண்டு மீன்பிடிகளை மேற்கொள்வதன் மூலம் பாரியளவிலான வருமானமீட்டக் கூடிய நிலையுள்ளது. இவ்வாறான வழிகள் குறித்து புலம்பெயர் தொழில் முனைவோரும் தமிழ் தொழிலதிபர்களும் சிந்திக்க வேண்டிய தருமாகும். மீன்பிடி நடவடிக்கைகள் முற்று முழுதாக மாற்று இனத்திற்கு செல்லுமானால் தமிழர்களின் இருப்பும் இல்லாமல் செல்லக் கூடிய நிலையுள்ளது. எனவே இது தொடர்பில் உரியவர்கள் சிந்திக்க வேண்டிய தருமாக இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

Exit mobile version