தமது அடையாளங்களை தொலைத்து நிற்கும் சமூகமாகவே மட்டக்களப்பு சமூகம் உள்ளது- மாநகர முதல்வர் கருத்து

அடையாளங்களை தொலைத்துநிற்கும் சமூகமாகவே

தமது அடையாளங்களை தொலைத்துநிற்கும் சமூகமாகவே மட்டக்களப்பு சமூகத்தினை பார்ப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டின் ஒன்றாக கருதப்படும் கபடி விளையாட்டின் முக்கியத்துவத்தினையும் அதன் தமிழர் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பாடல்  மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபையில் இந்த நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கத்தின் தலைவரும் மாநகரசபை உறுப்பினருமான துரைசிங்கம் மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மக்கள் பிரதிநிதிகள்   கலந்து சிறப்பித்தனர்.

இலங்கை தேசிய கபடி அணி உட்பட இலங்கையின் பல கபடி அணிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த பல வீரர்கள் சாதனை படைத்துவரும் நிலையில் மட்டக்களப்புக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமைசேர்த்த குறித்த வீரர்களைக்கொண்டதாக பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மண்மைச்சேர்ந்த புகழ்மிக்க துள்ளிசை பாடகர்களான க.கஜிந்தன்,ஜி.ரதியன் ஆகியோரால் பாடப்பட்டு,இசையமைக்கப்பட்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதுடன் கபடி விளையாட்டின் முக்கியத்துவம் அதன் தமிழர்கள் பண்பாடு மற்றும் தமிழர்களின் வீரத்தினை பறைசாற்றும் வகையில் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கபடி அணி வீரர்கள்,மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்க உறுப்பினர்கள்,கபடி ஆர்வலர்கள் என பல தரப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.
இலங்கை தேசிய கபடி அணியின் 12 வீரர்களுள் 4 பேரை மட்டக்களப்பு வழங்கியுள்ளதுடன் இலங்கை தேசிய கபடி நிர்வாகத்திலும் செயலாளரை மட்டக்களப்பு கொண்டுள்ளது.இலங்கை கபடி அணி கடந்த மாதம் பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்ற ஆசிய அணிகளுக்கான கபடிபோட்டியில் மூன்றாவது இடத்தை பெற்று வெற்றிக்கிண்ணத்தையும் சுவீகரித்தபோது மட்டக்களப்பு வீரர் ஒருவரே சிறந்த வீர்ராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த மாநகர முதல்வர்,

இலங்கையில் மட்டக்களப்பிலும் பல இராசதானிகள் இருந்துள்ளன.தங்களது அடையாளத்தினை தொலைத்து நிற்கும் சமூகமாகவே நான் என்னை பார்க்கின்றேன்.ஆவனப்படுத்தலில் நாங்கள் ஆர்வம் செலுத்தாமையே எமது வரலாறுகள் முன்கொண்டுசெல்லப்படாததற்கு காரணமாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News