மக்களின் எதிர்ப்பையடுத்து டுபாய் பயணத்தைக் கைவிட்ட பசில் ராஜபக்ஷ

இலங்கை முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரரும் ஆன  பசில் ராஜபக்ஷ, நாட்டை விட்டுச் செல்ல மேற்கொண்ட முயற்சி, பயணிகளின் கடும் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்துள்ளது.

மேலும் இவர் முன்னர் நிதி அமைச்சராக இருந்தவர். தற்போது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். 2007 முதல் 2015 வரையில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

இதேவேளை திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பசில் ராஜபக்ஷ  வருகை தந்துள்ளார்.  பசில் பயணிக்கத் திட்டமிட்டிருந்த விமானம் அதிகாலை 3.15 மணிக்கு டுபாய்க்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது.

இந்த நிலையில், பயணிகளின் எதிர்ப்பு மற்றும் அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று பலரும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதையடுத்து, பசில் விமானத்தில் செல்வதற்கும் அவரது பயண நடைமுறையை நிறைவேற்றுதவற்கும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக பசில் மீண்டும் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.