Tamil News
Home செய்திகள் தடை செய்யப்பட்ட களைக்கொல்லிக்கு இலங்கையில் மீண்டும் அனுமதி

தடை செய்யப்பட்ட களைக்கொல்லிக்கு இலங்கையில் மீண்டும் அனுமதி

சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்குக்குக் காரணமானது எனக்கூறி – தடை செய்யப்பட்டிருந்த ‘கிளைபொசேட்’ (Glyphosate) எனும் களை நாசியை இறக்குமதி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் இலங்கை அரசு மீளவும் அனுமதி வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் வெளியான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க, இம்மாதம் 05ஆம் திகதியிலிருந்து மேற்படி களை நாசினிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிளைபொசேட் இறக்குமதிக்கு – பூச்சிக்கொல்லி பதிவாளரின் பரிந்துரையின் கீழ், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமத்தை வழங்குவார் எனவும் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், சில மாவட்டங்களில் கிளைபொசேட் பயன்பாட்டுக்கும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளுமாறு அரசு அறிவித்ததைத் அடுத்து, கிளைபொசேட் உள்ளிட்ட ரசாயன நாசினிகள் மற்றும் யூரியா உரம் போன்றவற்றுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டது.

சிறுநீரக நோய் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு கிளைபொசேட் (Glyphosate) காரணமாக அமைகிறது என்று அதைத் தடை செய்தபோது அரசு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version