பேரறிவாளனுக்கு கிடைத்த பிணை: கொடுத்த விலை தெரியுமா? | ஊடகவியலாளர் கலைச்செல்வி சென்னை தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு கிடைத்த பிணை

பேரறிவாளனுக்கு கிடைத்த பிணை: கொடுத்த விலை

பேரறிவாளன்…இந்தப் பெயர் எவ்வளவு முறை, எவ்வளவு பேரால் உச்சரிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எண்ணிக்கையே  இல்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது .

ராஜீவ் காந்தி கொலை வழக்கு, பற்றரி வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு, 32 ஆண்டுகள் சிறைவாசம், தாயார் அற்புதம்மாளின் கண்ணீர் -விடாத போராட்டம், சிறுநீரக பிரச்சனையால் அவதி, பரோல் தற்போது ஜாமீன் என நீண்ட வலியை சுமந்திருக்கிறார் பேரறிவாளன்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார்,  பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் தற்போது தங்கள் தண்டனையை சிறையில் அனுபவித்து வருகின்றனர்.

இவர்களில் ஒருவரான பேரறிவாளன் தற்போது தமிழக அரசின் பரோலில் வெளியே உள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக பேரறிவாளனுக்கு தொடர்ந்து 10வது முறையாக தமிழக அரசு பரோல் வழங்கியது.  இந்நிலையில் ஜாமின் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 9 ஆம் தேதி  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது .

அதனைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு பேரறிவாளன் கொடுத்த விலை என்ன தெரியுமா? இவரின்  பின்னணி குறித்து பார்ப்போம்.

பேரறிவாளனின் பின்னணி:

பேரறிவாளனுக்கு பிணைஇவர் திருப்பத்தூர் மாவட்டம் சோலையார் பேட்டையைச் சார்ந்தவர். தி.க.,வைச் சேர்ந்த குயில்தாசன்-அற்புதம் தம்பதியின் இரண்டாவது மகன் தான் பேரறிவாளன். 1971 ஜூலை 30ல் பிறந்த பேரறிவாளன், இயற்கையில் நல்ல அறிவும், அமைதியும் கொண்டவர். இசை மீது தீரா பற்றுக் கொண்டவர். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழில் நுட்பப் பட்டயம் பெற்ற இவர், சென்னை பெரியார் திடல் விடுதலை அலுவலகத்தில் கணினிப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் 1991, சூன் 11 அன்று கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜீவ் கொலைக்கு காரணமான பெல்ட் குண்டை  வெடிக்க வைத்த  பற்றரியை வாங்கியது பேரறிவாளன் என்பது தான் சிபிஐ முன் வைத்த குற்றச்சாட்டு. இன்று வரை அதை மறுக்கிறார் பேரறிவாளன்.

பேரறிவாளனுக்கு பிணைஇவ்வழக்கை கையாண்டவர்களில் ஒருவரான முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன், தான் ஓய்வு பெற்ற பின்னர் ’உயிர்வலி’ எனும் ஆவணப்படத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது, பேரறிவாளனுக்கு சாதகமாக அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இருந்த அவரது வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பங்கள், வாக்குமூலத் தகவலைத் தவறாகப் பதிந்ததையும், தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு குறிப்பிடுகின்றார்.

பேரறிவாளனின் திறமை:

பேரறிவாளன் சிறைச்சாலையில் இருந்து கொண்டே, மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் சிறைத் துறை நடத்தி வரும் திரைமேசை பதிப்பித்தல் (Desktop Publishing) பட்டயபடிப்பில் (Diploma) முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.

பேரறிவாளன் கடந்து வந்த பாதை:

1991 ஆம் ஆண்டு சூன்  11-ம் நாள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.

1998 ஜனவரி 28 வரை விசாரணை கைதியாகவே சிறைவாசம் காண்கிறார் அறிவு. அன்றைய தினம் குற்றம் உறுதி செய்யப்பட்டதாக கூறி, நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்குத் தண்டனை விதித்தார் தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி நவநீதன். அதிர்ந்தார் பேரறிவாளன்.

2011 செப்டம்பர் 9ல் பேரறிவாளனுக்கு தூக்கு என முடிவு செய்யப்பட்டது. அதற்கான பரிசீலனைகளும் துவங்கின. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கிறது. மூவரையும் விடுதலை செய்யக் கோரி, அடுத்தடுத்த முன்னெடுப்புகள். காஞ்சிபுரத்தை சேர்ந்த செங்கொடி தீக்குளிக்கிறார். பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கிறது. 2011 ஆகஸ்ட் 30 அன்று பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது உயர் நீதிமன்றம். அதன்பிறகு, பல கட்டங்களைத் தாண்டி 2014 ஆம் ஆண்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த  தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.  தமிழக அரசும் ஏழு பேரின் விடுதலையை  வலியுறுத்தி அவ்வப்போது தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இச்சூழ்நிலையில்தான், பிணை கேட்டு பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன ?:

வழக்கு விசாரணையில் மத்திய அரசிற்கும், உச்சநீதிமன்றத்துக்கும் இடையே  கடும் வாக்குவாதம் நிலவியது.  பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது. அது குடியரசு தலைவர் அதிகாரம் என்று மத்திய அரசு தெரிவித்தது.  ஆனால், பேரறிவாளன் விடுதலை குறித்து மிகவும்  தாமதிப்பது பற்றியும் பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பியது. பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பையும் தெரிவித்தது. இதனையும் மீறி, பேரறிவாளனின் கல்வித் தகுதி, முப்பது ஆண்டு கால சிறைவாசம், சிறை நன்னடத்தை, உடல்நிலை பாதிப்பு அடிப்படையில் பிணை வழங்குவதாகவும் பரோலில் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட நிலையில் பேரறிவாளன் நடத்தையில் எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை  என்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

அத்துடன், மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனைபெறும் கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்கிற மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நடத்திய பாசப் போராட்டமும், சட்டப் போராட்டமும் எண்ணிலடங்காதவை. தனது இளமையை சிறையில் தொலைத்த ஒரு இளைஞனுக்கு வயதான தன் தாயின் அரவணைப்பு நிம்மதி அளிக்கட்டும். இப்போது கிடைத்துள்ள பிணை பேரறிவாளனின் விடுதலைக்கான அறிகுறி என்று அரசியல் தலை வர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் .

சிறையில் உள்ள மற்றவர்களின் நிலைமை என்ன?:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக  பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது அவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் சற்று ஆறுதலை அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது .

தனித்தனியாக மனு தாக்கல் செய்தால் மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது என நம்பிக்கை கொடுத்துள்ளார் பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபு அவர்கள் .

இருட்டு சிறையில் நம்பிக்கை ஒளியுடன்  காத்திருக்கும் இவர்களுக்கு விடியல் பிறக்குமா ?

Tamil News