ஈரான்:பக்தாஷ் அப்டின்- அதிகாரத்தை எதிர்த்த மக்கள் கவிஞன் மறைந்தார்

அதிகாரத்தை எதிர்த்த மக்கள் கவிஞன்


ஈரானிய அரசின் செயற்பாடுகளின் மீது அதிருப்தி அடைந்து அதற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்ட ஈரானிய கவிஞரும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான பக்தாஷ் அப்டின் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்றுநோயால் மரணமடைந்ததாக ஜனவரி 8ம் திகதி ஈரானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் அதிகாரத்தை எதிர்த்த மக்கள் கவிஞன் பிரச்சாரம் மேற்கொண்டதற்காகப் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பக்தாஷ்  அப்டின்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர்ப்பிழைத்து, 2ம் முறை கொரோனாத் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று நோய் இயற்கையாக மரணத்தைக் கொடுக்கும் என்றாலும் பக்தாஷ் அப்டினின் மரணத்திற்கான ஒவ்வொரு படியிலும் ஈரானிய அரசாங்கம் உதவியது என்று உரிமைகள் குழு பென் அமெரிக்கா தனது ட்விட்டரில் கூறியுள்ளது.

மேலும் ஈரானிய எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பக்தாஷ் அப்டின், ரேசா கந்தன் மஹாபாடி மற்றும் கீவன் பஜன் ஆகியோருக்கு  PEN/Barbey எழுதுவதற்கான சுதந்திரம் என்ற விருதை  உரிமைகள் குழு பென் அமெரிக்கா வழங்கியிருந்தது.

கடந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அப்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது படுக்கையில் அவரைக் கட்டி வைக்கப்பட்டிருந்த படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News