மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி விடுதலை

ஆசாத் சாலி விடுதலை

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி விடுதலை: மதக் குழுக்களுக்கு இடையில் பகைமையை தூண்டிய குற்றச்சாட்டில் 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநரும்  தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவருமான  ஆசாத் சாலியை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய ஆசாத் சாலி, இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில், அதே மாதம் 16ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு எதிரான வழக்கு – இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவருக்கெதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஆசாத் சாலியை விடுதலை செய்வதாக அறிவித்தது.

ஐ.சி.சி.பி.ஆர் என சுருக்கமாக அழைக்கப்படும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ், ஆசாத் சாலிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் சுகவீனமுற்றிருந்த ஆசாத் சாலி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அண்மைக்காலமாக நீதிமன்றத்துக்கு ஆஜராகி வந்தார்.

இதன்போது அவர் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலும் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி விடுதலை