இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக அவுஸ்திரேலியா தடைகளை விதிக்கவேண்டும் – தமிழ் ஏதிலிகள் பேரவை

Renuga Inpakumar

ஈழத்தமிழர்களிற்கு எதிராக இலங்கையில் இனஅழிப்பு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசாங்கம் தடைகளை விதிக்கவேண்டும் என தமிழ் ஏதிலிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் காரணமாக இலங்கையின் வடமேல்மாகாணத்தின் ஆளுநர் வசந்தகரணாகொடவும்  அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது என  தமிழ் ஏதிலிகள் பேரவை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடமேல்மாகாணத்தின் ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்தகரணாகொட நேவி 11 விவகாரத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்துள்ள  தமிழ் ஏதிலிகள்  பேரவை இலங்கையில் இனப்படுகொலை உச்சத்தில் காணப்பட்ட பகுதியில் 2008 -2009 இல் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவமே நேவி 11 என குறிப்பிடப்படுகின்றது.

கடத்தல் சித்திரவதை தடுத்துவைத்திருத்தல் மிரட்டி பணம் பறித்தல் சதி போன்ற குற்றச்சாட்டுகள் முன்னர் வசந்தகரணாகொடவிற்கு எதிராக காணப்பட்டன  எனினும் 2021இல் தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தினால் அவை கைவிடப்பட்டன என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.

2021 டிசம்பரில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச வசந்தகரணாகொடவை மாநில ஆளுநராக நியமித்தார், எனவும் தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.

எங்கள் சகோதர சகோதரிகளை கொலைசெய்த பலர் தொடர்ந்தும் எங்கள் தாயகத்தின் மக்கள் மீது இனப்படுகொலை அதிகாரத்தை பேணுவதற்காக அதிகாரத்தில் வைக்கப்பட்டுள்ளமைக்கு வசந்த கரணாகொட ஒரு உதாரணம் என தெரிவித்துள்ள தமிழ் ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழத்தில் பலவந்தமாக  காணாமல்போதல் தொடரும் ஒரு விடயமாக காணப்படுகி;ன்றது என தெரிவித்துள்ள அவர் உண்மையை நிலைநாட்டுவதற்கும் நீதி மற்றும் நிவாரணங்களை  வழங்குவதற்குமான ஒரு விரிவான அணுகுமுறையை காட்டிலும் சுமையை குறைப்பதையும் கோப்புகளை மூடுவதையும் நோக்கமாக கொண்டதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் கொள்கை காணப்படுகின்றது என ஐநா ஆணையாளர் தெரிவித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத்தமிழர்களிற்கு எதிராக இலங்கையில் இனஅழிப்பு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசாங்கம் தடைகளை விதிக்கவேண்டும் என தமிழ் ஏதிலிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

2009இல் இனப்படுகொலைகள் உச்சத்தை தொட்ட காலம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம்  தெளிவான கொள்கையை கொண்டிருக்கவேண்டும் என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் இனப்படுகொலை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதை நிறுத்திவிட்டு இனப்படுகொலைக்கான சாட்சிகளாக உள்ளவர்களிற்கு உதவவேண்டும் இனப்படுகொலை அரசாங்கத்திடம்  நாடுகடத்தப்படலாம் என்ற கடும் அச்சத்தில் உள்ள அகதிகளிற்கு நிரந்தர பாதுகாப்பை வழங்கவேண்டும் என ரேணுகா இன்பகுமார் தெரிவித்துள்ளார்.