இலங்கையில் இருந்து சென்ற அகதிகள் படகை திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா

அகதிகள் படகை திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில் இடைமறிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் படகை அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

படகிலிருந்த ஒவ்வொருவரினதும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை சோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களை திருப்பி அனுப்பியதாக இறைமையுள்ள எல்லைகள் ஒப்பரேசனின் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

“பதில் பிரதமர் எனக்கு வழங்கிய அறிவுறுத்தல் தெளிவானது கடலில் உயிர்களை பாதுகாக்கும் இறைமையுள்ள எல்லை நடவடிக்கை குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதே அது“ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொழில்கட்சி ஆட்சியை கைப்பற்றிய பின்னர் சட்டவிரோத படகுகள் குறித்த கொள்கை மாறவில்லை எனவும் இறைமையுள்ள எல்லைகள் ஒப்பரேசனின் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

“அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயலும் படகுகளை நாங்கள் இடைமறிப்போம். அதில் உள்ளவர்களை அவர்கள் புறப்பட்ட இடத்திற்கு அனுப்பிவைப்போம். அது பாதுகாப்பானது இல்லை என்றால் அவர்களது கோரிக்கைகளை ஆராயும் இடத்திற்கு அனுப்பிவைப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News