Tamil News
Home செய்திகள் அவுஸ்திரேலியா/நியூசிலாந்து: பத்தாண்டுகளுக்கு பின் மீள்குடியேற்றப்படும் அகதிகள்

அவுஸ்திரேலியா/நியூசிலாந்து: பத்தாண்டுகளுக்கு பின் மீள்குடியேற்றப்படும் அகதிகள்

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாமிலிருந்த அகதிகளில் ஆறு பேர் முதன் முறையாக நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றனர். 

கடந்த செப்டம்பர் 22ம் திகதி இந்த 6 அகதிகளும் நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்காக அந்நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் உறுதி செய்திருக்கிறார்.  இந்த 6 பேரில் 4 பேர் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள், ஒருவர் சூடானைச் சேர்ந்தவர், மற்றொரு அகதி கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர்.

“ஆண்டுக்கு 150 அகதிகளை மீள்குடியேற்றம் செய்வதற்காக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படும்,” என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் குறிப்பிட்டிருக்கிறார்.

அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளில் ஆண்டுதோறும் 150 அகதிகளை நியூசிலாந்து எடுத்துக் கொள்வதாக கடந்த 2013ம் ஆண்டில் அப்போதைய அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டுடன் இணைந்து  (தொழிற்கட்சி) நியூசிலாந்தின் அன்றைய பிரதமர் ஜான் கீ அறிவித்திருந்தார். ஆனால், ஜூலியா கில்லர்ட்  ஆட்சி காலத்தில் எந்த அகதியும் நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

பின்னர் ஆட்சிக்கு வந்த தாராளவாத தேசிய கூட்டணி அரசாங்கம் அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கிடப்பில் போட்டு வந்தது. இறுதியாக, கடந்த மார்ச் 2022 முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டார். பின்னர் மே 2022யில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தது.

இந்த சூழலில், தற்போது அகதிகள் நியூசிலாந்துக்கு அனுப்பப்பட்டதன் மூலம் அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அகதிகள் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

இதை வரவேற்றுள்ள அகதிகள் நல செயல்பாட்டாளரான ஐன் ரிண்டோல், “இது நீண்ட காலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட நிவாரணம். இந்த அகதிகள் அத்தீவில் எட்டு, ஒன்பது ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். நியூசிலாந்து சென்ற 6 அகதிகளுக்கு இது நற்செய்தி, இன்னும் பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்,” எனத் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version