Tamil News
Home செய்திகள் அவுஸ்திரேலியா: இணைப்பு விசாக்களில் உள்ள அகதிகளின் வேலை உரிமைகளை மேம்படுத்த கோரிக்கை 

அவுஸ்திரேலியா: இணைப்பு விசாக்களில் உள்ள அகதிகளின் வேலை உரிமைகளை மேம்படுத்த கோரிக்கை 

அவுஸ்திரேலியாவுக்குள் திறன்வாய்ந்த குடியேறிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே இணைப்பு விசாக்களில் வாழ்ந்து வருபவர்களின் வேலை உரிமைகளை மேம்படுத்த கோரியும் கிடப்பில் உள்ள மனிதாபிமான விசாக்கள் பரிசீலனையை புறக்கணிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த இருவரது ‘குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான விசா’வை பரிசீலிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கண்டித்து

அவுஸ்திரேலியாவின் சுதந்திர பாராளுமன்ற உறுப்பினரான மொனிக்யூ ரியான் அலுவலகத்தில் அந்த அகதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இது குறித்து அறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியான், இணைப்பு விசாக்களில் உள்ள அகதிகளின் வேலை உரிமைகளுக்காக குரல் எழுப்பியிருக்கிறார்.

அவுஸ்திரேலிய உள்துறையின் தகவல்படி, இணையர் விசாவுக்கான (Partner Visa) 90 சதவீத விண்ணப்பங்களின் பரிசீனை காலம் இரண்டு முதல் சுமார் நான்கு ஆண்டுகளாக இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் தாலிபான் பிடிக்கு சென்ற பின்னர், 2 இலட்சம் பேருக்கான 40 ஆயிரம் விசா விண்ணப்பங்களை ஆஸ்திரேலியா பெற்றிருக்கிறது. ஆனால் இதில் வெறும் 6,000 நிரந்தர விசாக்களை மட்டுமே அவுஸ்திரேலியா வழங்கியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பெரும் மனிதாபிமான நெருக்கடிக்கு இடையில் துறையின் வளங்களை முன்பிருந்த அவுஸ்திரேலிய அரசாங்கம் பறித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மொனிக்யூ ரியான் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், இணைப்பு விசாக்களில் உள்ளவர்களின் வேலை உரிமைகளுக்காக குரல் எழுப்பியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரியான் இவ்விசாக்களில் உள்ளவர்களின் வேலை உரிமைகள் தொடர்பாக தெளிவான விதிகள் இல்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார். தற்போதைய நிலையில், அவுஸ்திரேலியாவில் 330,000 பேர் இணைப்பு விசாக்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் மற்றும் Safe Haven Enterprise விசாக்களில் உள்ள 20 ஆயிரம் பேருக்கும் அவசரமாக நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரியான் வலியுறுத்தியிருக்கிறார்.

Exit mobile version