இலங்கையின் பல மாவட்டங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தொழிற்சங்கங்களால் ஆர்பாட்டப்பேரணியொன்று இன்று (15) வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

 இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசியர்கள் அதிபர்கள் உட்பட அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். சுபோதினி ஆணைக்குழுவின் படி மூன்றில் ஒருபகுதி சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

மீதி அதிகரிப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும். அத்துடன் விலையேற்றத்தை கட்டுப்படுத்தி வரிச்சுமையை குறைத்து, மக்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்றனர்

அதே போல் வரிவிதிப்பு,பொருட்களின் விலையேற்றம் உட்பட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல தொழிற்சங்க பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்தியசாலை வைத்தியர்கள் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வெளி நோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை. அத்தியாவசியமான அவசர சேவை பிரிவு மட்டுமே இயங்குகிறது இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதேவேளை பாடசாலைகளில் ஆசிரியர்கள் சமூகமளிக்காததால் பாடசாலைகள் இயங்க  முடியாத நிலை ஏற்பட்டது. இதேவேளை பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக மிகக் குறைவான அளவில் காணப்பட்டது.

வங்கி ஊழியர்கள் பகிஸ்கரிப்பு காரணமாக வங்கி சேவைகள் இடம்பெறவில்லை.

புகையிரத ஊழியர்கள் விடுமுறை இரத்து செய்யப்பட்டதன் காரணமாக புகையிரத சேவை இடம்பெற்று வருகிறது. அதேவேளை அரச மற்றும் தனியார் பஸ் சேவைகள் வழமை போன்று இயங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தின் புதிய வரி கொள்கை, அதிகரிக்கப்பட்ட கடன் வட்டி வீதங்கள், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை தீர்க்குமாறு கோரி இந்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

அதே நேரம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்களும் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் அத்தியாவசியமான அவசர சேவை பிரிவு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. வங்கி ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வங்கி சேவைகள் இடம்பெறவில்லை.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நீர்கொழும்பு வலய அதிபர், ஆசிரியர்கள் இன்று (15) நீர்கொழும்பு கொப்பரா சந்தியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அத்துடன் கொடும்பின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.