Tamil News
Home ஆய்வுகள் அரசியல் தீர்வுக்கான முயற்சியும் 75 ஆவது சுதந்திரத் தினக் கொண்டாட்டமும் -பி.மாணிக்கவாசகம்

அரசியல் தீர்வுக்கான முயற்சியும் 75 ஆவது சுதந்திரத் தினக் கொண்டாட்டமும் -பி.மாணிக்கவாசகம்

இந்த வருடம் இலங்கை தனது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடப் போகின்றது. அரை நூற்றாண்டையும் கடந்து முக்கால் நூற்றாண்டை எட்டி ஒரு முழுமையான நூற்றாண்டை நோக்கிப் பயணிக்க இருக்கின்ற நிலையில் இந்த சுதந்திர தினக் கொண்டாட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.

கொண்டாட்ட ரீதியில் மட்டுமல்லாமல், கடந்து வந்த 75 வருட கால சுதந்திர பயணத்தில் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக நாடு எட்டியுள்ள இலக்குகள் பற்றிய மீள்பார்வையிலும் இந்த சுதந்திர தினம் முக்கியத்துவம் பெறுகின்றது.

சுதந்திர தினங்கள் ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர, ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இது வெறுமனே அரசியல் ரீதியான கொண்டாட்டத்திற்குரிய தினமாகக் கொண்டாடப்படுகின்றதே தவிர, நாட்டு மக்கள் அனைவரினதும் உண்மையான சுதந்திர நிலைமையைக் குறித்து மதிப்பீடு செய்து அடுத்த கட்டத்திற்குரிய தீர்மானங்களை மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதைக் காண முடியவில்லை.

பொதுவாகவே சுதந்திர தினங்கள் பெரும்பான்மை இன மக்களாகிய பௌத்த சிங்கள மக்களுக்கான கொண்டாட்ட நிகழ்வாக மாத்திரமே இதுகால வரையிலும் அமைந்திருக்கின்றன.

தென்னிலங்கையில் சுதந்திரக் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்ற அதேவேளை, தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற நாட்டின் வடக்க கிழக்குப் பிரதேசங்களில் அந்த தினம் ஒரு கரிநாளாக – துக்க நாளாக அனுட்டிக்கப்படுவது வழக்கமாகியிருக்கின்றது.

இத்தகைய பின்னணியில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம், 75 ஆவது சுத்திர தினத்தை வடக்கே யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றது.

சுதந்திர தினத்தைக் கரிநாளாக அனுட்டிக்கின்ற யாழ்ப்பாணத்தில் இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான பின்னணியொன்றும் இருக்கத்தான் செய்கின்றது. அதாவது நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னதாக அரசியல் தீர்வு காணப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியின் பின்னணியிலேயே இந்த சுதந்திரத் தினக் கொண்டாட்ட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

ஏழரை தசாப்தங்களாக நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டிய சந்தர்ப்பத்தில் அரசியல் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சி என்பது சாதாரணமானதல்ல. அது வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக மனதுக்குப் பெரும் ஆறுதலைத் தருகின்ற ஒரு விடயமாகும். இந்த அரசியல் தீர்வு முயற்சி தமிழ்த் தரப்பைப் பொறுத்தளவில் மிகுந்த வரவேற்புக்கு உரியது.

இந்த வகையிலேயே ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தீர்வு முயற்சிக்கான அறிவித்தலும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையும் தமிழ்த்தரப்பின் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றிருந்தது. ஆனால் அந்த முயற்சி அரசியல் ரீதியாக இதய சுத்தியுடன் கூடிய ஒரு நடவடிக்கையா என்ற கேள்வி எழுந்திருந்தது.

ஏனெனில் இதற்கு முன்னர் பல தடவைகள் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் பல மட்டங்களில் உள்நாட்டிலும் சர்வதேச மத்தியஸ்த மட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு முறிவடைந்து போயின. இவ்வாறு முன்னைய அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னேற்றம் காணத் தவறியதன் விளைவாகவே நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டிய ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தீர்வு முயற்சி குறித்த சந்தேகங்கள் எழுந்திருந்தன. இந்த சந்தேகங்கள் தொடர்ந்து நிலவுகின்றன.

நாட்டில் நீண்ட காலமாக எரியும் பிரச்சினையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு பிரச்சினைக்கு  மிகக் குறுகிய ஒரு கால இடைவெளியில், அரசியல் தீர்வு காண முடியுமா என்ற கேள்வியும் எழுத்தான் செய்திருந்தது. இருப்பினும் நிறைவேற்றதிகாரத்தைக் கொண்டுள்ள ஒரு ஜனாதிபதி தற்துணிவின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றதோர் எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்தது.

உண்மையில் இலங்கை ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் என்பது மிகுந்த சிறப்புடையது. மிகுந்த அதிகார பலம் மேலோங்கிய தன்மையைக் கொண்டது. அத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்தி இதய சுத்தியுடன் முயற்சிகளை மேற்கொண்டால் நிச்சயம் ஓர் அரசியல் தீர்வைக் காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.

தீவிரப் போக்கைக் கொண்ட சிங்கள பௌத்த தேசியவாதிகள் இந்த அரசியல் தீர்வு முயற்சிக்கு ஆதரவளிக்கமாட்டார்கள், நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். எதிர்த்துச் செயற்படுவார்கள் என்பது உண்மை. ஆயினும் சமயோசித அரசியல் அணுகு முறையின் மூலம் அவர்களது ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலும் சந்தேகமில்லை.

பேரின போக்குடைய தலைவர்களது வழிகாட்டலிலேயே சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு எதிர்மறையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கி;ன்றார்கள். அவர்களிலும் பலர் பன்மைத்தன்மையுடன் கூடிய அரசியல் நிலைப்பாடு நாட்டில் நிலவ வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர்களும் இருக்கின்றனர் என்பதை மறந்துவிட முடியாது. இவர்களை ஒருங்கிணைத்து, அரசியல் தீர்வுக்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெற முடியும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால் குறுகிய ஒரு காலப்பகுதிக்குள் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடானது, அரசியல் உள்நோக்கத்தையே கொண்டிருக்கின்றது. அரசியல் தீர்வொன்றின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிசெய்ய வேண்டும் என்ற உயரிய தேசாபிமான நோக்கமும் போக்கும் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும்கூட, உண்மையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி தனது தற்போதைய ஜனாதிபதி பதவியை நாட்டு மக்களின் ஆணையுடன் நிரந்தரமாக்கிக் கொள்வதில் நாட்டம் கொண்டவராகவே அவர் காணப்படுகின்றார். அவர் தனது இந்த அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு சிறுபான்மை இன மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான ஒரு துருப்பாகவே அரசியல் தீர்வு என்ற விடயத்தைக் கையில் எடுத்திருக்கின்றார்.

அரசியல் தீர்வு என்னும்போது எத்தகைய அரசியல் தீர்வைக் காண விழைகின்றார் என்பதற்குரிய திடமான அறிகுறிகளையோ அல்லது வேலைத்திட்டத்தையோ அவர் வெளிப்படுத்தவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அரசியல் தீர்வுக்கான இணக்கப்பாட்டையே அவர் பெற்றிருந்தார். அத்துடன் தமிழ்த்தரப்புடனான பேச்சுக்களில் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்குரிய முன்னாயத்த கள நிலைமையை உருவாக்குவது பற்றியும், அதற்குரிய நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்துவது பற்றியும் அவர் கவனம் செலுத்தவில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு அவசியமான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி முன்வைத்த விடயங்களிலும் அவர் நாட்டம் காட்டவில்லை. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும்போது படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என உறுதியளித்த அவர் வெறும் 108 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவை வெளியிட்டாரேயொழிய அந்த உத்தரவு நிறைவேற்றப்படுவது குறித்து அவர் கரிசனை கொள்ளவில்லை.

அரசியல் தீர்வுக்கு உரமூட்டத்தக்கதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஐந்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அளித்த வாக்குறுதியும் காற்றில் கரைந்து போனதே தவிர நடைமுறையில் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயத்தின்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியதையடுத்து, ஜனவரி 26 ஆம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அல்லது அதனை முற்றாக நீக்கிவிட வேண்டும் என்று தெரிவித்திருப்பதுடன், அதனை எதிர்ப்பவர்கள் நாடாளுமன்றத்தின் ஊடாக அதனைச் செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் அதனை முழுமையாகத் தன்னால் நிறைவேற்ற முடியும் என்று சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

இலங்கை என்ற நாட்டின் தேசப்பற்றுள்ள தலைவராயின், 13 ஆவது திருத்தச்சட்டத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தல் பற்றிய அவசியத்தை எடுத்துக்கூறி அதனை எதிர்த்த சிங்களத் தலைவர்களின் கருத்துக்களுக்குத் தகுந்த விளக்கமளித்திருக்க முடியும். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. இந்தியா வலியுறுத்தியுள்ளதையடுத்து, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் மீண்டும் குறிப்பிட்டிருக்கின்றாரே தவிர, அதனைச் செயற்படுத்துவதற்கான வழிமுறை குறித்து அவர் தெரிவிக்கவில்லை. அதேவேளை, அதனை நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவும் அவரால் முடியவில்லை.

முன்னதாக பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார். இதனால் தமிழ்த்தரப்பின் நம்பிக்கையிழந்த அரசியல் உளநிலைச் சூழலிலேயே 26 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஒப்பேறி முடிந்தன.

மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறித்து கவனம் செலுத்தாத இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்குபற்றுவதில் எந்தவிதப் பயனுமில்லை எனக்கூறி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் புறக்கணித்திருந்தார். அதேபோன்று உள்ளுராட்சித் தேர்தலை கூட்டமைப்பு கட்சிகள் ரீதியாகத் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தையடுத்து, கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள வெடிப்பையடுத்து புதிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ள டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளும் இந்த சர்வகட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டன.

இவ்வாறு அரசியல் தீர்வு ,குறித்த ரணில் விக்கிரமசிங்கவின் அனைத்துக் கட்சிக் கூட்டமும் தமிழ்த்தரப்புடனான பேச்சுக்களும் நம்பிக்கையீனம் காரணமாக பிளவுபட்ட நிலையிலேயே நடந்து முடிந்திருக்கின்றது. இதனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நரித்தந்திரப் போக்கிலான 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சி பிசுபிசுத்த நிலையிலேயே தொங்கிக் கொண்டிருக்கின்றது.

அதேவேளை, தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறுகின்ற போக்கு மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் யாழ்ப்பாணத்திலும் சுதந்திர தினத்தைக் கொண்டாடிவிட்டோம் என்ற நற்பெயரைச் சம்பாதிப்பதற்கான சுதந்திரக் கொண்டாட்டத்திற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இது எத்தகைய அரசியல் நிலைமைகளை உருவாக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

Exit mobile version