தமிழகம் திருச்சி சிறப்பு முகாமில் 30 இலங்கை தமிழர்கள் விடுதலை வேண்டி தற்கொலை முயற்சி-ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில்

திருச்சி முகாமில் இருக்கும் 30 இலங்கை தமிழர்கள் விடுதலை வேண்டி தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில், விசா காலம் முடிந்தும், அனுமதியின்றி இந்தியாவில் நுழைந்த மற்றும் வெளிநாட்டுககு தப்ப முயன்றவர்கள்  உட்பட பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட, இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட, 150 வெளிநாட்டினர் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் குற்றம் நிரூபிக்கப்படாமல் இங்கு பல ஆண்டுகளாக தாங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த மே மாதம்,  20ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தங்களது கோரிக்கைகளை அரசுக்கு உணர்த்தும் விதமாக, உண்ணாவிரதப் போராட்டம், தீப்பந்தம் ஏந்தி போராட்டம், பாடைகட்டி போராட்டம் என பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர். தற்போது காத்திருப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆனால்,  இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு, திருச்சி மாவட்ட அதிகாரிகளும், தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் இதுவரை செவி சாய்க்கவில்லை. இதனால் விரக்தியடைந்த நிரூபன், நிஷாந்தன், ராஜன், கயன் ஆகிய, 4 பேர் இன்று மரத்தின் மீது ஏறி குதிக்க போவதாக தற்கொலைப் போராட்டம் நடத்தினர்.

30 பேர் தூக்க மாத்திரைகளை அருந்தி தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினர். யாரும் எதிர்பாராதவிதமாக, உமா ரமணன் (44) என்பவர் தனக்குத்தானே மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடல் கருகிய நிலையில் அவரை மீட்ட முகாம்வாசிகள், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உமா ரமணன் சிசிச்சை பெற்று வருகிறார். விடுதலை வேண்டி, இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil News