திருகோணமலை- முத்துநகர் கிராமத்தை அபகரிக்கும் முயற்சியில் துறைமுக அதிகாரசபை

முத்துநகர் கிராமத்தை அபகரிக்கும் முயற்சிமுத்துநகர் கிராமத்தை அபகரிக்கும் முயற்சி: திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஒரு மீள் குடியேற்றக் கிராமமே முத்துநகர். இக் கிராமமானது கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் இருந்து சுமார் 3கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.

1962ஆம் ஆண்டு தொடக்கம் அப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்த நிலையில் 1990 களில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம் பெயர்ந்து மீண்டும் 2006ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டு,  184 குடும்பங்கள் தற்போது வரை வாழ்ந்து வருகிறார்கள்.

பல வருடங்கள் குடியேற்ற திட்டம் ஊடாக வாழ்ந்து வந்தாலும், குடியிருப்பு காணிகளை இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தம் என துறைமுக அதிகாரசபையினர் அப்பகுதியை அபகரிப்பு செய்ய முற்படுகின்றனர் என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த கிராமத்தில் விவசாய காணி 300 ஏக்கரும் குடியேற்ற காணி 200 ஏக்கர் என அண்ணளவாக காணப்பட்டாலும், குறித்த காணிகள் தங்களுக்கு உரித்தான காணி என துறைமுக அதிகாரசபையினர் மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

மேலும் அப் பகுதியில் துறைமுக அதிகாரசபையினர் எல்லைக்கல் இட்டும், பதாகைகள் இட்டும் காட்சிப்படுத்தியுள்ளனர். கடந்த வாரம் ஐவர் பயிர்ச் செய்கைக்காக  காணியை சுத்தம் செய்த நிலையில், காடு வெட்டியக் குற்றச்சாட்டில்   அவர்களை காவல்துறையினர்  கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்  மழையை நம்பிய விவசாய செய்கை, சேனை பயிர் செய்கை போன்ற தோட்டச் செய்கையிலும் ஈடுபடும் தங்களின் காணிகளை திருகோணமலை துறை முக அதிகார சபையினர் அபகரிக்கும் நோக்கில் அடிக்கடி  தமக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் அக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021