அனல் மின் நிலையம் மீது தாக்குதல்- இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்

உக்ரைனில் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி மின் விநியோகத்தை தடைப்படச் செய்த ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகின்றது.

இந்நிலையில் வடமேற்கு உக்ரைனில் இசியம் எனும் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதையடுத்து உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள அனல் மின் நிலையத்தைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. இது குறித்து உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், ரஷ்ய இராணுவ வீரர்கள் பின்வாங்கிய நிலையில் விரக்தியில் கார்கிவ் அனல் மின் நிலையத்தைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அதுபோல் நீரேற்று நிலையங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுள்ளது. உக்ரைன் தனது கிராமங்களையும் நகரங்களையும் மீட்டுவருவதைப் பொறுக்க முடியாமல் முக்கிய கட்டமைப்புகளை நோக்கி ஏவுகணைகளை அனுப்புகிறது. எங்கள் மக்கள் மின்சாரமும், தண்ணீரும் இல்லாமல் தவிக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு என்று கூறியுள்ளார்.