அதி மானுடர்கள்

அதி மானுடர்கள் – சபரி

1987 யூலை 05ஆம் நாள் இரவு.

யாழ். நெல்லியடி மகா வித்தியாலயத்திலிருந்து பெரிய இடி முழக்கம் போன்றதொரு பேரதிர்வின் ஒலி கிளம்பிய போது, சுற்றிவர அமைந்திருந்த பல மைல்களுக்கு அப்பாலான பிரதேசங்களும் ஒரு தடவை அதிர்ந்து, குலுங்கி பின்னர் சம நிலைக்கு வந்தன. ஈழ விடுதலைப் போராட்டத்தின் புதிய சகாப்தம் ஒன்று உருவாகி விட்டதைக் கட்டியம் கூறிய அந்தப் பேரதிர்வின் சக்திமிக்க அதிர்வலைகள் உலக நாடுகளில் எல்லாம் தனது முத்திரையைப் பதித்த போது ஈடிணையற்ற உயிராயுதங்களின் பரிணாம வளர்ச்சியை வரலாறு பெருமையுடன் தன்னில் பதிவு செய்து கொண்டது.

maxresdefault அதி மானுடர்கள்

உலகத் தமிழர் மத்தியிலும், உலக நாடுகளிலும் ‘மில்லர்’ என்ற மந்திர வார்த்தை தற்கொடையின் குறியீடாக வலம்வரத் தொடங்கியது.

1987 மே 26 யாழ்.வடமராட்சி மண்ணில் ‘ஒபரேஷன் லிபரேஷன்’ என்ற பெயரிட்டு, தமிழ் மக்கள் மீதான பாரிய இனப்படுகொலை நடவடிக்கையில் சிங்கள இராணுவம் இறங்கியது. தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டு இன்னும் பலர் இராணுவத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டனர். ஏறத்தாழ பத்துத் தினங்கள் யூன் 04ஆம் நாள் வரை நீடித்த இந்த இன அழிப்பு வெற்றியின் இறுமாப்பில் மிதந்து கொண்டிருந்த சிங்கள அரசின் தலையில் யூலை 05ஆம் நாள் நெல்லியடி இராணுவ முகாம் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொடைத் தாக்குதல் சம்மட்டியாய் விழுந்து நிலை குலைய வைத்தது.

தனியொருவன் பெரும்படையணியாய் எழுந்து நிகழ்த்தி முடித்த அதிசயம் கண்டு, உலகத் தமிழினம் மட்டுமல்ல, உலக நாடுகள் அத்தனையுமே புருவம் உயர்த்தித் தமிழனுடைய வீரத்தை வியப்போடு நோக்கின.

இது புறநானூற்று வீரத்தின் புதிய பரிமாணமா என்றெண்ணும் வகையில், இந்தத் தற்கொடையாளர்களின் வீர சாதனைகள் தொடர்ந்து தமிழ் மண்ணில் அரங்கேறத் தொடங்கின.

தனது மண், தனது மக்கள், மண்ணுக்கான விடுதலை என்பவற்றால் தன்னைச் சுற்றிப் போட்டு வைத்திருந்த இறுக்கமான எல்லையைத் தாண்டி, குடும்பம், உறவுகள், இளமையின் இனிய வசந்தம் என்பவற்றில் ஒன்றைக்கூட ஒரு நொடிப் பொழுதிலேனும் உள்ளே வர அனுமதிக்காத கர்ம வீரர்களாக எங்கள் தேசத்தின் தற்கொடை வீரர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

ஒவ்வொரு தற்கொடையாளியினுடைய வாழ்க்கையும் மண் விடுதலைக்கான கடுந்தவம்.

lrg 634 kilinochi07 அதி மானுடர்கள்

ஆவி பிரியப் போகின்ற அடுத்த விநாடி பற்றிய அச்சம் இல்லாதவர்கள் அவர்கள். கிட்ட நெருங்க முடியாத இலக்கு என்றாலும், தொட்டு அணைத்து விடும் துணிச்சல் காரியான அந்தப் பெண், ஊமையாய் உறங்குகின்ற ஒரு பெரும் சரித்திரத்துக்கான புதிய அத்தியாய ஒன்றின் நாயகியாக இலக்கு நோக்கிய பயணத்தில் அடியெடுத்து நடக்கிறாள்.

தூரமும், நேரமும் நீண்டதொரு நடைபயணம் அது. தான் பிறந்த மண்ணாகிய வன்னிப் பெருநிலத்தின் சேமமடுவில் கால் பதித்த போது,

அமானுஷ்யமாய்க் கிடக்கிறது ஊர்.

நெஞ்சுக்குள் வலி.

“அம்மா…” நான் ஓடியாடி மண் அளைஞ்சு விளையாடிய இடம்…”

நடந்து கொண்டிருந்தவள் ஒரு இடம் வந்த போது அப்படியே நிற்கிறாள்.

“என்ன யாழினி, ஏதாவது பிரச்சினையா?” கூட வந்த தோழர் தோழியர் கேட்கிறார்கள்.

“இது தான் எங்கடை வீடு”

அவள் காட்டிய வீடு பாழடைந்து வெறிச்சோடிக் கிடந்தது.

அந்த வீடு மட்டுமல்ல… சேமமடுப் பிரதேசத்தின் பல வீடுகள் இப்படித்தான் தங்களுக்குரியவர்களைக் காணாமல் தவித்துக் கிடந்தன.

என்ன நினைத்துக் கொண்டாளோ?

சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுக் கடதாசியும், பேனாவும் எடுத்து அவசரம் அவசரமாக எழுதினாள்.

“என்னருமை அம்மா.. நீங்களெல்லாம் திரும்பவும் எங்கடை வீடுகளிலை வந்து சந்தோசமாய் இருக்கப் போகும் நாள் தூரத்திலில்லை. அந்த நாள் வரும் போது வேப்ப மரத்துக் குருவிகள் என்னைத் தேடும்… நான் எங்கே என்று அவை உங்களிடம் கேட்கும்.

“அவள்… என்னருமை மகள்… தன் உயிர்ப் பூவைக் கிள்ளியெடுத்து மண்ணின் விடுதலைக்கு விலையாய்க் கொடுத்தாள்” என்ற சேதியை அதுகளிட்டைச் சொல்லி விடுங்கோ”

பெத்தவளுக்கு அவள்- அந்தத் தற்கொடை வீராங்கனை எழுதிய கடைசி வரிகள் இவை.

வீட்டுக்குள் ஓடி, திகதி கிழிக்கப்படாமல் இருந்த நாட்காட்டியில் கடிதத்தைச் சொருகி வைத்து விட்டு வந்தவளைத் தோழர்கள் வியப்போடு பார்த்தார்கள்.

தமிழின அழிப்பின் தொடர்ச்சியாய் 1997 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு என்னும் இராணுவ நடவடிக்கை வன்னி மண்ணில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நேரம் அது.

அன்று 10.06.1997

அதோ – அவள் நிலையெடுத்து விட்டாள்.

தமிழ் நிலத்தின் முதல் தரைத் தற்கொடையாளிப் பெண்ணாய்… எதிரியைத் துவம்சம் செய்யும் மகிஷாசுரமர்த்தினியாய் யாழினி!

கூடவே இரண்டு தற்கொடைத் தோழர்களும். பயங்கர வெடியதிர்வைத் தொடர்ந்து தீயின் செந்நிற நாக்கேன் வான் நோக்கிப் பாய்கின்றன.

சிங்கள தேசத்தின் ஆன்மா கலங்க…

சிங்களப் படைகளும் கூடவே அவர்களுடைய இறுமாப்பும் சிதைந்து தவிடுபொடியாகின.

தசைத் துண்டுகளாகிப் போன மூன்று தற்கொடைக் கண்மணிகளையும் தமிழனுடைய வீரத்தின் வேர்கள் என்ற பெருமையோடு சேமமடு மண் தன்னுடன் சேர்த்துக் கொண்டது.

2 அதி மானுடர்கள்

எல்லாள மன்னன் கோலோச்சிய மண்ணில், நூற்றாண்டுகளின் சுழற்சியில் சிங்களத்தின் வான்படைத்தளம் அமைந்திருக்கிறது.

22.10.2007

அதே மண்ணில் அணி வகுத்து நிற்கிறது 21 தற்கொடை வீரர்களைக் கொண்ட ஒரு படையணி

எல்லாளன் படை!

உடல்களில் கட்டப்பட்ட வெடிமருந்துப் பொதிகள்..

கைகளில் ஏந்திய ஆயுதங்கள்… நெஞ்சங்களில் உறுதியும், வீரமும்..

நள்ளிரவு தாண்டிய நேரம்.

“இருபத்தொரு பேர் போறியள்.. சாதிப்பியள்…”

“நிச்சயம் சாதிப்பமண்ணை!”

அத்தனை வீரர்களின் மனங்களிலும் எதிரொலி செய்த அந்த மந்திரக் குரல் ஏற்படுத்திய எழுச்சியில் எல்லாளன் படை எழுதிக் கொண்டிருந்த வீர காவியத்தைப் பெருமையுடன் வரலாறு தன்னில் பதிவு செய்து கொண்டது. இந்த வரலாற்று சாதனையின் உச்சமாய், எரிந்து கொண்டிருந்த எதிரியின் விமானப்படைத் தளத்தில் தமிழருடைய தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது!

உலகமே வியந்து பார்த்த அந்தப் பெரு வெற்றியின் நாயகர்களாய் 21 தற்கொடை மைந்தர்கள் அந்தப் பூமியில் வித்தாகிப் போனார்கள்.

download 2 அதி மானுடர்கள்

இந்த வியத்தகு போர் வடிவத்தின் நெகிழ்ச்சி நிரம்பிய உச்சக்கட்ட பரிமாணமாய், சொந்த மண்ணைப் பிரிந்து சென்று அஞ்ஞாதவாசம் மேற்கொண்டு, சாதனை புரிந்தவர்களும் பலர். அவசியம் கருதி, ஊரும் பேரும் சொல்லாமலேயே கண்மூடிப் போன மனிதகுல திலகங்கள் இவர்கள் என்றால் மிகையல்ல.

இந்த அதி மானுடர்களின் பெயர் சொல்லிக் கைகூப்பித் தமிழன் வணங்கும் ஒரு தருணம் – தாயக விடுதலை –

தமிழனுக்கு எப்போது கைகூடப் போகிறது?

கைகூட வேண்டும். கைகூடும்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 அதி மானுடர்கள்