டியோகோ கார்சியாவில் தற்கொலைக்கு முயன்ற இலங்கையர்களுக்கு மூன்றாம் நாடொன்றில் புகலிடம்

டியோகோ கார்சியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் ருவண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் இருவருக்கு மூன்றாவது நாடொன்றில் புகலிடம் பெறுவதற்கு பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் மூன்றாம் நாடொன்றில் புகலிடம் பெறுவதற்கான அனுமதியை பிரிட்டன் வழங்கியுள்ளமைக்கான ஆவணங்களை பார்வையிட்டுள்ளதாக நியுஹியுமானேட்டேரியன் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் துன்புறுத்தல் குறித்து அச்சமடைந்துள்ளதால் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பபோவதில்லை என அந்த ஆவணத்தில் பிரிட்டன் தெரிவித்துள்ளது. எனினும் மீள்குடியேற்றப்படும் நாடு எது என பிரிட்டன் தெரிவிக்கவில்லை.

ஹம்சிகா கிருஸ்ணமூர்த்தி 22 அஜித்சஜித்குமார் 21 என்ற இரண்டு இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கே பிரிட்டன் மூன்றாம் உலக நாட்டில் புகலிடம் பெறுவதற்கான  அனுமதியை வழங்கியுள்ளது.

2021 இல் டியாகோ கார்சியா தீவிற்கு சென்ற இரண்டு 89 புகலிடக்கோரிக்கையாளர்களில் இவர்களும் காணப்பட்டனர் , இவர்கள்  சென்ற படகு சேதமடைந்த நிலையில் பிரிட்டிஸ் படையினர் அவர்களை காப்பாற்றியிருந்தனர்.

இதன் பின்னர் 2022 இல் டியாகோ கார்சியாவில் தீவில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்தது. இவர்களில் பலர் பின்னர் பிரிட்டனிடமிருந்து நிதிஉதவியை பெற்று இலங்கை திரும்பினர்,அல்லது படகுகளில் பிரான்சின் ரீயூனியன் தீவிற்கு சென்றனர்.

எஞ்சியுள்ள ஏனைய 68 புகலிடக்கோரிக்கையாளர்களும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான தொடர்புகளிற்காக தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக பாலியல் ரீதியில் வன்முறைகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

இதுவரை சுமார் 50 புகலிடக்கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை பிரிட்டனின் உள்துறை அமைச்சு ஆராய்ந்துள்ளது. இதில் அனேகமானவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அவர்களிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவுவிரைவில் வெளியாகும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.