Home செய்திகள் இலங்கை தமிழர்களுக்கு உதவி, தமிழக மீனவர்கள் விடுதலை விவகாரம்: இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர்...

இலங்கை தமிழர்களுக்கு உதவி, தமிழக மீனவர்கள் விடுதலை விவகாரம்: இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

தமிழக மீனவர்கள் விடுதலை

தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஒன்றிய அரசு அனுமதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ள இந்தத் தருணத்தில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் சிக்கித் தவிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும், தோட்டங்களில் பணிபுரிந்து வருவோருக்கும் பொருட்களை அனுப்புவதற்கு தமிழ்நாடு அரசு உறுதியோடு உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “இலங்கையில் நிலவும் இத்தகைய மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தர வேண்டும்” என்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், கடந்த 23-3-2022ம் திகதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களை விரைவில் விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை உறுதி செய்திடுமாறு முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

Exit mobile version