கைது,காணாமல் ஆக்கல் போன்றவை தமிழ் இனத்தின் அவலத்தை வெளிப்படுத்துகின்றது-எஸ்.சிறிதரன்

தமிழ் இனத்தின் அவலத்தை

இலங்கையில், அடிக்கடி இடம்பெறும் கைதுகள், காணாமல் ஆக்கல் போன்ற சம்பவங்கள் அனைத்தும் தமிழ் இனத்தின் அவலத்தையும் அதிகார வர்க்கத்தினரின் எதேச்சிகாரத் தனத்தையும் வெளிப்படுத்துகின்றது என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் போராளியான, சுண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உத்தியோகத்தராக பணிபுரிந்த மாணிக்கம் ஜெயக்குமார் கடந்த 2021.09.28 ஆம் திகதி காணாற்போனார், அதன்பின்னர் நாவற்குழியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊடகவியலாளர்கள் அவரின் உடலிலே இரத்தக் காயங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். ஆதவன் என்று அழைக்கப்படும் முன்னாள் போராளியான இவர் காலையிலே நடைப் பயிற்சிக்காகச் சென்றபோதே காணமற்போயுள்ளார். தினமும் உடற்பயிற்சியுடன், நடைப்பயிற்சியும், நீச்சலும் தெரிந்த இவர் கொஞ்சத் தண்ணீர் உள்ள கவனிப்பாரற்று இருந்த கிணற்றில் சடலமாக எப்படி இருக்க முடியும் என்ற சந்தேகம் மக்கள் இடையே காணப்படுகின்றது.

ஆகவே, இவரின் உயிரிழப்புக்கான நீதி விசாரணையை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல, திருகோணமலை மாவட்டத்தில் சண்முகராசா விதுலக்ஷன் கடந்த 2021.07.02 ஆம் திகதி காலை திருகோணமலை சிரேஷ்ட அத்தியட்சகரின் பணிமனைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் சென்றபோது, அவருடைய முகநூலில் நாட்டுக்கு ஒவ்வாத விடயங்கள் மற்றும் விடுதலைப்புலிகள் சார்ந்த விடயங்களை  எழுதியதாகக் கூறப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான இந்த இளைஞன் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஆகின்றது. அவரது தந்தை சண்முகராஜா அழுதகண்களோடு அவருடைய மகனைப் பார்க்க முடியாது நிலையில் அலைந்து திரிகின்றார். இது மிகப்பெரும் கவலைக்குரிய சம்பவமாக அந்தக் குடும்பத்திலே காணப்படுகின்றது.

அதேபால், திருகோணமலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளியான 39 வயதுடைய மனோகரதாஷ் சுபாஷ் எனும் குடும்பஸ்தர் கடந்த 2021.09.28 ஆம் திகதி காலை 6 மணியளவில் அவரது வீட்டில் வைத்து துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

தம்மை உப்புவெளி காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை என அடையாளப்படுத்தி சிவில் உடை அணிந்த ஆயுதம் தாங்கிய நபர்கள் அவரது வீட்டை சுற்றிவளைத்தோடு, அவரை கூட்டிச் சென்றதை தடுத்த குடும்பத்தவர்களையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி  அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்பின்னர், அவரின் தாயாரும் மனைவியும் உடனடியாக உப்புவெளி காவல் நிலையத்திற்குச் சென்று விவரம் தெரிவித்த போது, நாம் யாரையும் அவ்வாறு அழைத்துவரவில்லை என்று  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் நடந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும், இன்றுவரை அவருடைய நிலை என்ன, எங்கு இருக்கிறார் என்பது பற்றியோ எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தனது குடும்பத்துடன் இணைந்து தமது இயல்புவாழ்வை ஆரம்பித்துள்ள முன்னாள் போராளிகளின் பாதுகாப்புக்கு இந்த நாட்டில் எந்தவித உத்தரவாதமும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது.

ஆகவே, எந்தக் குற்றச்சாட்டுகளும் இன்றி அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளியான மனோகரதாஷ் சுபாஷ் விடுவிப்பதற்கு உரிய தரப்புக்கள் உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


ilakku-weekly-epaper-150-october-03-2021