Home செய்திகள் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதியில் இராணுவம், பிக்குகள் முற்றுகை: நடப்பது என்ன?

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதியில் இராணுவம், பிக்குகள் முற்றுகை: நடப்பது என்ன?

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதி
தமிழர்களின் பழம்பெரும் ஆலயமாகக் கருதப்படும் வவுனியா – நெடுங்கேணி – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கிலான விடயங்கள் அதீத இராணுவப் பிரசன்னத்தின் மத்தியில் இரகசியமாக முன்னெடுக்கப் படுகின்றன என்று அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேசமயம், நேற்று வியாழக்கிழமை மூன்று ஆடம்பர வாகனங்களில் அந்தப் பகுதிக்கு முக்கியஸ்தர்கள் சிலர் சென்று திரும்பியிருந்தனர். எனினும், இவ்வாறு சென்ற முக்கியஸ்தர்கள் யாரென உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நேற்றுக் காலை ஆலயப் பகுதிக்கு பௌத்த தேரர்கள் அமரும் கதிரைகள் மற்றும் முக்கிய பொருட்கள் இராணுவத்தினரால் உழவியந்திரங்களில் எடுத்துச் செல்லப்பட்டன. இதனால், வெடுக்குநாறி மலை சிவன் ஆலயத்தை பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.

மேலும், அந்தப் பகுதியை உரிமை கொண்டாடி வரும் தொல்பொருள் திணைக்களத்தால் சிவன் ஆலயத்தின் அடையாளங்கள், மக்கள் அங்கு வைத்து வழிபட்ட சூலம் மற்றும் கல்விக்கிரகங்கள் என்பன அங்கிருந்து காணாமல் செய்யப்பட்டுள்ளன. சில விக்கிரகங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அந்தப் பகுதியினர் குற்றஞ்சாட்டினர்.

மேலும், இது விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக தலையிட்டு தமிழரின் பூர்வீக வழிபாட்டிடமான ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை மீட்டு தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெடுக்குநாறி சிவன் ஆலயம் கி.மு. 2ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கூறப்படுகின்றது. 300மீற்றர் உயர இந்த குன்றுப் பகுதியின் அடிவாரத்தில் கேணி, தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் என்பன காணப்படுகின்றன. மலையின் உச்சியில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவலிங்கம், சூலம் என்பன அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களம் இந்தப் பகுதியை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. அத்துடன், அங்கு வழிபாடாற்றவோ, பூசைகளை நடத்தவோ முடியாதவாறு தடைவிதித்தது. இது பௌத்த மயமாக்கும் நடவடிக்கை என்று கூறி தமிழ் மக்கள் பெரும் எதிர்ப்பு வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஆலயத்தில் பூசை வழிபாடுகளை தொடர அனுமதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version