யாழில் களமிறக்கப்பட்ட இராணுவம்; போதைப் பொருளை கட்டுப்படுத்தவா? தமிழ் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கா?-அகிலன்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் இராணுவம் களமிறக்கப்பட்டிருக்கின்றது. அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதென்ற பெயரில்தான் இராணுவத்தினா் மீண்டும் வீதிகளில் இறக்கப்பட்டிருக்கின்றாா்கள். ஏற்கனவே வடபகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவம் மீண்டும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக வீதிச்சோதனைச் சாவடிகளைப் போட்டு மக்களைக் குடைவதற்கு ஆரம்பித்திருக்கின்றாா்கள்.

அவசரம், அவசரமாக சோதனைச் சாவடிகள் அங்காங்கே மீண்டும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து பஸ்களில் படையினா் ஏறி பயணம் செய்பவா்களை சோதனையிடுகின்றாா்கள். குடாநாட்டில் படையினரின் இந்த திடீா் நடவடிக்கை மக்களை அச்சமடையவைத்துள்ளது. இராணுவத்தின் உண்மையான நோக்கம் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதா அல்லது மக்களைக் கட்டுப்படுத்துவதா என்ற கேள்வி எழுகின்றது.

போதைப் பொருட்களின் பாவனையும் விநியோகமும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவருகின்றது என்பது புதிய செய்தியல்ல. அண்மைக்காலத்தில் இது தொடா்பில் தொடா்ச்சியாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றது. கடந்த மூன்று மாத காலத்தில் பத்துக்கும் அதிகமான இளைஞா்கள் போதைப் பொருள் பாவனை காரணமாக மரணித்திருக்கின்றாா்கள் என்பது அதிா்ச்சியான ஒரு செய்தி. இருநுாறுக்கும் அதிகமானவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்கள். மேலும் சிலா் புனா்வாழ்வு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றாா்கள்.

போதைப்பொருள் பாவனையாளா்களைப் புனா்வாழ்வுக்குட்படுத்துவதற்கான நிலையங்கள் எதுவும் யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தினால் நடத்தப்படவில்லை. தொண்டா் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படுகின்ற ஒரேயொரு நிறுவனம்தான் யாழ்ப்பாணத்தில் உள்ளது. அதனால்,  பாதிக்கப்படுகின்ற இளைஞா்களை புனா்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டுமானால், அவா்களை பொலநறுவை மாவட்டத்திலுள்ள கந்தக்காடு முகாமுக்குத்தான் அனுப்ப வேண்டும்.

இலங்கையின் போதைப் பொருள் விநியோக மையமாக யாழ்ப்பாணம் உள்ளது என கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்திருந்த நீதி அமைச்சா் விஜயதாச ராஜபக்ஷவும் தெரிவித்திருந்தாா். இதற்குக் காரணம் இருக்கத்தான் செய்கின்றது. இந்தியாவிலிருந்தே பெருமளவுக்கு போதைப் பொருட்கள் கடல் வழியாக கடத்தப்படுகின்றன. யாழ்ப்பாணம் இந்தியக் கரைக்கு அண்மையில் இருப்பதால், போதைப் பொருட்கள் யாழ்ப்பாணத்துக்குக் கடத்திவரப்பட்டே இலங்கையின் ஏனைய பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. அதனைவிட, யாழ்ப்பாணத்திலும் இளைய தலைமுறையை இலக்கு வைத்து கணிசமான தொகை விநியோகிக்கப்படுகின்றது.

கேரள கஞ்சாதான் யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் இந்தியாவிலிருந்து பெருமளவுக்குக் கொண்டுவரப்பட்டு தென்பகுதிக்கும் கொண்டுசெல்லப்படுகின்றது. கொக்கேய்ன், ஐஸ், ஹெரோயின் போன்றன தென்பகுதியிலிருந்தே யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. இவையும் பல சோதனைச் சாவடிகளைத் தாண்டித்தான் யாழ்ப்பாணத்துக்குள் வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருட்களின் பாவனையால் இளைஞா்கள் பெருமளவுக்குப் பாதிக்கப்படுவது தொடா்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையடுத்தே இப்போது, அதனைத் தடுப்பதற்காக எனக்கூறி இராணுவம் களமிறக்கப்பட்டிருக்கின்றது. புதிதாக வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து பஸ்களை இராணுவத்தினா் சோதனையிடுகின்றாா்கள்.

வடபகுதியைப் பொறுத்தவரையில் அதன் கரையோரப் பகுதிகளில் 90 முதல் 100 வரையிலான கடற்படை முகாம்கள் அல்லது கண்காணிப்புச் சாவடிகள் உள்ளன. அதனைவிட கடற்பாதுகாப்புக்காகவென கடற்படைக் கப்பல்களும், அதிவேக விசைப்படகுகளும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் உள்ளன. கரையோரங்களில் பொலிஸ் காவலரண்களும் இதற்கு மேலதிகமாக உள்ளன. இவை அனைத்தையும் தாண்டி வரும் போதைப் பொருட்களை கண்டுபிடிப்பதற்கு குடாநாட்டுக்குள் வீதிச் சோதனைக்கு இராணுவம் களமிறக்கப்பட்டிருப்பதாக சொல்வது நியாயப்படுத்தக்கூடியதல்ல என்பது தமிழ்க் கட்சிகளின் கருத்து.

அத்துமீறும் இந்திய மீனவா்கள் கடற்படையால் கைது செய்யப்படுகின்றாா்கள். இதற்காக  24 மணி நேரமும் கடல் கண்ணாணிக்கப்படுகின்றது. அதாவது, கடற்படை ரோந்துக்கப்பல்கள் தயாராகவுள்ளன. ஆனால், போதைப் பொருட்களைக் கடத்திக்கொண்டுவருபவா்கள் யாரும் கைது செய்யப்பட்டதாக இதுவரையில் தகவல் இல்லை.

யாழ்ப்பாணத்தில் முனைப்பாகச் செயற்படக்கூடிய இளைஞா்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதை இலக்காகக்கொண்டே திட்டமிட்ட முறையில் போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தமிழ்த் தரப்புக்களிலிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. கடலோரத்தில் கடுமையான பாதுகாப்பு வேலிகள் இருந்தும் போதைப் பொருட்கள் உள்ளே வருவது தடுக்கப்படவில்லை. போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவா்கள் சிலா் கைதாகின்ற போதிலும், அதனை கொண்டுவருபவா்கள் விநியோகிப்பவா்கள் என யாரும் இதுவரையில் கைதாகவில்லை. இதன்பின்னணியிலுள்ள வலைப்பின்னலை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வுத் தரப்பினரால் முடியவில்லை.

இது போன்ற தகவல்கள் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டவா்கள் இதனுடன் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டுள்ளாா்கள் என்ச சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே உள்ளது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் புலனாய்வுப் பிரிவினரும் இங்கு தீவிரமாகச் செயற்பட்டுவருகின்றாா்கள். பெருமளவு இளைஞா்கள் போதைப்பொருட்களைப் பாவிக்கும் நிலையில் அவா்கள் மூலமாகவே அதன் விநியோகச் சங்கிலியை கண்டுபிடிக்க முடியும். ஆனால், அவ்வாறு எதுவும் இடம்பெறாமலிருப்பதும் மக்களின் சந்தேகத்தை அதிகப்படுத்துகின்றது.

இந்தப் பின்னணியில் வடமாகாண ஆளுநா் ஜீவன் தியாகராஜாவின் கோரிக்கையையடுத்தே இராணுவம் வீதிகளில் களமிறக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளுடன் பாா்க்கும் போது வடபகுதியில்தான் அதிகளவு இராணுவச் சோதனைச் சாவடிகளும், சோதனைகளும் நடைபெறுகின்றது. இப்போது அதற்கு மேலதிகமாக புதிய சோதனைச் சாவடிகள் அவசரமாக அமைக்கப்படுகின்றன.

அதேவேளையில், இவ்விடயம் தொடா்பில் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

“மாவீரர் நினைவேந்தல் வாரம் நெருங்கி வரும் சூழ்நிலையில், போதைப் பொருள் தடுப்பு என்ற பெயரில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதான வீதிகளில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் நடவடிக்கை, நீறுபூத்த நெருப்பாக நீடிக்கும் தமிழ் மக்களின் நீண்டகால துயர நினைவுகளை உரசிப் பார்க்கும் ஓர் உளவியல் துன்புறுத்தலாக மட்டுமே அமையும்” என்று அவா் கூறியிருக்கின்றாா்.

கடற்படையினரின் கண்காணிப்பு, பொலிஸாரின் சோதனைகள் என்பனவற்றைத் தாண்டி குடாநாட்டுக்குள் வரும் போதைப் பொருட்களைத் தடுப்பதற்கு புதிதாக அமைக்கப்படும் இராணுவச் சோதனைச் சாவடிகள் உதவும் என்று யாழ்ப்பாண மக்கள் நம்புவதாகத் தெரியவில்லை. கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கூட போதைப் பொருள் பாவனை அதிகரித்துவரும் நிலை காணப்படுகின்றது. அதற்காக அந்தப் பகுதிகளில் இராணுவச் சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கோ, வீதிச் சோதனைகளை முன்னெடுப்பதற்கோ அரசாங்கம் தயாராகவில்லை.

வடக்கு, கிழக்கில் புலனாய்வுப் பிரிவினா் கணிசமாகவுள்ள நிலையில் வீதிச்சோதனைகள் எதற்கு எனக் கேள்வி எழுப்பியிருக்கும் ஈ.பி.ஆா்.எல்.எப். அமைப்பின் தலைவா் சுரேஷ் பிறேமச்சந்திரன், போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கின்றாா். இதனைவிட மற்றொரு தகவலையும் அவா் தெரிவித்தாா். “கடற்படைக்கென தனியான புலனாய்வுப் பிரிவு, இராணுவத்துக்கென தனியான புலனாய்வுப் பிரிவு, பொலிஸாருக்கென தனியான புலனாய்வுப் பிரிவு என்பன உள்ளன. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு என பல புலனாய்வுப் பிரிவுகள் வடக்கு கிழக்கில் நிறைந்துள்ளன. இந்த நிலையில், போதைப் பொருட்கள் இங்கு வருகின்றதென்றால் இந்த புலனாய்வுப் பிரிவுகள் என்ன செய்கின்றன என அவா் எழுப்பியிருக்கும் கேள்வி நியாயமானதாகவே உள்ளது.

போதைப் பொருள் கடத்தல்காரா்கள் தனியாகச் செயற்படுகின்றாா்களா அல்லது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கென களமிறக்கப்பட்டுள்ளவா்களின் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றாா்களா என்ற கேள்வியையும் சுரேஷ் பிறேமச்சந்தின் எழுப்பியிருக்கின்றாா். தமிழ் மக்கள் அனைவரிடமும் உள்ள கேள்வியும் இதுதான்!

யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் அரசாங்கம் போதைப் பொருட்களைத் தடுக்க இராணுவத்தை களமிறக்கியிருக்கின்றது. அதாவது, தமிழ் மக்கள் மீது மற்றொரு உளவியல் போரை அரசாங்கம் தொடுக்கின்றது. போதைப் பொருள் பாவனைளை சாட்டாக வைத்துக்கொண்டு வடக்கில் தமிழ் மக்களின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதும், அடக்குமுறையைத் தீவிரப்படுத்துவதும்தான் அரசின் நோக்கமாக இருக்கும் என்பதுதான் மக்களின் கருத்து.

அதிலும் குறிப்பாக மாவீரா் வாரம் வரவுள்ள பின்னணியில் இராணுவத்தைக் களமிறக்கி வீதிச்சோதனைச் சாவடிகளை அமைப்பதன்மூலம் போதைப் பொருளை கட்டுப்படுத்த அரசு முயல்கிறதா அல்லது, தமிழ் மக்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முற்படுகின்றதா என்ற கேள்வி நியாயமானதாகவே உள்ளது.