Home செய்திகள் கொரோனாவுக்கு மத்தியில் இராணுவத்தின் வெறியாட்டம்; கஜேந்திரன் எம்.பி. சீற்றம்

கொரோனாவுக்கு மத்தியில் இராணுவத்தின் வெறியாட்டம்; கஜேந்திரன் எம்.பி. சீற்றம்

Selvarasa Kajenthiran 720x380 1 கொரோனாவுக்கு மத்தியில் இராணுவத்தின் வெறியாட்டம்; கஜேந்திரன் எம்.பி. சீற்றம்கொரோனாவின் வெறியாட்டம் ஒரு புறம் நடக்கும் போது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வெறியாட்டமும் நடக்கின்றது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குற்றஞ்சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,

“கொரோனா வெறியாட்டம் பயங்கரமாக இடம் பெறுகின்றது. மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். அதேவேளை, வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள பொன்னாலை என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணியளவில் இராணுவத்தினர் நுழைந்து ஆண், பெண், வயது வேறுபாடின்றி கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இது ஓர் இராணுவ வெறியாட்டம். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேவேளை, கொரோனா உக்கிரமடைந்துள்ள நிலையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளைப் பிணைகளிலாவது விடுவிக்குமாறு கோருகின்றோம். கொரோனாத் தொற்று காரணமாக அவர்களை உறவினர்கள் சென்று பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களை அவர்களின் சொந்த மாவட்ட சிறைகளுக்கு மாற்றவும் மறுப்புத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கைதிகளும் அவர்களின் உறவினர்களும் உள ரீதியாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்குப் பிணை வழங்குங்கள்.

அடுத்ததாக, இலங்கைக்கு ஒட்சிசன் கொண்டு வருவதற்காக கப்பல் ஒன்று இந்தியா சென்றுள்ளது எனக் கூறப்படுகின்றது. இதேவேளை, யாழ். வைத்தியசாலையில் ஒட்சிசன் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.

கொரோனா விடயத்தில் இராணுவத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சுகாதாரத் துறையினருக்குக் கொடுங்கள். கொரோனாத் தடுப்பு செயலணியைத் தொடர்ந்தும் இராணுவம் வைத்திருக்குமேயானால் கொரோனாவை ஒருபோதுமே ஒழிக்க முடியாது. அமைச்சர்களை மாற்றினாலும் பயன் ஏற்படாது

இதேவேளை, கொரோனா உடல்களை எரிக்க யாழ்ப்பாணத்தில் ஓர் இடமே உள்ளது. அங்கும் ஒரு நாளைக்கு 3 உடல்களை மட்டுமே எரிக்க முடியும். அதனை 4 ஆக்க முயற்சிக்கப்படுகின்றது. இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் 10 உடல்கள் வரை தேங்கியுள்ளன . அவற்றை எரிக்க வவுனியாவுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இது மிகவும் சிரமமானது. மத ரீதியான சடங்குகளைச் செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

எனவே, அந்தந்த மாவட்டங்களிலேயே கொரோனா உடல்களை எரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அத்துடன் கொரோனா உடல்களை விறகுகள் மூலமும் எரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்” – என்றார்.

Exit mobile version