தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் – க.வி.விக்னேஸ்வரன்

பயங்கரவாதத்தால் பாதிப்புற்றவர்களை நினைந்து அஞ்சலிக்கும்  ஐ.நா.வின் அனைத்துலகத் தினம் 21.08.21  

இத் தினத்தில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் உயிரிழந்த, உடல் வலுவிழந்த,ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள்
தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் – க.வி.விக்னேஸ்வரன்

உடைமைகளையும், வாழ்வாதரங்களையும் இழந்த ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர்களை நினைந்து நாமும் அஞ்சலிக்கின்றோம். இந்நாள் தொடர்பாக நீதியரசரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் செவ்வி இடம்பெறுகிறது.

 

கேள்வி?

International day of remembrance and tribute to the victims of terrorism நாள் 21.08.21 ஆகும். இந்த நாளில் இலங்கை அரச பயங்கரவாதத்தின் பாதிப்பு தொடர்பில் கூறமுடியுமா?

பதில்!
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுறுத்துவதற்கும், அவர்களுக்குப் புகழாரம் சூட்டுவதற்குமான சர்வதேச தினமே நீங்கள் குறிப்பிடும் தினமான ஆகஸ்ட் 21ஆம் திகதி. ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டம் 2017ஆம் ஆண்டில் இந்தத் தினத்தைப் பிரகடனப்படுத்தினர். அதன் நோக்கம் பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்டவர்களையும், அதிலிருந்து தப்பி உயிர் வாழ்பவர்களையும் நினைவுறுத்தி அவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதே.

இக் காலங்களில் இலங்கை அரசாங்கம், தாமும் தம் சிங்கள மக்களுமே பயங்கர வாதத்திற்கு ஆளாகிய துர்ப்பாக்கியசாலிகள் என்று எடுத்துக் காட்ட விளைவதுண்டு. ஆனால் உண்மையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை அரசாங்கமும், அரச படைகளும் கொலை செய்தல், கண்மூடித்தனமாக வெடிகுண்டுகளையும், எறிகுண்டுகளையும் அப்பாவி மக்கள் மீது எறிதல், சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை இரகசியமாக இயற்றல், கற்பழிப்பு, சித்திரவதை, மக்களை காணாமல் ஆக்குதல், தன்னிச்சையாக மக்களைத் தடுத்து வைத்தல், தமது வாழ்விடங்களில் நீண்டகாலம் குடியிருந்தவர்களைப் பலாத்காரமாக அகற்றுதல், பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தல் போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக உலகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

அம்னெஸ்டி இன்டநஷனல் (Amnesty International) என்ற சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு நிறுவனம் இலங்கையில் அரச பயங்கரவாதமானது அதன் சட்டங்கள், ஆட்சி நெறி, சமூக நெறி ஆகியவற்றினூடாக நிறுவன ரீதியாக உள்ளடக்கப்பட்டிருக்கின்றன என்று The Trauma of Terrorism Sharing Knowledge and Shared Care என்ற அவர்களின் கை நூலில் கூறியுள்ளது. ஆகவே பயங்கரவாதம் நிறுவனப்படுத்தப்பட்டுள்ள ஒரு நாட்டில் தான் நாங்கள் வாழுகின்றோம்.

தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள்1956இல் ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டு வந்ததே ஒரு நியாயமற்ற செயல். வடகிழக்கு மாகாணங்களில் 85 சத விகிதமானோர் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மொழியைப் பேசி வந்த போது, முழு நாட்டுக்குமே ‘சிங்களம் மட்டும்‘ என்று சட்டம் கொண்டு வந்தது தான் அரச பயங்கரவாதத்தின் முதல் வெளிப்படையான நடவடிக்கை. அதற்கு சனநாயக முறைப்படி மக்கள் சத்தியாகிரக ரீதியாக எதிர்ப்புத் தெரியப்படுத்தப் போக, அவர்களுள் பலரை தலையில் அடித்து இரத்தம் கொட்டச் செய்து, சிலரை ஃபேரை  குளத்தினுள் தூக்கி வீசியது அடுத்த அரச பயங்கரவாதச் செயல். 1958இல் பொய்யான ஒரு கதையை தமிழர்களுக்கு எதிராகப் பரப்பி, ஏற்கனவே தயார் நிலையில் இருந்த தமது குண்டர்களைக் கொண்டு, தமிழர்கள் வாழ்ந்த வீடுகளைத் தீக்கிரையாக்கியதும், அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றதும், தமிழ்ப் பெண்களைக் கற்பழித்ததும், தமிழர் வீடுகளில் கொள்ளையடித்ததும் அரச பயங்கரவாதத்தின் அடுத்த கட்டம்.

கேர்ணல் உடுகமவை 1961இல், தமிழ் மக்களின் சத்தியாகிரகத்தை முறியடிக்க யாழ். நோக்கி அனுப்பி, சொல்லொணாத் துயரங்களை தமிழ் மக்கள் மீது ஏவி விட்டமை அரச பயங்கரவாதத்தின் அடுத்த கட்டம்.

இதே காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் அம் மாகாணத்தில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களிடமிருந்து தேர்வாளர்களைத் தேர்ந்தெடுக்காமல், தெற்கில் இருந்து சிங்கள சிறைக் கைதிகளைக் கொண்டு வந்து பாரம்பரிய தமிழ் நிலங்களில் குடியிருத்தியமை அரச பயங்கரவாதத்தின் இன்னொரு முகம்.

1961இற்குப் பிறகு பல திட்டமிடப்பட்ட கலகங்களையும், கலவரங்களையும் அரச பயங்கரவாதம் தமிழர்களுக்கு எதிராக முடுக்கி விட்டிருந்தது. அதனால் தமிழ் மக்களின் பாதிப்பு சொல்ல முடியாத அளவுக்கு ஏற்பட்டது. கல்வியில் சமநிலைப்படுத்தல் என்ற Standardioation  கொள்கையை நடைமுறைப்படுத்தி, பல தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழையாமல் செய்ததும் இந்த காலகட்டத்திலேயே ஆகும்.

1983இல் நடந்த கலவரம் பற்றி உலகமே அறிந்து கொண்டது. முன்னைய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் குறித்த கலவரம் நடந்த போது மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்தார். இலங்கையில் நடந்த கலவரங்கள் தொலைக்காட்சிகளில் அந்த நாட்டில் காண்பிக்கப்பட்டன. கொழும்பு 1ல் ப்ரிஸ்டல் ஸ்ரீட் என்ற தெருவில் குண்டர்கள் தமிழ்க் கடைகளுக்குத் தீ வைக்கையில் ஆயுதமேந்திய பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை திரு.சமரக்கோன் அங்கிருந்து கண்ணுற்றார். அப்பொழுது இலங்கையராகத் தான் பிறந்ததில் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு நிலை தனக்கு ஏற்பட்டதென்றும், ‘இலங்கை‘ என்ற சொல் அந்த காலகட்டத்தில் தூய்மையற்ற ஒரு சொல்லாக உலகம் முழுவதும் கணிக்கப்பட்டது என்றும் என்னிடம் கூறினார்.

தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்

அதன் பின்னர் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகள் அல்ல. அரச பயங்கரவாதத்தின் பொருட்டு தற்பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள்.

ஆகவே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுறுத்துவதற்கும், அவர்களுக்குப் புகழாரம் சூட்டுவதற்குமான சர்வதேச தினம் மற்றவற்றுள் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாண தமிழ் மக்களின் நிலையை அறிந்தே பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சர்வதேச தினம். அத்தினத்தில் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை நாம் நினைவு கூர்ந்து, பாதிக்கப்பட்ட எமது மக்களை நினைவு கூர்ந்து, இன்றும் அரச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி உயிருடன் இருக்கும் எம் மக்களைப் புகழாரம் சூட்டி நினைவில் கொள்வோமாக!

கேள்வி?

இலங்கையில் அரசாங்கங்கள் அரசபயங்கரவாதம் மூலம் 1956 முதல் இன்று வரை ஈழத்தமிழ் மக்களிடை இனங் காணக்கூடிய அச்சத்தின் மூலம் அவர்களின் அரசியல் பணிவைப் பெறமுயல்கிறது. இந்த நடைமுறையின் உண்மையை இன்னும் தமிழர்களால் உலகுக்குத் தெளிவாக்கப்பட முடியா திருப்பதேன்?

பதில்!

உலகம் இலங்கையில் நடப்பதை அறியாமல் இல்லை. பல நாடுகளில் அந் நாட்டு அரசாங்கங்களும் ஜனநாயக முறைப்படி தாம் நடந்து கொள்ளாததால் தம் மீது இலங்கை சார்பாக யாரேனும் குற்றஞ் சாட்டுவார்களோ என்ற பயத்தில் அறிந்தும் அறியாத மாதிரி நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நிகழ்காலத்தில் ஐக்கிய நாடுகள் எம் நிலைபற்றி அறிந்து சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. தமிழ் இளைஞர்களின் போராட்டம்தான் இலங்கையின் அரச பயங்கரவாதத்தை உலகம் அறிய வைத்தது.

கேள்வி?

இலங்கை அரச பயங்கரவாதத்தால் பாதிப்புற்ற தமிழர்களுக்கு உலகம் அஞ்சலி செலுத்த மறுப்பதேன்?

பதில்!

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக ஆயுதமெடுத்த தமிழ் இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி உலகம் பூராகவும் அந்தத் தகவலை இலங்கை அரசாங்கம் பரவ விட்டதால் பாதிப்புற்றவர்கள் உண்மையில் பயங்கர வாதிகளே என்று உலகோரில் பலர் நினைத்து தமிழ் மக்களின் உண்மை நிலையையும், பாதிப்பையும் அவர்கள் உணர முடியாமல் இருந்து வருகின்றது. ஆனால் நிலைமை மாறிக் கொண்டே இருக்கின்றது. இலங்கையின் அரச பயங்கர வாதத்தின் உண்மை சொரூபத்தை சர்வதேச மக்கள் உணருங் காலம் வெகு தூரத்தில் இல்லை.