Home ஆய்வுகள் அரசியல் கைதிகளின் தேவைகளை அறிவாரில்லை | அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகளின் தேவைகளை அறிவாரில்லை | அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகளின் தேவை

அரசியல் கைதிகளின் தேவைகளை அறிவாரில்லை

அரசியல் கைதிகளின் பல பெற்றோர் வயது முதிர்ந்த நிலையிலேயே உள்ளனர். இவர்களின் தேவைகளை அறிவாரில்லை. இவை பேரினவாத சமூக சித்திரவதையையே காட்டி நிற்கின்றதென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims),   பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால்   துரநெ 26ம் நாள்   நினைவுகூறப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கையில் கடந்த  கடந்த காலங்களில் இருந்து தற்போது வரையில்  “சித்திரவதையால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு எந்தளவிற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது?” என்ற கேள்விக்கு பதில் அளித்த அருட்தந்தை மா.சத்திவேல்,

“சிங்கள பௌத்த பேரினவாதம் அதன் அரச பயங்கரவாத கூலிகளின் துணை கொண்டு தமிழர்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ள அரசியல், பொருளாதார, சமூக எதிர்ப்பு நடவடிக்கையினால் தமிழர்கள் தொடர் சித்திரவதையை அனுபவித்து வருகின்றனர்.

நீண்டகால யுத்த கால பகுதியில் யுத்தத்தின் கெடுபிடிகளால் தமிழர் சமூகம் திறந்த வெளி சித்திரவதை முகாமில் வைக்கப்பட்டிருந்தது. யுத்தம் முடிவுற்றதாக கூறப்பட்டு ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னரும் தமிழர்கள் இன்றும் சித்திரவதை மன நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு புரையோடிப் போயுள்ள அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி இருப்பதோடு தீர்வை நோக்கிய எத்தகைய நகர்வும் இன்றி இருப்பதும் பெரும் மன உளைச்சலே. அத்தோடு இராணுவம் கையகப்படுத்திய காணிகளை யுத்தம் முடிவுற்றதாக கூறப்படும் தசாப்தத்தை கடந்த பின்னரும் கையளிக்காமலிருப்பதும் புதிதாக காணிகளை கையகப்படுத்த முயற்சிப்பதும் நாளாந்தம் நடந்து கொண்டே இருக்கின்றது. இதுவும் சித்திரவதையே.

அதுமட்டுமல்ல சிங்கள- பௌத்த மயமாக்குதலுக்காக வடகிழக்கில் தொல்பொருளியல் இடங்களை அடையாளப்படுத்தும் ஜனாதிபதி செயலணி மற்றும் சுயாதீன தன்மை இழந்த தொல்பொருளியல் திணைக்களம் என்பன சட்டத்தை அவமதித்து வடகிழக்கில் தங்களுடைய செயற்பாடுகளுக்கு சட்ட வரையறை தேவை இல்லை என நினைத்து செயற்படுவதனை தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது மட்டுமல்ல உளரீதியாக பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர். இது பொது வெளி சித்திரவதை என்றே கூறலாம்.

மிக அண்மையில் முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன் கோவில் பிரதேசத்தில் பௌத்த பிக்குகளும், தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளும், படையினரும் நடந்துகொண்ட விதம் இதற்கு நல்ல உதாரணமாகும். இத்தகைய செயற்பாடுகளால் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் உளரீதியாக சித்திரவதையை அனுபவிக்கின்றனர்.

யுத்த காலப்பகுதியில் சொத்துக்களை இழந்தோர், உடமைகளை இழந்தோர் இன்றும் வறுமையின் பிடிக்குள் இருந்து மீளமுடியாதுள்ளனர். உயிர்களை பறிகொடுத்த குடும்பங்கள், ஒரே குடும்பத்தில் பல உயிர்களை பலி கொடுத்தவர்கள், குண்டுவீச்சு அதற்கு மத்தியில் உடல் சிதறி இறந்ததை நேரில் பார்த்த உறவுகள் அந் நிலையிலிருந்து இன்றும் வெளிவராதிருப்பதும் சித்திரவதையின் மௌன வடிவம் எனலாம்.

அதுமட்டுமல்ல முடிவுறாது தொடர்கின்றது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டம். ஆட்சியாளர்களின் ஏமாற்று நாடகம் சர்வதேச அமைப்புகளின் பாராமுகம், கால இழுத்தடிப்பு உறவுகளின் தாய்மாரை துயரத்தில் தள்ளியுள்ளது. உறவுகளை தேடி தேடியே பலர் கண்ணீரையும், வேதனையையும் சொந்தமாக்கி கொண்டுள்ளதோடு இவர்களில் பலர் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி அதனால் நூற்றுக்கு அதிகமானோர் இறப்பை சந்தித்துள்ளனர் .இது இழப்பு என்பதை விட சித்திரவதை கொலை என்றே கூறலாம்.

இவற்றோடு அரசியல் கைதிகளின் உறவுகள் தங்கள் உறவுகள் எப்போது வீட்டுக்கு திரும்புவர் என அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். பிள்ளைகளுக்காக ஏங்கும் தாய்மார்கள் ,தகப்பனுக்கு காத்திருக்கும் பிள்ளைகள், கணவனை எதிர்பார்த்திருக்கும் மனைவி, குடும்ப சுமையோடு பிள்ளைகளின் எதிர் காலம் தெரியாதிருக்கும் தாய்மார் வலிகளை மட்டுமே சுமந்து நிற்கின்றனர். அரசியல் கைதிகளின் பல பெற்றோர் வயது முதிர்ந்த நிலையிலேயே உள்ளனர். இவர்களின் தேவைகளை அறிவாரில்லை. இவையெல்லாம் பேரினவாத சமூக சித்திரவதையே.

இவர்களின் வாழ்வு தன்மையை ஒத்ததாகவே யுத்த காலப்பகுதியில் உடல்ரீதியாக பாதிப்புக்குள்ளானவர்கள், உடல் உறுப்புகளை இழந்தோர், அவர்களில் தங்கி வாழ்வோர் நிலையும் உள்ளது. இவையெல்லாம் சித்திரவதையின் வெளிதெரியாமுகம்.

மேலும் சமூக மயமாக்கப்பட்டதாகக் கூறப்படும் முன்னாள் போராளிகளும் திறந்தவெளி சிறைக்குள்ளே மீண்டும் தள்ளப்பட்ட நிலையில் வாழ்வை தொடர்கின்றனர். படையினரின் உறவை பேண வேண்டும். இதற்கு பலவந்தமாக அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இல்லையெனில் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. சுதந்திரமாக செயல்பட நினைப்பவர்கள் புலிகளின் மீளுருவாக்கம் என சிறையில் தள்ளப்பட்டவர்களுமுண்டு. இதனையும் சித்திரவதைக்குள்ளேயே அடக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல விசாரணை காலகட்டங்களில் பல்வேறு வகையிலான சித்திரவதைகளை அனுபவித்து அவற்றை வெளியில் சொல்ல முடியாத முன்னாள் போராளிகளும் கைதிகளும் உள்ளனர். இவர்கள் அனுபவிக்கும் உடல் உபாதைகளும் பாதிப்பும் ஆற்றுப்படுத்த முடியாதவைகளே.

சமூகத்தில் பல்வேறு மட்டத்தில் உள்ளன ஈழத்தமிழர்கள் உள ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். பலர் இந்நிலையிலிருந்து மீண்டவர்களாக தோற்றம் கூறினாலும் பாதிக்கப்பட்ட உள்ளத்தோடேயே வாழ்நாளை கழிக்கின்றனர் என்பதே உண்மை.

இதனின்று ஒட்டுமொத்த சம்பத்தை விழிப்பு நிலைக்கும் வாழ்வு நிலைக்கும் கொண்டுவர அரசியல் மற்றும் சமூக அமைப்புகளும் சமூக நல நோக்கம் கொண்ட சமயங்களும் தமது நிலையிருந்து வெளி வந்து கூட்டுத் தன்மையோடு செயற்பட கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்.அதாவது தமது இருப்புக்கான செயற்பாட்டினின்று விலகி ஈழத்தமிழர்கள் வாழ்வு பாதுகாப்பிற்கான கூட்டு இயக்கமே இன்றைய காலத்தின் தேவை.

இவ்விடத்தில் புலம்பெயர் சமூகம் பாரிய பங்களிப்பு உள்ளது என அறிவிக்கும் இனப்படுகொலைக்கும் முகம்கொடுத்த சமூகம் புதிய நிகழ்ச்சி வரைபடத்திற்கு வந்து ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டிய காலகட்டம் இது இல்லையெனில் உடல் உள பாதிப்பும் சித்திரவதைக்குள்ளான நோய் சமூகமாகவே வாழ வேண்டிய நிலை ஏற்படும். தற்போதைய சூழ்நிலையில் கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார் என்பததே?” என்றார்.

Exit mobile version